உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவது வளர்ச்சிதை மாற்றம் மற்றும் பித்த உற்பத்தி உட்பட உடலில் உள்ள பல்வேறு முக்கிய செயல்பாடுகளுக்கு கல்லீரல் ஒரு முக்கிய உறுப்பாகும். கல்லீரல் சரியாக செயல்படாத போது அது பல்வேறு விதமான அறிகுறிகளை வெளிப்படுத்தும். அவற்றில் சில அறிகுறிகள் நமது தோலிலும் பிரதிபலிக்கின்றன. அந்த அறிகுறிகளை சரியாக கவனிப்பது மூலமாக கல்லீரல் பிரச்சனையை அடையாளம் கண்டு விரைவாக சிகிச்சை பெற முடியும்.
கல்லீரல் செயலிழப்பின் மிகவும் குறிப்பிடத்தக்க அறிகுறிகளில் ஒன்று மஞ்சள் காமாலை ஆகும். இது தோல் மற்றும் கண்களை மஞ்சள் நிறத்தில் மாற்றும். ரத்த சிவப்பு அணுக்களின் முறிவின்போது உற்பத்தி செய்யப்படும் Bilirubin எனப்படும் மஞ்சள் நிறமியை கல்லீரல் வடிகட்ட முடியாதபோது, அது ரத்த ஓட்டத்தில் கலந்து நிறமாற்றத்திற்கு வழிவகுக்கிறது. எனவே உங்கள் தோல் மற்றும் கண்களில் மஞ்சள் நிறத்தை கவனித்தால் அது கல்லீரல் பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம்.
கல்லீரல் பிரச்சனை உள்ளவர்களுக்கு தோலில் அரிப்பு அல்லது தடிப்புகள் ஏற்படலாம். ரத்த ஓட்டத்தில் பித்த அமிலங்கள் கலப்பதால் தோல் அரிப்பு ஏற்படுவதாக நம்பப்படுகிறது. குறிப்பாக இரவில் தோல் நமைச்சல் அதிகமாக இருந்தால், உடனடியாக ஒரு சுகாதார நிபுணரை அணுகி கல்லீரலை பரிசோதிப்பது நல்லது.
Palmar Erythema என்பது உள்ளங்கை சிவந்து போகும் ஒரு நிலையாகும். குறிப்பாக கட்டைவிரலின் அடிப்பகுதியில் இது ஏற்படும். இது ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் கல்லீரல் செயலிழப்பு காரணமாக சருமத்தில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் ஏற்படுகிறது.
கல்லீரல் செயலிழந்தால் ரத்தம் உறைதல் குறைபாடு ஏற்படலாம் இதனால் எளிதில் சிராய்ப்புகள் ஏற்படும். உடலில் சிறிய புடைப்புகள் அல்லது காயங்கள் கூட பெரிய காயங்களாக மாறுவதை நீங்கள் காணலாம். எனவே உங்கள் உடலில் எளிதாக சிராய்ப்புகள் ஏற்பட்டால் அதை உடனடியாக மருத்துவ நிபுணரிடம் காட்டுவது நல்லது.
கல்லீரல் செலிழப்பு தோல் நிறமியில் மாற்றங்களை ஏற்படுத்தும். இதன் காரணமாக சில நபர்கள் இயற்கையான தோல் நிறத்தை இழக்க நேரிடலாம். சிலருக்கு உடலில் கருமை அல்லது ஹைபர் பிக்மென்டேஷன் ஆகியவை காணப்படலாம். கல்லீரல் சரியாக செயல்படாததால் மெலனின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு இத்தகைய நிறமி மாற்றங்கள் அடிக்கடி நிகழ்கூடும்.
மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் கல்லீரல் பிரச்சினைகளுடன் தொடர்புடையதாக இருந்தாலும் அவை கல்லீரல் செயலிழப்பை குறிப்பதல்ல. மேலும் இதுபோன்ற தோல் அறிகுறிகளுக்கு வேறு பல காரணங்களும் இருக்கலாம் என்பதால், இவற்றை நீங்கள் கவனித்தால் உடனடியாக சரியான நோயைக் கண்டறிய டாக்டரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.