

நம்மில் பலரும் இரவு உணவுக்குப் பின் உறக்கத்திற்காக ஒரு நீண்ட இடைவெளி எடுத்துப் பின், காலையில் பிரேக் ஃபாஸ்டாக அந்த நாளுக்குத் தேவையான உணவை உட்கொள்ள ஆரம்பிக்கிறோம்.
காலை உணவானது தவிர்க்கக்கூடாத ஒன்றாகவும், ஆரோக்கியம் நிறைந்ததாகவும் இருப்பது அவசியம். குறிப்பாக, காலை உணவுடன் தாவர விதைகளை சேர்த்து உண்பது ஊட்டச் சத்துக்கள் பெற நல்ல முறையில் உதவி புரியும். ஏனெனில், அவற்றில் வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்றவை அடங்கியுள்ளன. அவ்வாறான விதைகள் சிலவற்றையும் அவற்றை உபயோகிக்கும் முறைகள் பற்றியும் இப்போது பார்க்கலாம்.
1. ஃபிளாக்ஸ் சீட் ஸ்மூத்தி பூஸ்ட்:
ஃபிளாக்ஸ் விதைகளில் லிக்னன்ஸ் (Lignans) மற்றும் ஒமேகா-3, கொழுப்பு அமிலங்கள் அதிகம் நிறைந்துள்ளன. இந்த இரண்டு வகையான சத்துக்களும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
ஒரு டேபிள் ஸ்பூன் ஃபிளாக்ஸ் விதைகளை அரைத்து அதனுடன் வாழைப்பழம், யோகர்ட் அல்லது தாவர அடிப்படையிலான பால் மற்றும் பிளாஞ்சிட் (blanched) பசலை இலைகள் சேர்த்து ஸ்மூத்தியாக்கி உட்கொள்வது உடலின் ஜீரண சக்தியை அதிகரிக்கவும், நாள் முழுக்க உடலுக்குக்குத் தேவையான சக்தியை அளிக்கவும் உதவும்.
2. சியா விதை புட்டிங் டிலைட்:
சியா விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், ப்ரோட்டீன் மற்றும் நார்ச் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. ஒரு கப் பாதாம் பாலுடன் இரண்டு டேபிள்ஸ்பூன் சியா விதைகள் சேர்த்து இரவில் ஃபிரிட்ஜில் வைத்து விடவும். காலையில் எடுத்து, அதன் மேற்பரப்பில் பெரி வகைப் பழங்கள் அல்லது வாழைப்பழத்தை துண்டுகளாக நறுக்கித் தூவி உட்கொள்ளவும். மனதுக்கு திருப்தி தரும் அருமையானதொரு காலை உணவு இது.
3. சூரியகாந்தி விதைகள் சேர்த்த கிரனோலா மிக்ஸ்: சூரியகாந்தி விதைகளில் வைட்டமின் E சத்து அதிகம் உள்ளது. இது உடலுக்குள் ஆன்டி ஆக்ஸிடன்ட்டாக செயல் புரியக் கூடியது. சன் ஃபிளவர் விதைகளுடன் ஓட்ஸ், பூசணி விதைகள் மற்றும் தேன் அல்லது மாப்பிள் சிரப் சேர்த்துக் கலந்து சுமார் 150° செல்சியஸ் உஷ்ணத்தில் பேக் (bake) செய்து எடுத்து, கிரஞ்ச்சியான ஸ்னாக்ஸ்ஸாக உண்ணலாம். நறுக்கிய பழத் துண்டுகள் அல்லது யோகர்ட்டை சைட் டிஷ்ஷாக வைத்துக் கொள்ளலாம்.
4. ஹெம்ப் ஹார்ட் ஓட் மீல் பௌல்:
ஹெம்ப் ஹார்ட் விதைகளில் முழுமையான புரதச் சத்துக்களும் ஒன்பது வகையான அமினோ ஆசிட்களும் அடங்கியுள்ளன.
இதை எந்த விதமான வெஜிடேரியன் உணவுகளுடனும் சேர்த்து உட்கொள்ளலாம். நசுக்கிய ஓட்ஸை, பாக்கெட்டில் கூறப்பட்டிருக்கும் வழி காட்டுதலின்படி உணவாக்கி அதனுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் ஹெம்ப் ஹார்ட் விதைகளைக் கலக்கவும். அதன் மேற்பரப்பில் ரைசின்ஸ், ஆப்ரிகாட் மற்றும் க்ரான் பெரி போன்ற உலர் பழங்களைத் தூவி உட்கொள்ளலாம். இதனால் இந்த உணவு கூடுதல் ஊட்டச் சத்துக்களும் சுவையும் பெறும்.
நீங்களும் இந்த வகையான காலை உணவுகளை உட்கொண்டு அதிகளவு சக்தியுடன் நாளைத் தொடங்கலாமே!
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)