தமிழில் சீமை காட்டு முள்ளங்கி என்று அழைக்கப்படும் டேன்டலியன் தாவரம் செடி, சூரியகாந்தி குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும். இதன் பூர்வீகம் வட அமெரிக்காவாக இருந்தாலும் தற்போது உலகம் முழுவதுமே இது வளர்கிறது. இதனுடைய பூக்களும், இலைகளும், வேர்ப் பகுதிகளும் மூலிகை மருத்துவமாக பயன்படுகின்றன. டேன்டலியன் டீயின் நன்மைகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்
டேன்டலியன் தேநீர் (Dandelion tea): புதிய பிரகாசமான மஞ்சள் நிற சீமை காட்டு முள்ளங்கி மலர்களை தேர்ந்தெடுத்து அவற்றை உலர்த்தி நன்றாக காய்ந்ததும் அவற்றைப் பயன்படுத்தி தேநீர் தயாரித்து அருந்தலாம். இதனுடைய வேர்களையும் பயன்படுத்தி டீ தயாரித்து அருந்தலாம். வேர்கள் இனிப்பு சுவை கொண்டதாகவும் இலைகள் கசப்புச்சுவை கொண்டதாகவும் இருக்கின்றன. இந்தத் தேநீருடன் தேன் அல்லது எலுமிச்சை சேர்த்து அருந்தலாம்.
டேன்டலியன் தேநீர் (Dandelion tea) பயன்கள்:
டையூரிடிக் பண்புகள்: டேன்டலியன் டீ (Dandelion tea), சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.
இது சிறுநீரகக் கற்கள் அல்லது சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்றுகள் போன்ற சிறுநீர்ப் பாதை பிரச்னைகள் உள்ளவர்களுக்கு மிகுந்த நன்மை பயக்கும்.
செரிமானம்: தேநீர் அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் செரிமானத்தைத் தூண்டும் திறன் காரணமாக வீக்கம், மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்ற செரிமான பிரச்னைகளைத் தீர்க்க உதவும்.
சிறப்பான குடல் இயக்கம்: டேன்டலியன் டீயில் உள்ள அதிக நார்ச்சத்து, குடல் இயக்கத்தைத் தூண்டி, குடலின் சிறப்பான செயல்பாட்டிற்கு உதவி, மலச்சிக்கலைப் போக்குகின்றது.
ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்தது: டேன்டலியன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது ஃப்ரீ ரேடிக்கல்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது. புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கும்.
இரத்த அழுத்தம் குறைதல்: இதில் உள்ள பொட்டாசியம் உள்ளடக்கம் காரணமாக இரத்த அழுத்த அளவை குறைக்க உதவும். தினமும் இந்தத் தேநீரை பருகி வந்தால் இது சோடியத்தின் தீங்கான விளைவுகளை எதிர்த்து ஆரோக்கியமான இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தும்.
நோய் எதிர்ப்பு சக்தி: நோய் எதிர்ப்பு செயல்பாட்டை ஆதரிக்கிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தி தூண்டப்படுவதால் நோய்த் தொற்றுகள் குறைகின்றன. ஆரோக்கியமாக உடலமைப்பை தருகின்றன.
கல்லீரல் ஆரோக்கியம்: இந்த தேநீர் உடலில் பித்த உற்பத்தியை தூண்டுகிறது. இதனால் கல்லீரலில் தேங்கியுள்ள நச்சுக்கள் வெளியேறி, கல்லீரல் நன்றாக செயல்பட உதவுகிறது.
இரத்த சர்க்கரை சீரமைப்பு: இந்த தேநீர் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. இன்சுலின் உணர் திறனை மேம்படுத்த உதவும். அதனால் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் உகந்த பானமாக கருதப்படுகிறது.
மாதவிடாய் சிரமத்தை குறைத்தல்: மாதவிடாய் நேரத்தில் பெண்களுக்கு ஏற்படும் வயிற்றுப் பிடிப்பு வயிற்று வலி போன்றவற்றை இந்த தேநீரில் உள்ள டையூரிக் பண்புகள் குணமாக்குகிறது. மேலும் கருப்பை ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
மன அழுத்தம் போக்கும்: தேநீரில் உள்ள ஆன்ஸியோலிடிக் பண்புகள் மனதின் கவலை மற்றும் மன அழுத்தம் மனப்பதற்றத்தை குறைக்கிறது. இதை தினமும் பருகுவதன் மூலம் மனச்சோர்வின்றி உற்சாகமாக வாழ உதவுகின்றது.
சரும ஆரோக்கியம்: இதில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் வெளியில் செல்லும்போது புற ஊதா கதிர்கள் நமது சருமத்தில் பட்டு ஏற்படுத்தும் சேதத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவுகின்றன. மேலும் வயதான அறிகுறிகளை குறைத்து இளமையாக வைக்கிறது. சரும ஆரோக்கியத்தை நன்றாக மேம்படுத்துகிறது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)