40 வயதிலும் 20 வயதுக்கான ஆரோக்கியம் வேண்டுமா? ஒமேகா-3 ரகசியம் இதோ!

Yung women and pumpkin seeds
Omega-3 Fatty Acids benefits
Published on

ன்று ஆரோக்கியம் குறித்துப் பேசுபவர்கள் அதிகம் உச்சரிக்கும் வார்த்தை 'ஒமேகா-3 கொழுப்பு அமிலம்' (Omega-3 Fatty Acids) என்பதுதான். இது நம் உடலுக்கு மிகவும் அவசியமான, ஆனால் உடல் தானாகவே உற்பத்தி செய்ய முடியாத ஒரு சத்து. இதனை நாம் உணவின் மூலமே பெற முடியும்.

ஒமேகா-3 சத்தினால் விளையும் நன்மைகள் என்ன? அவை எந்தெந்த உணவுகளில் நிறைந்துள்ளன? அவற்றை எப்படிச் சாப்பிட வேண்டும்? என்பதைப் பற்றி விரிவாகக் காண்போம்.

ஒமேகா-3 நிறைந்த உணவுகள்

இதனை அதன் ஆதாரங்களை வைத்து இரண்டு முக்கிய வகைகளாகப் பிரிக்கலாம்:

1. கடல் உணவு ஆதாரங்கள் (EPA மற்றும் DHA)

  • மீன் வகைகள்: மத்தி (Sardines), கானாங்கெளுத்தி (Mackerel), சால்மன் (Salmon), நெத்திலி மற்றும் வஞ்சிரம் போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் ஒமேகா-3 அதிக அளவில் உள்ளது.

  • மாற்று வழி: மீன் உணவுகளைச் சாப்பிடாதவர்கள், மருத்துவரின் ஆலோசனைப்படி மீன் எண்ணெய் (Fish Oil) மாத்திரைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் இந்தச் சத்தைப் பெறலாம்.

2. தாவர வகை ஆதாரங்கள் (ALA)

  • சியா விதைகள் (Chia Seeds): இவற்றைத் தண்ணீரில் ஊறவைத்துச் சாப்பிடுவது செரிமானத்திற்குச் சிறந்தது. ஓட்ஸ் கஞ்சி, மோர், ஸ்மூத்தீஸ், பழச்சாறுகள், சாலட்டுகள், யோகர்ட் மற்றும் புட்டிங் போன்றவற்றுடன் சேர்த்துச் சாப்பிடலாம். சியா விதைகளை உலர்ந்த நிலையில் (Dry) நேரடியாகச் சாப்பிடக்கூடாது. இவை உடலில் நீரை அதிகம் உறிஞ்சும் என்பதால், இவற்றைச் சாப்பிடும்போது அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

  • ஆளி விதைகள் (Flax Seeds): இவற்றை லேசாக வறுத்துப் பொடி செய்து சாப்பிடுவது சிறந்தது. சத்துமாவு அல்லது கஞ்சி வகைகளில் கலந்து பயன்படுத்தலாம்.

  • பூசணி விதைகள்: இவற்றை அப்படியே சிற்றுண்டியாகவோ அல்லது கேசரி, அல்வா, பொங்கல் போன்ற இனிப்பு மற்றும் கார உணவுகளில் சேர்த்தோ சாப்பிடலாம்.

  • அக்ரூட் (Walnuts): இவற்றை ஊறவைத்தோ அல்லது அப்படியே நேரடியாகவோ சாப்பிடலாம். கேக் மற்றும் நட்ஸ் கலவைகளிலும் சேர்த்துப் பயன்படுத்தலாம்.

  • சமையல் எண்ணெய்: நல்லெண்ணெய், கடுகு எண்ணெய் மற்றும் சோயாபீன் எண்ணெய் ஆகியவற்றில் ஒமேகா-3 உள்ளது. சமையலில் இவற்றை அளவுடன் மாற்றி மாற்றிப் பயன்படுத்துவது நல்லது.

ஒமேகா-3 நன்மைகள்

  1. இதய ஆரோக்கியம்: இரத்தத்தில் உள்ள ட்ரைகிளிசரைடுகள் (Triglycerides) அளவைக் குறைத்து, இதயத்துடிப்பைச் சீராக்குகிறது. இதன் மூலம் மாரடைப்பு அபாயம் குறைகிறது.

  2. மூளை மற்றும் நரம்பு மண்டலம்: ஞாபக சக்தியை அதிகரிக்கவும், மன அழுத்தம் (Depression) மற்றும் பதற்றத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு மிக அவசியமானது.

  3. கண்பார்வை: கண்களின் விழித்திரை (Retina) ஆரோக்கியத்தைப் பாதுகாத்து, பார்வைத்திறனை மேம்படுத்துகிறது.

  4. வீக்கத்தைக் குறைத்தல்: உடலில் ஏற்படும் நாள்பட்ட வீக்கங்களைக் (Chronic Inflammation) குறைப்பதன் மூலம் மூட்டுவலி மற்றும் கீழ்வாதம் (Arthritis) உள்ளவர்களுக்கு நல்ல நிவாரணம் அளிக்கிறது.

  5. சரும ஆரோக்கியம்: சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும், இளமையான தோற்றத்தைத் தக்கவைக்கவும் உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
காரணமே இல்லாமல் உள்ளங்கையில் வியர்க்கிறதா? உங்க உடம்பு சொல்லும் ரகசியம் இதுதான்!
Yung women and pumpkin seeds

இவ்வளவு நன்மைகளை வாரி வழங்கும் ஒமேகா-3 சத்தைப் பெற, சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்பதே சிறந்த வழி. முறையான உணவுப் பழக்கத்தை மேற்கொண்டு ஆரோக்கியத்தைப் பாதுகாப்போம்!

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com