நீச்சல் - படிப்படியாக பயிற்சி மேற்கொள்ளவது எப்படி?
நீச்சல் நம் உடல் நலம் காப்பதில் தனிப்பங்கு வகிக்கிறது. தண்ணீரில் 'கரண்ட்' எனும் நீரோட்டம் இல்லாத நீர்நிலைகளில், ஆரம்ப பயிற்சியை மேற்கொள்ள எளிதாக இருக்கும். கிராமங்களில் உள்ள குளங்கள் ஆரம்ப நீச்சலுக்கு ஏற்றவையாகும். முதன்முறையாக நீச்சல் பழகுபவர்கள் நீச்சல் அறிந்தவர்களின் கைகால்கள் அசைவை கவனித்து, அதுபோல பயிற்சி செய்து வரவேண்டும். ஆழமான பகுதிக்கு சென்றுவிடாமல், இடுப்பளவு நீரில், முதலில் நீச்சல் பழகவேண்டும்.
நீச்சல் பழகும்போது, தலை, நீருக்கு மேலேயே இருக்கவேண்டும். காதுகளில் தண்ணீர் புகாதவண்ணம் கவனமாக இருந்து, இரு கைகளையும் படகுகளின் துடுப்புகள் போல நன்கு அசைக்க, உடலின் இயக்கம் முன்னோக்கி செல்லும். நாம் தரையில் நடக்க கால்கள் உதவுவதைப்போல, நீரில் நீந்த கைகள் முக்கியமாகின்றன.
நீச்சல் அறிந்தவர்கள், தங்கள் கைகளில், நீச்சல் பழகுபவர்களை இருத்திக்கொண்டு, கைகால்களை அசைக்க வைப்பார்கள். இதுபோல, சிறிதுநேரம் பயிற்சி பெற்றதும், சட்டென தாங்கிய கைகளை விட்டுவிடுவர். பயிற்சியாளரின் கைகளின் துணையில் நீரில் கை கால்களை அசைத்தவர்கள், பிடிமானம் விலகியதும், அனிச்சை செயலாக, தங்கள் கைகால்களை வேகமாக அசைப்பார்கள்.
ஆயினும் சிலர் பதட்டத்தில், தண்ணீரைக் குடித்து விடுவார்கள். இதை கவனித்துக்கொண்டிருக்கும் பயிற்சியாளர்கள், மீண்டும் வந்து தாங்கிக் கொள்வார்கள். இதுபோல, சில நாட்கள் பயிற்சிகள் மேற்கொள்ள, விரைவில் நீச்சல் பழகி விடும். ஆயினும், நன்கு தேர்ச்சி அடையும் வரை, குறிப்பிட்ட தூரத்திலேயே நீந்தி வருவது நலமாகும். ஆழமான பகுதிகளுக்கு சென்று நீச்சல் பழக விருப்பம் வரும்போது, தக்க துணையுடன் செல்வதே நன்மைதரும்.
குளங்கள் போன்ற நீரோட்டம் இல்லாத நீர்நிலைகளில் நீச்சல் பழகியபிறகு, ஆற்றில் நீச்சல் அடிக்க விருப்பம் கொள்வது இயற்கைதான். ஆயினும் அந்த நீரோட்டத்தை அறிந்தபின், நீச்சல் அடிப்பது நலமாகும். ஆற்றில் உள்ள நீர்ப்போக்கின் திசை அறிந்து, அந்த திசையில் நீச்சல் அடிக்க வேண்டும். அப்போது, இலகுவாக, நீரில் முன்னேற முடியும். நீரோட்டம் இருக்கும் ஆறுகளில், விரைவாக அதிக தொலைவு உடனே சென்றுவிட முடியும். அங்கிருந்து, நாம் புறப்பட்ட இடத்திற்கு திரும்ப வருவதற்கு, எதிர்நீச்சல் எனும், நீரோட்டத்தின் திசைக்கு மாறான நீச்சல் அடிக்க வேண்டும். இது சிரமமாக இருக்கும்.
நீச்சல் பயிற்சி - ஏற்படும் நன்மைகள்:
நீச்சல் மலச்சிக்கல் பாதிப்புகளைப் போக்கும். செரிமான ஆற்றலை அதிகரித்து, பசியைத் தூண்டும். குளித்தவுடன், வெகுவாக பசிக்க ஆரம்பிக்கும். பருத்தவயிறு கொண்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் நீச்சல், சிறந்த பயிற்சியாகும், இதன்மூலம், உடலிலுள்ள நச்சுக்கொழுப்புகள் கரைந்து, உடல் எடை குறைகிறது.
உடலின் உள் உறுப்புகள் மற்றும் தசைகளுக்கு சிறந்த பயிற்சி. கால்மூட்டுக்களும் தசைகளும் இலகுவாகி இயங்குவதன் மூலம், மூட்டுவலி மற்றும் கழுத்துவலி, இடுப்பு வலி போன்ற பாதிப்புகள் விலகுகின்றன.
மனக்குழப்பம், கவலை, மனஅழுத்தம் போன்ற மனநல பாதிப்புகள் நீங்கி, மனம் ஒருமையாகி, சிந்தனைத் திறன் மேம்பட்டு, மனதில் புத்துணர்வு தோன்றும். இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இதயம், நுரையீரல் மற்றும் அனைத்து உடல் உறுப்புகளையும் வலுவாக்குகிறது.
நீச்சல் சர்க்கரை அளவை இரத்தத்தில் குறைத்து, உடல் நலம் காக்கிறது.
தொடை, கைகளில் உள்ள தளர்வுகள் நீங்கி, தசைகள் இறுகி, உடல் வனப்பாகிறது. பெண்களின் பருவமாற்ற நிலையான மெனோபாஸ் காலங்களில், உடல் சோர்வு, மனதில் வெறுப்பு, எதிலும் ஈடுபாடில்லாத நிலை மற்றும் கவலை போன்ற பாதிப்புகளுக்கு சிறந்த தீர்வை, நீச்சல் கொடுக்கும்.
தினமும், சிறிது நேரம், நீச்சல் பழகுவதன் மூலம், மனம் இலேசாகி, கிடைக்கும் புத்துணர்வில், உடலின் இயல்பான மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் ஏற்படும். உடற்பயிற்சி இல்லாமல், கை கால்களை மடித்து உட்கார சிரமப்பட்டவர்கள், நீச்சலின் மூலம், தங்கள் கை கால்கள் இலகுவாகி, மடக்கி நிமிர்த்த முடிவது கண்டு மகிழ்ந்து, உடலில் புது இரத்தம் பாய்ந்தது போன்ற, உற்சாகத்தை அடைவார்கள்.