மக்கானா (Makhana) தாமரை விதை காயிலிருந்து பெறப்படும் மருத்துவ குணங்கள் நிறைந்த தாமரை விதையாகும். இதைப் பயன்படுத்தி செய்யப்படும் சிற்றுண்டி ஆரோக்கியம் நிறைந்ததாகக் கருதப்படுகிறது. மக்கானா என அழைக்கப்படும் தாமரை விதையில் புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, மாவுச்சத்து, மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் கால்சியம் போன்ற பல உடலுக்கு அவசியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கியமான பொருளாகும். மேலும், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் பலனளிக்கக் கூடிய ஒரு உணவாக இது கருதப்படுகிறது.
பீகார் மாநிலத்தில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் மக்கானாவை ஆங்கிலத்தில் Fox nuts அல்லது Lotus seeds என்று அழைக்கப்படுகிறது. தற்காலத்தில் மக்கானாவை இந்தியா முழுவதும் பலர் இதன் ஆரோக்கிய நன்மைகள் கருதி ஒரு சிற்றுண்டியாக உபயோகிக்கப்படுத்துகிறார்கள்.
தாமரைக் கொடியிலிருந்து விதைக்காய்கள் கிடைக்கின்றன. இந்தக் காய்கள் நாற்பது நாட்களில் முதிர்ச்சி அடைந்து இருபது விதைகளைத் தருகின்றன. இந்த விதைகள் உலர்த்தப்பட்டு தீயில் வறுக்கப்பட்டு பின்னர் அதன் மேலுள்ள கருப்பு ஓடு உடைக்கப்பட்டு மக்கானாக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
மக்கானாவில் பலவிதமான சத்துக்கள் நிறைந்துள்ளதால் தற்போது இவை இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் கொழுப்புச்சத்து குறைவாக உள்ளதால் எடை குறைப்பிற்கு உதவுகிறது. மக்கானாவில் புரதம், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் முதலான சத்துக்கள் நிறைந்துள்ளதால் இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
உடலிலுள்ள நச்சுப் பொருட்களை நீக்கும் ஆற்றல் மக்கானாவிற்கு உள்ளது. இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் சோடியம் முதலான சத்துக்கள் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகின்றன. இதில் நார்சத்து நிறைந்திருப்பதால் செரிமானத்தை ஊக்குவிக்கிறது. மேலும், இதில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்திருப்பதால் உடலுக்கு பல நன்மைகள் விளைகின்றன.
மக்கானா சிறுநீரகம் மற்றும் மண்ணீரல் செயல்பாட்டை சிறப்பானதாக ஆக்குகிறது. தூக்கமின்மைக்கு மக்கானா ஒரு சிறந்த நிவாரணியாக செயல்படுகிறது. மக்கானா ஒரு மாலை நேர சிற்றுண்டியாக பலரால் விரும்பி சாப்பிடப்படும் உணவாகும். உடல் எடையைக் குறைக்க விரும்புவர்களுக்கு இந்த சிற்றுண்டி மிகவும் சிறந்தது என்று பரிந்துரைக்கப்படுகிறது. மக்கானாவில் உள்ள Kaempferol மற்றும் Quercetin முதலான ஆன்டி ஆக்சிடென்டுகள் உடல் திசுக்களின் இழப்பைக் குறைத்து முதுமைத் தோற்றத்தைத் தடுக்கிறது. இதனால் சருமம் புத்துணர்ச்சி பெற்று நமது உடல் இளமையாகக் காட்சியளிக்கும்.
முதன் முறையாக மக்கானாவை உபயோகிக்க நினைப்பவர்கள் ஏற்கெனவே மக்கானாவை பயன்படுத்துபவர்களிடம் ஆலோசனை கேட்டு அதை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரிந்து கொண்டு பயன்படுத்துங்கள்.