பொதுவாக பன்றிகளைத் தாக்கும் இன்புளுயன்சா வைரஸ் H1N1 வைரசால் பன்றிகளுக்கு பன்றிக்காய்ச்சல் தொற்று ஏற்படுகிறது. மேலும் பன்றிகளிடமிருந்து மனிதனுக்கும் இந்த வைரஸ் ஆனது கடத்தப்படுகிறது. இந்த வகை வைரஸ் ஆனது காற்றின் மூலம் தொற்றிக் கொள்ளும் பண்புகளை உடையது. முதன்முதலில் இந்த நோயினை உருவாக்கும் வைரஸ் பன்றிகளிடமிருந்து உருவானதால் பன்றிக் காய்ச்சல் என இதற்கு பெயரிடப்பட்டது. 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பன்றிக் காய்ச்சலானது கண்டறியப்பட்டது.
மேலும் அப்போது இக்காய்ச்சலானது பல மில்லியன் மக்களை தாக்கியது. எனவே ஜூன் 2009-ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் (World Health Organisation-WHO) பன்றிக் காய்ச்சல் நோயை பெரும் கொள்ளை நோய் (pandeic) என அறிவித்தது. 2015 ஆம் ஆண்டு, இந்தியாவில் 31,000 மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டு அதில், 1,900 பேர் இறந்து போனதாக தகவல்கள் உள்ளன.
பன்றி காய்ச்சல் பரவும் முறை:
பன்றிக் காய்ச்சலை ஏற்படுத்தும் இன்புளுயன்சா வைரஸ் H1N1 என்ற இவ்வகை வைரஸ்கள் காற்றின் மூலம் பரவுகின்றன. அதேபோல் ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு எளிதாக பரவுகின்றன. அதாவது இந்நோயால் பாதிக்கப்பட்டவர் தும்பும் போதும், இரும்பும் போதும் வெளியேறும் நோய்க்கிருமி கலந்த திவலைகள் காற்றில் பரவுகின்றன. இதனால் மிக அருகில் உள்ளவர்களிடம் எளிதாக பரவுகின்றன.
உடல் அறிகுறிகள்.
கடுமையான காய்ச்சல்
சளி & இருமல்
மூக்கிலிருந்து திரவம் ஒழுகுதல்
களைப்பு
தொண்டை வலி & தொண்டை கரகரப்பு
உடலில் அரிப்பு ஏற்படுதல்
தலைவலி
மயக்கம் & வாந்தி
உடல் வலி அல்லது வேதனை
கடுமையான வயிற்றுப்போக்கு
சீரற்ற மூச்சு விடுதல்
குளிர் நடுக்கம்
ஆகியவை இந்நோயோடு தொடர்புடைய அறிகுறிகள் ஆகும்.
நோயினை தடுத்தல் மற்றும் தவிர்த்தல்.
பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவரின் தொடர்பிலிருந்து விலகியிருத்தல்.
நீர் மற்றும் பழச்சாறுகளை பருக வேண்டும். இதன் மூலம் உடலில் நீர்ச்சத்தின் அளவு குறைவதை தடுக்கலாம்.
அதிகமான ஓய்வின் மூலம் நமது உடலே இந்நோயை எதிர்த்து போராட முடியும். அதேபோல் மருத்துவர்களின் ஆலோசனைகளும், மருந்து மாத்திரைகளும் முக்கியம்.
அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
கண், மூக்கு, வாய், போன்ற பகுதிகளை அடிக்கடி தொடுதல் கூடாது.
சுத்தமான கைகுட்டைகளை பயன்படுத்த வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்கள் பொதுவெளிக்கு செல்ல நேரும் போது முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.
சத்தான(காய்கறிகள், கீரைகள், பழங்கள்) உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பாதிக்கப்பட்டவர் மருத்துவரின் ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும்.
இரும்பும் போதும் தும்பும் போதும் கைகுட்டைகளை பயன்படுத்த வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்கள் குணமாகும் வரை தனிமைப்படுத்தப்பட்டு அதற்கான சிகிச்சைகளும், ஆலோசனைகளும் வழங்க வேண்டும்.
சுத்தமான நீரைப் (தண்ணீரை கொதிக்க வைத்து ஆறியப் பின்) பருக வேண்டும்.
உடலின் ஆரோக்கியமே... மனதின் ஆரோக்கியம்... நாம் எவ்வளவுக்கு எவ்வளவு நம் உடலை சீராக பேணுகிறோமோ... அவ்வளவுக்கு அவ்வளவு நாம் இதுபோன்ற நோய் தொற்றும் அபாயங்களிலிருந்து நம் உடலை நாமே பாதுகாத்துக் கொள்ள முடியும்..!
முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.