
பெரும்பாலானவர்கள் பகலில் தூங்குவது உடலுக்கு நல்லதல்ல என்று நினைக்கிறார்கள். ஆனால், பகலில் 30 நிமிடம் தூங்குவது என்பது, மூளையின் செயல்பாடுகளுக்கும் மூளையின் செல்களுக்கும் நல்லது என்கின்றன ஆய்வு முடிவுகள்.
பகலில் குறிப்பிட்ட நேரம் மட்டுமே தூங்க வேண்டும். எல்லாவற்றையும் மறந்து அரை மணி நேரம் குட்டித் தூக்கம் போட்டால் உடலும், மூளையும் மீண்டும் சுறுசுறுப்பாகி விடுகின்றன. இந்த தூக்கம் மூளையின் செயல்பாட்டை அதிகரிப்பதாக ஆய்வு முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது. இரவில் மட்டுமே தூங்குபவர்களை விட பகலில் சிறிது நேரம் தூங்குபவர்களின் மூளை செயல்பாட்டுத்திறன் அதிகரித்து காணப்படுகிறதாம்.
பகல் தூக்கத்தால் உயர் ரத்த அழுத்தம் குறைவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருதய நோய்களில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள உதவும்.
ஆய்வுகளின்படி, பகலில் குட்டித் தூக்கம் மட்டுமே பயன் தரும். அதேநேரம், அதீத பகல் தூக்கம் உடலுக்கு நல்லதல்ல என்றும் பகல் தூக்கம் நீடித்துக்கொண்டே போனால், அவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. உடல் பருமனும் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
பகலில் தூங்குகிறோம் என்பதை விட எவ்வளவு நேரம் தூங்குகிறோம் என்பதைப் பொறுத்துத்தான் விளைவுகளும் அமையும்.
போதிய உடல் சார்ந்த உழைப்பும் மூளை சார்ந்த நீண்ட நேர உழைப்பும் இல்லாதவர்கள் பகலில் அரை மணி (20-30 நிமிடங்கள்) நேரத்திற்கு குறைவாகத் தூங்கினால் பரவாயில்லை. இது சிறு துயில் (light nap) எனப்படும். பொதுவாக இதனால் நன்மையே நிகழும். ஆனால் கர்ப்பமுற்ற பெண்கள், நோயாளிகள், முதியோர்கள் ஆகியோர்களுக்கு இவ்விதிகள் பொருந்தாது.
இரவில் 6 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும். காலை முதல் மதியம் வரை மூளைக்கு கடுமையான வேலை கொடுக்கும் போது சிறிது நேரம் குட்டித் தூக்கம் புத்துணர்ச்சியையும் உற்சாகத்தையும் தரும்.
எனவே பகலில் அளவாக தூங்கினால் நலமாக வாழலாம்..!