.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
பறவை காய்ச்சல் மோசமான வைரஸ் தொற்று என்கின்றனர் டாக்டர்கள். பறவை காய்ச்சல் 1997-ல் ஹாங்காங்கில் கண்டறியப்பட்டது. பின்னர் 2004-ல் ஜப்பான், தாய்லாந்து, வியட்நாம், தென்கொரியா, இந்தோனேசியா, சீனாவிலும், 2005-ல் கிரீஸ் மற்றும் குவைத்திலும் பரவியது. 2006-ல் வடக்கு சைப்ரஸ், இத்தாலி உள்பட இந்தியாவிற்குள்ளும் நுழைந்தது. பறவைக் காய்ச்சல், ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா என்றும் அழைக்கப்படும் ஒரு வைரஸ் நோயாகும்.
'பறவை காய்ச்சல் பேரழிவு' என்று பல்வேறு நாடுகளும் அறிவித்துள்ளன. இதற்கு காரணம் இந்த வைரஸ் நோய்க்கு இதுவரை தடுப்பூசி இல்லை. பறவை காய்ச்சல் என்கிற ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்கள் பொதுவாக மக்களைப் பாதிக்காது என்றாலும், இந்த வைரஸ்களால் மனிதர்கள் பாதிக்கப்படும் சில அரிதான நிகழ்வுகளும் நடந்துள்ளன.
இந்த வைரசை எதிர்த்து போராட மனிதர்களிடம் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி இல்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வைரஸ் மனிதர்களின் சுவாச மண்டலத்தை பாதிக்கும்.
மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சலின் அறிகுறிகள் லேசானது முதல் கடுமையானது வரை இருக்கலாம் அல்லது அறிகுறிகள் இல்லாமல் கூட இருக்கலாம். இருமல், தலைவலி, மூச்சுத் திணறல், தொண்டை வலி, காய்ச்சல் அல்லது குளிர், சோர்வு, மூக்கு ஒழுகுதல் அல்லது அடைத்தல், தசை அல்லது உடல் வலி, கண் சிவத்தல் (கான்ஜுன்க்டிவிடிஸ்) போன்றவை இந்த வைரஸின் பொதுவான அறிகுறிகளாகும்.
பறவை காய்ச்சல் காற்று மற்றும் பறவைகள் மூலம் வேகமாக பரவுகிறது. இது பறவைகள் மட்டுமல்ல, மனிதர்கள் மற்றும் பிற விலங்குகளையும் பாதிக்கலாம். இதில் எச்.5 என்.1 என்ற வகையான வைரஸ் கிருமி தான் கொடிய வகையான வைரஸ் என கூறப்படுகிறது.
இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட பறவைகள் அவற்றின் உமிழ்நீர், சளி மற்றும் மலம் மூலம் ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா வைரஸை வெளியேற்றுகின்றன. ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா வைரஸால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் இரத்தம் அல்லது அவற்றின் பால் உள்ளிட்டவற்றில் வைரஸ் இருக்கலாம். இந்த வைரஸ் ஒரு நபரின் கண்கள், மூக்கு அல்லது வாயில் நுழையும் போது அல்லது உள்ளிழுக்கப்படும் போது நோய் தொற்று மனிதர்களுக்கு பரவலாம். வைரஸ் காற்றில் இருக்கும் போது (துளிகள், சிறிய ஏரோசல் துகள்கள் அல்லது தூசி போன்றவை) மற்றும் கண்களின் சளி சவ்வுகளில் படிந்து அல்லது ஒரு நபர் அதை சுவாசிக்கும்போது அல்லது வைரஸால் மாசுபட்ட ஒன்றைத் தொட்டு அவரது வாய், கண்கள் அல்லது மூக்கைத் தொடும்போது இது நிகழலாம்.
பறவைக் காய்ச்சல் வைரஸ் தொற்று மனிதர்களுக்கு ஏற்பட்டால் அதை ஆய்வக சோதனைகளால் மட்டும் கண்டறிய முடியும். இந்த வைரஸ் தொற்று பொதுவாக நோய்வாய்ப்பட்ட நபரின் மேல் சுவாசக் குழாயிலிருந்து (மூக்கு அல்லது தொண்டை) சளியை சேகரிப்பதன் மூலம் கண்டறியப்படுகிறது.
ஒரு ஆறுதலான தகவல் என்னவென்றால், பறவை காய்ச்சல் உணவு மூலம் பரவும் வைரஸ் அல்ல. எனவே கோழி இறைச்சி உண்பது, இந்த வைரஸ் கிருமியை பரப்பாது என்றும் கூறுகின்றனர்.