தூங்குவது என்பது சாதாரண செயல் போல தோன்றினாலும், அது ஒவ்வொரு மனிதனுக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். அதனால் தான் தூக்கப்பிரச்சனை உள்ளவர்களைக் கருத்தில் கொண்டு உலக தூக்க தினம் அனுசரிக்கப்பட்டு அவர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
7 மணி நேர தூக்கத்தின் அவசியம்:
இன்றைக்கு இளைஞர்கள் இரவு வெகு நேரம் கழித்துத் தூங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். மனிதர்கள் தினமும் குறைந்தது 7 மணி நேரம் தூங்குவது மிகவும் அவசியம். இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு உதவுகிறது. குழந்தைகள் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். சிறு குழந்தைகள் மற்றும் புதிதாய் பிறந்த குழந்தைகளின் தூக்க அட்டவணை மாறுபடும். அவர்கள் ஒரு நாளில் பெரும்பான்மையான நேரத்தை தூக்கத்தில் கழிப்பார்கள்.
மின்சார சாதனங்களான ஃபேன், மிக்ஸி, கிரைண்டர், டிவி போன்றவற்றை சிறிது நேரம் உபயோகித்தாலே அவை சூடாகிவிடும். அது போல மனித உடல் நாள் முழுவதும் உழைத்துக் களைத்து ஓய்வுக்காக ஏங்கும்போது அதைத் தருவது மிகவும் அவசியம்.
ஒரு நாளின் முடிவில் உடல் முழுவதுமாக களைத்துப் போகும்போது மனதும் சோர்வடைந்து விடும். அந்த நேரத்தில் தூக்கத்தை தழுவுவது உடலுக்கும் மனதிற்கும் நாம் செய்யும் மிகப்பெரிய நன்மையாகும்.
தூக்கத்தின் நன்மைகள்:
உடல் ஆரோக்கியம்:
போதுமான தூக்கம் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீராக வைத்திருக்கும். பகல் முழுவதும் உட்கார்ந்தும், நின்றும், பயணித்தும் மேலும் பல உடல் ரீதியான செயல்பாடுகளில் ஈடுபடுகிறோம். இரவில் 7 மணி நேரம் உடலின் அத்தனை புலன்களுக்கும் ஓய்வு தருவது முக்கியம். மறுநாள் செய்ய வேண்டிய வேலைகளுக்கு உடல் தன்னை தயார்படுத்திக் கொள்ள நல்ல ஆழமான தூக்கம் அவசியம்.
கிரெலின் மற்றும் லெப்டின் போன்ற ஹார்மோன்களை தூக்கம் சமநிலைப்படுத்துகிறது. இதனால் ஒருவருடைய எடை அதிகரிக்காமல் இருக்க உதவுகிறது. நீரிழிவு மற்றும் இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தையும் தூக்கம் குறைக்கிறது.
தினமும் இரவில் ஏழு மணி நேரம் தொடர்ந்து உறங்குபவர்கள் நீண்ட ஆயுளுடன் இருப்பார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அவர்களது நோய் எதிர்ப்பு அமைப்பு சீராக செயல்பட்டு உடலும் ஆரோக்கியமாக இருக்கும். நோய் தொற்று ஏற்படுவதும் குறையும்.
மன அழுத்த மேலாண்மை;
ஒருவர் நல்ல மனநிலையை பேணுவதற்கும் மன அழுத்த நிலைகளை நிர்வகிப்பதற்கும் தூக்கம் மிக முக்கியமானது. இரவில் நன்றாக தூங்காத மனிதர்கள் எப்போதும் எரிச்சல், சோர்வு, கவலை, படபடப்பு, பிறர் மேல் தேவையில்லாமல் கோபப்படுதல் போன்ற செயல்களை செய்வார்கள்.
அறிவாற்றல் அதிகரித்தல்;
மனிதர்களின் அறிவாற்றல் செயல்திறன், படைப்பாற்றல், ஒட்டுமொத்த மன ரீதியான செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கு குறைந்த பட்சம் 7 மணி நேர தூக்கம் அவசியம். இது ஒருவருடைய நினைவாற்றலை நன்றாக செயல்பட வைக்கிறது. மேலும் உணர்ச்சி ஒழுங்கு முறையையும் ஆதரிக்கிறது.
சரியாகத் தூங்காமல் இருந்தால் எழும் சிக்கல்கள்;
நீண்ட நாட்களாக சரியாக தூங்காதவர்களுடைய உடல் மற்றும் மன ஆரோக்கியம் கெட்டுப் போகும். இதய நோய், பக்கவாதம் போன்ற அபாயத்தை அதிகரிக்கும். உடல் எடை கூடுதல், நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரித்தல், தன்னுடல் தாக்கக் கோளாறுகளின் அபாயம், புற்றுநோய் ஆபத்து, இளம் வயதிலேயே வயதானது போன்ற தோற்றம், மனநிலைக் கோளாறுகள், அறிவாற்றல் சரிவு போன்றவை ஏற்படும். மேலும் இரவில் சரியாக தூங்காத நபர்கள் பகலில் வண்டி ஓட்டிச் செல்லும்போது விபத்துகளை ஏற்படுத்தும் அபாயங்களும் உள்ளன. இரவில் சரியாக தூங்காத குழந்தைகளின் கல்வி கற்றல் திறனும் பாதிக்கப்படும்.
மேலும் அவர்கள் எப்போதும் எரிச்சலுடன் பிற குழந்தைகளுடன் சண்டையிட்டுக் கொண்டிருப்பார்கள். சரியாக தூங்காத பெண்களுக்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் உண்டாகி சீரற்ற மாதவிலக்கு சுழற்சி, கருவுறுதலில் பிரச்சனை போன்றவை ஏற்படும்.
இனியாவது சீக்கிரம் தூங்குங்களேன்....!!!