குமட்டல் என்பது வாந்தி வரும் எண்ணத்தையும், வயிற்று தொந்தரவையும் குறிக்கும் ஒரு விதமான உணர்வாகும். இது பொதுவாக உடம்பு சரியில்லை என்று உணரும் பொழுது ஏற்படும் ஒரு நிலையாகும். இது நோயின் அறிகுறியாகவும், உணவாலும் அல்லது எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் பக்க விளைவுகள் போன்ற பல காரணங்களாலும் ஏற்படலாம்.
குமட்டல் என்பது:
குமட்டல் அல்லது வாந்தி என்பது பொதுவாக மக்களால் சில நேரங்களில் எதிர்கொள்ளப்படும் ஒரு விஷயமாகும். சிலருக்கு பயணத்தின் பொழுதோ அல்லது அசௌகரியமான உணர்வுகள் ஏற்படும் பொழுதோ வாந்தி, குமட்டல், தலை சுற்றல் போன்றவை ஏற்படும். அமில ரிஃப்ளக்ஸ், எரியும் உணர்வுகள் அல்லது பித்தம் தொடர்பான வாந்தி போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கும். இது பெரும்பாலும் காரமான அல்லது எண்ணெய் உணவுகளால் தூண்டப்படுகிறது. எனவே குமட்டலை சமாளிக்க காரமான மற்றும் நறுமணப் பொருட்களைத் தவிர்க்கலாம். காற்றோட்டமான சூழலில் இருப்பதும், போதுமான ஓய்வு எடுப்பதும் அவசியம்.
குமட்டலுக்கான காரணங்கள்:
ஒருவருக்கு பல காரணங்களால் குமட்டல் ஏற்படலாம்.
கர்ப்ப காலத்தில் ஏற்படும் காலை குமட்டல்
அஜீரணம் அல்லது அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் குமட்டல்
மன அழுத்தத்தால் ஏற்படும் குமட்டல்,
வைரஸ் தொற்றுகள் மற்றும் உணவு மூலம் பரவும் நோய்கள்
ஒற்றைத் தலைவலி
கீமோதெரபி போன்ற மருத்துவ சிகிச்சைகளால் ஏற்படும் குமட்டல்
என்று பல்வேறு வகையான காரணங்களால் குமட்டல், வாந்தி ஏற்படுகிறது. இதற்கு உணவு முறையில் சிறிய மாற்றங்களை செய்தால் எளிதில் குணமடையலாம்.
வீட்டு வைத்தியங்கள்:
a) உணவு பழக்க வழக்கங்கள், மன அழுத்தம், சுற்றுச்சூழல் காரணிகள் போன்ற பல காரணங்களால் ஏற்படும் குமட்டலுக்கு கை வைத்தியங்களே நன்கு கைகொடுக்கும். அதற்கு காரமான உணவுகள், அதிக மசாலா பொருட்கள் மற்றும் அதிக நறுமணம் தரும் பொருட்களை தவிர்க்கலாம்.
b) ஒன்றிரண்டு பச்சை கிராம்பை வாயில் போட்டு மெதுவாக மென்று சாப்பிட குமட்டல் நிற்கும். வாயும் துர்நாற்றம் வீசாமல் நறுமணத்துடன் இருக்கும்.
c) ஒரு சிறு துண்டு இஞ்சியை தோல் சீவி வாயில் போட்டு மென்று கொண்டிருந்தாலும் நல்ல நிவாரணம் கிடைக்கும். இஞ்சி டீ, இஞ்சி சாறுடன் தேனுடன் கலந்து பருகினாலும் நல்ல பலன் கிடைக்கும்.
d) புதினா இலைகளை ஒன்றிரண்டை எடுத்து கையால் கசக்கி முகர்ந்து பார்க்க குமட்டல் நிற்கும். புதினா ரசம் சுவையாக இருப்பதுடன் குமட்டலுக்கும் நல்லது. புதினா தேநீர் அருந்துவது கபம் தொடர்பான குமட்டலை சரி செய்யும்.
e) சீரகத்தை வறுத்துப் பொடி பண்ணி வைத்துக் கொண்டால், தேவைப்படும் சமயம் ஒரு ஸ்பூன் அளவில் எடுத்து கால் கப் தண்ணீரில் கலந்து குடிக்க நல்ல பலன் கிடைக்கும்.
f) பயணம் செய்யும்பொழுது குமட்டல், வாந்தி வருவது போல் இருந்தால் எலுமிச்சம் பழத்தை கையால் கசக்கி முகர்ந்து பார்க்கலாம், சிறிது எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்ளலாம். அதன் நறுமணமும், சாறும் குமட்டலை தணிப்பதில் உதவியாக இருக்கும்.
g) கொத்தமல்லி விதைகள் அதாவது தனியாவை வெறும் வாணலியில் சூடு வர வறுத்து மிக்ஸியில் பொடித்து கொள்ளவும். அடுப்பில் 1 கப் தண்ணீர் வைத்து 1 ஸ்பூன் தனியாப் பொடியை சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி சிறிது எலுமிச்சை சாறு கலந்து பருக குமட்டலை விரைவில் சரி பண்ணி விடும்.
h) வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் சாறு செரிமானத்தைத் தூண்டி குமட்டல் வாந்திகளை குறைக்க உதவும்.
i) ஓமம் அதன் காரமான பண்புகள் காரணமாக அஜீரணம் மற்றும் குமட்டலை போக்க உதவுகிறது.
சுற்றுச்சூழல்:
காற்றோட்டம் இல்லாத அறைகளில் இருப்பதை தவிர்த்து விடுதல் அவசியம். அதிக நறுமணம் கொண்ட வாசனை திரவியங்கள் (சென்ட்), மெழுகுவர்த்திகளை உபயோகிப்பதையும் தவிர்க்கவும். இவை குமட்டலை அதிகமாகத் தூண்டும். எனவே இவற்றைத் தவிர்த்து விடுவது நல்லது. போதுமான அளவு ஓய்வெடுத்து தூக்கமின்மையைத் தவிர்க்கலாம்.
சிகிச்சை எப்போது தேவைப்படும்?
குமட்டல் நீண்ட காலமாக நீடித்தால் அது ஒரு தீவிரமான நோயின் அறிகுறியாக கூட இருக்கலாம். குமட்டலுடன் கடுமையான வயிற்று வலி, காய்ச்சல் அல்லது தலைசுற்றல் போன்ற வேறு அறிகுறிகளும் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)