பிரஸ்ஸெல் ஸ்பிரௌட்ஸ், புரோக்கோலி, முட்டைகோஸ், ஆஸ்பராகஸ் மற்றும் காலிஃபிளவர் போன்ற க்ரூஸிஃபெரஸ் வெஜிடபிள்ஸ் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சிறப்பான செரிமானத்திற்கும், உடலிலிருந்து நச்சுக்களை நீக்கவும் உதவும். இவற்றிலிருந்து கிடைக்கும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1. பிரஸ்ஸெல் ஸ்பிரௌட்ஸ்: இதிலிருக்கும் கெம்ஃபெரால் (Kaempferol) போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலிலிருக்கும் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை எதிர்த்துப் போராடி, செல்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும். மேலும், இது உடலில் உள்ள வீக்கங்களைக் குறைக்கவும், கல்லீரலின் நச்சுக்களை நீக்கும் செயலில் சிறந்த முறையில் உதவி புரியவும் செய்யும்.
2. புரோக்கோலி: புரோக்கோலியில் வைட்டமின் C மற்றும் பீட்டா கரோட்டீன் சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து, தொற்று நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராட உதவும். இதிலுள்ள சல்ஃபோரஃபேன் (Sulforaphane) என்ற கூட்டுப்பொருள் உடலுக்கு தீங்கிழைக்கக்கூடிய கார்சினோஜென்களின் அளவை சமநிலைப்படுத்தி சில வகை கேன்சர் வரும் அபாயத்தைத் தடுக்க உதவி புரியும்.
3. ஆஸ்பராகஸ்: ஆஸ்பராகஸ் செரிமானம் சிறப்பாக நடைபெற உதவக் கூடியது. இதிலுள்ள பிரீபயோடிக் நார்ச்சத்து குடலிலுள்ள நல்ல பாக்டீரியாக்கள் ஆரோக்கியமுடன் வளர உதவிபுரியும். இதன் மூலம் ஜீரணம் எவ்விதக் கோளாறுமின்றி நல்ல முறையில் நடைபெறும். ஆஸ்பராகஸில் அதிகளவில் நிறைந்திருக்கும் குளூட்டதியோன் கல்லீரலின் நச்சுக்களை நீக்கும் செயலில் உதவி புரியும். மேலும், செல்களை தீங்கிழைக்கக்கூடிய ஃபிரீரேடிக்கல்களின் தாக்குதல்களிலிருந்து தப்பிக்கவும், நச்சுக்களின்றி நலமுடன் செயல்புரியவும் துணை நிற்கும்.
4. காலிஃபிளவர்: காலிஃபிளவர் குறைந்த அளவு கலோரியும், அதிகளவு நார்ச்சத்தும் உடைய வெஜிடபிள். இதை உட்கொண்டால் இது அதிக நேரம் வயிற்றில் தங்கி நீண்ட நேரம் பசியுணர்வு வருவதைத் தடுத்து நிறுத்தும். இதன் மூலம் எடைக் குறைப்பிற்கு காலிஃபிளவர் நன்கு உதவி புரியும். இதிலுள்ள அதிகளவு வைட்டமின் K எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பலப்படுத்தும். மேலும், கால்சியம் சத்து உடலுக்குள் உறிஞ்சப்படுவதற்கும் உதவி புரியும்.
5. முட்டைகோஸ்: முட்டைகோஸில் உள்ள அதிகளவு நார்ச்சத்தும் நீர்ச்சத்தும் செரிமானம் சிறப்பாக நடைபெறவும் மலச்சிக்கல் நீங்கவும் உதவும். மேலும், இதிலுள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுக்குள் வைக்கவும், உடலின் வீக்கங்களைக் குறைக்கவும், இதயம் ஆரோக்கியக் குறைபாடின்றி சீராக செயல்படவும் உதவும்.
மேற்கூறிய ஐந்து வகை க்ரூஸிஃபெரஸ் வெஜிடபிள்ஸ்களை அடிக்கடி உட்கொண்டு உடல் ஆரோக்கியம் காப்போம்.