

பெருங்காயத்தில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. அது எப்படியெல்லாம் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்பதைப் பற்றி இப்பதிவில் காண்போம்.
பெருங்காயத்தை கையாளும் அளவிலும், முறையிலும் அதனுடைய சிறப்பு மிகுந்து காணப்படுகிறது. நாவுக்கு சுவையான உணவு என்றால், அதில் பெருங்காயத்தின் கூட்டுறவை காணலாம். 'சமையல் சஞ்சீவி' பெருங்காயம் என்றதும் நம்மை அறியாமலேயே ஒரு விதமான மணத்தின் தன்மையை நாம் உணர்கிறோம்.
1. பிசின் சேகரிப்பு:
பெருங்காயம் ஒரு வகை சிறு மரப்பிசின். இப்பிசின் கிடைக்கும் தாவரம் கிழக்கு பாரசீகம், ஆப்கானிஸ்தானம் முதலிய பகுதிகளில் வளமாக மண்டி கிடக்கின்றது. முதலில் பெருங்காயத்தை கண்டுபிடித்தவர்கள் காஷ்மீர் மக்கள்தான். முதலில் அந்த சிறு மரத்தின் வேரில் சிறு சிறு கீறல்களை கத்தியால் உண்டாக்குவார்கள்.
கீறி விடப்பட்ட பகுதிகளில் இருந்து பால் வடிவது போல மஞ்சள் நிறம் உள்ள ஒரு வாசனையுடன் கூடிய பிசின் கசியும். அப்படி கசிந்து ஒன்று சேர்ந்த பிசின் பிறகு இறுகும். இறுகியதும் மஞ்சள் நிறம் கறுத்து விடும். இதுவே பல சரக்கு கடைகளில் கிடைக்கும் பால் பெருங்காயம். இவ்வாறு ஒவ்வொரு வேரிலும் மூன்று நாளைக்கு ஒருமுறை சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு பட்டை எடுக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பிசினை சேகரிக்கிறார்கள். அவற்றை வியாபாரத்திற்கு தகுதியாக்குகின்றனர். ஒரு வேர் பட்டு போகும் வரை இம்முறையிலேயே பெருங்காய பிசின் சேகரிக்கப்படுகின்றது. இப்படி சேகரிக்கப்படும் முறையை மிகுதியாக கேரளப் பகுதிகளில் காணலாம் .
பயன்படுத்தும் முறை:
பால் பெருங்காயம் துளி சேர்த்தாலும் மணம் அதிகம் கொடுக்கும். அதை அளவுக்கு மீறி உபயோகித்தால் வேப்பெண்ணெய் போன்ற ஒரு குமட்டல் நாற்றத்தை கிளப்பி விடுவதுடன் பண்டத்தின் சுவையை கெடுத்து விடும். அதை உண்டால் வாந்தி எடுக்க நேரும்.
மிஸ்கி பெருங்காயம் கொஞ்சம் அளவு தவறி கூட்டினாலும் பெருத்த வெறுப்பை தராது. காரணம் மிளகாய், பூண்டு முதலிய சரக்குகளுடன் சில கடை சரக்குகளும் அதில் சேர்க்கப்பட்டுள்ளன. அப்படி உள்ள பெருங்காயத்தைத் தான் நாம் இன்று பயன்படுத்துகிறோம்.
பெயர்:
பெருங்காயத்தை எல்லா நாட்டினரும் எல்லா மதத்தினரும் உபயோகிக்கிறார்கள். வங்காளிகள், குஜராத்தியர், மராட்டியர், பஞ்சாபியர் முதலிய வடநாட்டவர்கள் யாவரும் பெருங்காயத்தை 'ஹீங்' என்று பெயர் சொல்லுவர்.
சமஸ்கிருதத்திலும் 'ஹிங்கு' என்றே பெருங்காயத்திற்குப் பெயர்.
