ஏப்பம் என்பது அனைவருமே ஏற்படும் ஒரு சாதாரண விஷயம்தான். சில சமயங்களில் சாப்பிட்ட பிறகு அல்லது தண்ணீர் குடித்த பிறகு ஏப்பம் வருவது இயல்பானது. ஆனால், தொடர்ச்சியாக ஏப்பம் வருவது ஒரு சில உடல் நலப் பிரச்சினைகளைக் குறிக்கலாம். இந்தப் பதிவில் தொடர்ச்சியாக ஏப்பம் வருவதற்கான காரணங்கள் மற்றும் அதைத் தடுக்கும் வழிமுறைகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
தொடர்ச்சியாக ஏப்பம் வருவதற்கான காரணங்கள்:
பேசிக் கொண்டே சாப்பிடுவது, அவசரமாக சாப்பிடுவது, கார்பனேட்டட் பானங்களை குடிப்பது, சுவிங்கம் மெல்லுதல் போன்றவை நாம் அறியாமலேயே காற்றை உள்ளே கொண்டு செல்கிறது. இது வயிற்றில் தேங்கி ஏப்பம் வரக் காரணமாகிறது.
அசிடிட்டி, இரைப்பை புண்கள், லாக்டோ சகிப்புத்தன்மை இல்லாதது போன்ற செரிமானக் கோளாறுகள் காரணமாகவும் ஏப்பம் வரக்கூடும். சிலருக்கு மன அழுத்தம், பதட்டம் போன்ற பிரச்சினைகளாலும் இது வரலாம்.
சிலர் நீண்ட காலமாக மருந்துகளை எடுத்துக் கொள்வது தொடர்ச்சியாக ஏப்பம் வரும் பக்க விளைவுகளை வெளிப்படுத்தும். சில குறிப்பிட்ட உணவுகளுக்கு வவ்வாமை இருப்பவர்களுக்கும் தொடர் ஏப்பம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
தொடர்ச்சியாக ஏப்பம் வருவதை தவிர்க்கும் வழிமுறைகள்:
முதலில் உணவுகளை சாப்பிடும் போது அவசரப்படாமல் மெதுவாக சாப்பிடுங்கள். முடிந்தவரை சாப்பிடும்போது பேசுவதைத் தவிர்க்கவும். உணவுகளை நன்கு மென்று சாப்பிடவும்.
கார்பனேட்டட் பானங்கள், புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதை உடனடியாக நிறுத்துங்கள். நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள். கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். உணவை ஒரே மொத்தமாக சாப்பிடாமல் அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவுகளைக் கண்டறிந்து அவற்றை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். மருந்துகளால் ஏப்பம் ஏற்பட்டால், மருத்துவரிடம் ஆலோசித்து மருந்துகளை மாற்றி பயன்படுத்துவது நல்லது.
மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு தியானம், யோகா போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். இது தவிர, தினசரி போதுமான அளவு தூங்க வேண்டும். தொடர்ச்சியாக ஏப்பம் வந்தால் மருத்துவரை அணுகி அதற்கான காரணத்தைக் கண்டறிவது நல்லது.
மேற்கூறிய வழிமுறைகளைப் பின்பற்றி தொடர்ச்சியாக ஏப்பம் வருவதை நீங்கள் கட்டுப்படுத்தலாம்.