

தற்போது செல்போன் இல்லாதவர்கள் எவரும் கிடையாது. 5 வயது பாப்பாவிலிருந்து 80 வயது மனிதர்வரை அனைவரும் செல்போனுடன் மட்டுமே இயங்குகின்றனர். செல்போனை தேவைக்கு மட்டும் பயன்படுத்துவோருக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் பொழுதுபோக்காக செல்போனில் அதிக நேரம் செலவிடுபவர்களுக்கு நிச்சயம் ஏதேனும் உடல் நல பாதிப்புகள் வருகிறது.
சிறு வயதிலேயே கண்ணாடி போடுவதும், தலைவலி என்று மருத்துவரிடம் செல்வதும் அதிகரித்து வருகிறது. இதற்கும் சில சமயங்களில் செல்போனை அதிக நேரம் பார்த்துக் கொண்டிருப்பது காரணமாகிறது என்கின்றனர் மருத்துவர்கள். சாப்பிடும்போதும், தூங்கும்போதும் தொடர்ந்து செல்போனை பயன்படுத்தும்போது தலைவலி, தூக்க பாதிப்பு, கண் பார்வை குறைவு, கவனச் சிதறல், மூளை சோர்வு போன்ற பல பிரச்னைகள் ஏற்படுவது உண்டு. இது அனைவரும் அறிந்ததே.
ஆனால் இந்த செல்போனை அதிகம் பயன்படுத்துவோர் அதை எப்படி பிடித்து பயன்படுத்துகின்றனர் என்பதை பொறுத்து டெக்ஸ்ட் நெக் சின்ட்ரோம் (Text neck syndrome) எனும் பாதிப்புக்கு உள்ளாவது உங்களுக்கு தெரியுமா? இதை மருத்துவர்கள் நிரூபித்து இதைக் குறித்த விழிப்புணர்வையும் தருகின்றனர். இது குறித்து காணொளியில் பார்த்த விழிப்புணர்வு தகவல்கள் இங்கு...
நன்றாக கவனித்துப் பார்த்தீர்கள் என்றால் செல்போனை பயன்படுத்துபவர்கள் தங்கள் நெஞ்சுக்கு கீழ் தலையை குனிந்து கொண்டே பெரும்பாலும் செல்போனை பார்த்துக் கொண்டிருப்பார்கள். இது இயற்கையாக அனைவரும் செய்யக்கூடிய செயல்தான். ஆனால் இதன் பின் விளைவுகளை தெரிந்துகொண்டால் நிச்சயம் இப்படி செய்யமாட்டோம்.
ஒரு மனிதனுக்கு கழுத்து என்பது எவ்வளவு முக்கியம் என்பதை அறிவீர்கள் நமது தலையையும் உடலில் உள்ள பாகங்களில் இணைக்கும் அத்தனை நரம்புகளும் கழுத்தின் வழியாகவே இணைகின்றன. "எண் சாண் உடம்புக்கு கழுத்தே பிரதானம்" என்பதை அறிவோம் அந்தக் கழுத்தை நாம் அதிகம் சிரமத்துக்கு உள்ளாக்கும்போது அதனால் எழும் பாதிப்புகளே டெக்ஸ்ட் நெக் சின்ட்ரோமாக அறியப்படுகிறது.
இதன் அறிகுறிகள் என்ன?
குனியும்போது கழுத்துப் பகுதிகளில் அதிக இறுக்கமான உணர்வு, தோள் பகுதிகளில் உள்ள தசைகளில் வலி மற்றும் பிடிப்பு, அடிக்கடி தலைவலி, ரிலாக்ஸ் ஆக படுத்தாலும் கழுத்து மற்றும் தோள்கள் வலிப்பது போன்ற உணர்வு போன்றவைகள் இதன் அறிகுறிகளாக உள்ளது.
தலைப்பகுதி எப்போதும் குனிந்த நிலையில் இருப்பது, நேராக நிற்க முடியாமல் கூன் விழுந்ததுபோல் நிற்பது, குனியும்போது இயல்பாக குனிய முடியாமல் போவது போன்றவற்றின் மூலம் ஒருவர் இந்த சின்ட்ரோமால் பாதிக்கப்பட்டு உள்ளார் என்று அறியலாம்.
இதை எப்படி தவிர்ப்பது?
பெரும்பாலும் ஐடி துறையில் இருப்பவர்களுக்கே இதுபோன்ற நிலைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். காரணம் அவர்கள் எப்போதும் கணினி முன் அமர்ந்து பணிசெய்ய வேண்டிய நிலை. இந்த முறைகளை பின்பற்றி இதை தவிர்க்கலாம்.
லேப்டாப் அல்லது கணினி எதன் முன் அமர்ந்தாலும் அதன் திரை நமது கண்களுக்கு நேராக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். பணி செய்யும்போது எளிதாக இருக்கவேண்டும்.
அதே சமயம் அமரும் இருக்கை வசதியானதாக திரையின் உயரத்துக்கு ஏற்ப அட்ஜஸ்ட் செய்துகொள்ளும்படி இருக்க வேண்டும்.
கீபோர்டு இயக்கும்போது அதை நமது கைகள் கீழாக இருந்து இயங்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அதாவது அதிகம் தோள்களை தூக்கி இயக்கும் நிலை இல்லாமல் கைகள் மட்டும் இயங்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
பொதுவாக செல்போனை தொடர்ந்து அதிக நேரங்கள் உபயோகிப்பதை தவிர்க்கவேண்டும். இடையிடையே தலையை அசைத்து நிமிர்த்தி பயிற்சியுடன் ஓய்வு அவசியம்.
இதற்கு சிகிச்சை உண்டா?
வலி வந்துவிட்டால் அது எதனால் ஏற்படுகிறது என தகுந்த மருத்துவர் மூலம் கண்டறிந்து அதற்கேற்ப பிசியோதெரபி பயிற்சி மேற்கொள்ளலாம். அதிக வலி இல்லை. ஆனால் எனக்கு பயிற்சி வேண்டும் என நினைப்பவர்கள் Chin Tuck மற்றும் Neck Flexion எனும் தாடை மற்றும் கழுத்துப் பிடித்து செய்யும் வலி நிவாரண பயிற்சிகளை நிபுணரைக் கேட்டு செய்யலாம்.
இந்த சின்ட்ரோமிலிருந்து தப்பிக்க இனியாவது நமது தலை குனியாமல் நேராக உயர்த்தி செல்போனை பயன்படுத்தப் பழகவேண்டும். குறிப்பாக குழந்தை களிடம் இதை பழக்குவது அவர்கள் நலனுக்கு நல்லது.