இலங்கையில் உள்ள சிங்கள மக்கள் 'சிறுங்காயம்' என்று பெருங்காயத்தைக் கூறுகின்றனர். ஆக அனைத்து நாட்டவரும் ஏகோபித்த முறையில் பெருங்காயத்தை உபயோகித்து வருவதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
மருத்துவ முறைகள்:
மேலும், தன்வந்திரி முதல் தமிழ்நாட்டு சித்தர்கள் வரை பெருங்காயத்தை தங்கள் வைத்திய முறையில் கையாண்டு இருக்கின்றனர். ஆயுர்வேத வைத்தியத்திலும், சித்த வைத்தியத்திலும், யுனானி வைத்தியத்திலும் மாத்திரமின்றி ஆங்கில வைத்தியத்திலும் பெருங்காயம் ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்யவும், நரம்பு நாடிகளின் படபடப்பை தணிக்கவும், ஜீரண குடல் வயிறு இவைகளில் உள்ள புளிப்பை அகற்றி வாய்வை வெளி கிளப்பி வயிற்று வலியை தணிக்கவும், சுவாசக் குழாயில் உள்ள அடைப்பை நிவர்த்தி செய்யவும் ஏற்ற மருந்தாக இருக்கிறது. பெருங்காயம் தாது நரம்புகளுக்கு பலத்தை கொடுப்பதுடன் பித்தசாயத்தின் செய்கையை அதிகப்படுத்தி இருதயத்தை பலப்படுத்துகிறது.
மருத்துவ குணங்கள்:
மற்ற குணங்கள் என்று பார்த்தால் மலமிளக்கும் தன்மையும் பெருங்காயத்திற்கு உண்டு. கைக்குழந்தைகளைப் படுத்தும் கக்குவானை போக்க கைகண்ட மருந்து பெருங்காயம். முதியவர்களை மூச்சு திணறடிக்கும் ஆஸ்துமா, பிராங்கைடிஸ் என்னும் சுவாச நோய்களுக்கும் பெருங்காயம் நல்ல மருந்தாகிறது. இதமான சுவாசம் வரச் செய்ய இவ்வியாதிகளுக்கு பெருங்காயத்தை பொரித்து பொடி செய்து கொடுக்க வேண்டும். ஹிஸ்டிரியாவுக்கும், வயிற்று உப்புசத்திற்கும், சுவாசத் திணறல்களுக்கும் பெருங்காயம் பெருத்த குணம் தருகின்றது.
மயக்கத்தை மாற்ற, சித்தப் பிரமையைப் போக்க பெருங்காயம் சிறந்த மருந்து. பித்த வாத ஜுரம், காலரா, வலிப்பு முதலியவற்றிற்கும் பெருங்காயத்தை கரைத்து அந்த திரவத்தைக் கொடுத்தால் குணம் காணலாம்.
மாந்தம், கனைச்சூடு முதலியவற்றால் இளைத்த குழந்தைகளுக்கு பெருங்காயம் கரைத்த நீருடன் ஓமத் தண்ணீரையும் கலந்து கொடுக்க நோய் நீங்கும். குழந்தைகளுக்கு உள்ள கீரை பூச்சி, பட்டை பூச்சி முதலிய பூச்சிகளை நீக்கி வயிற்றையும், மலக்குடலையும் சுத்தம் செய்வதற்கு பெருங்காய நீர் எனிமா போல் வேலை செய்து பெரிதும் உதவுகின்றது.
பெருங்காயம், சூடம், அபின், மிளகு சேர்ந்த கலவை காலராவை நிறுத்தி விடுகிறது.
முழு உளுந்தை நன்றாக வேக வைத்து அதில் பொரித்த பெருங்காயத்தை சேர்த்துக் கொடுக்க வாயு சம்பந்தமான வலிகள், குத்து வலி, கழுத்துப் பிடிப்பு, நரம்பு கோளாறுகள் முதலியவை நீங்குகின்றன்.
உடலுக்கு சுறுசுறுப்பை தருகின்ற பெருங்காயத்தை பச்சையாக கொடுக்க வேண்டுமானால் பனை வெல்லத்தில் வைத்து மாத்திரை போல் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். பெருங்காயத்தை வெந்நீரில் நனைத்து உரைகளில் உரைத்து வெந்நீரில் கலந்து அந்த நீர் தெளிந்த பின் குளிர வைத்து சிறிதளவு கொடுக்கலாம்.
இப்படி உண்ணும் உணவை சுவை உள்ளதாக்கி, உடலில் நோயையும், மனோ வியாதியையும் ஒருங்கே போக்கும் சஞ்சீவியாகிய பெருங்காயத்தை உபயோகித்து பயன்பெறுவோமாக!
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)