எந்த ஒரு செயலையும் செய்ய இயலாதவர்களை பொதுவாக 'முதுகெலும்பற்றவர்' என ஏளனமாக கூறுவதுண்டு.
மூளையிலிருந்து உடலின் பிற பாகங்களுக்கு செல்லும் இயக்கக் கட்டளைகள் (Motor commands) மற்றும் உடலின் பிற பாகங்களிலிருந்து மூளைக்குச் செல்லும் உணர்வுகளை (Sensory information) எடுத்துச் செல்வது முதுகெலும்பில் அமைந்துள்ள முள்ளந்தண்டு வடத்தின் (Spinal Cord) முக்கியப் பணியாகும்.
முதுகெலும்பில் பிரச்சினை என்றால் நம்மால் நிமிர்ந்து நிற்கவோ நடக்கவோ கூட முடியாது. முதுகெலும்பின் ஆரோக்கியத்திற்கு நாம் உட்கொள்ள வேண்டிய 10 வகை உணவுகள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
1. பச்சை இலைக் காய்கறிகள்: வைட்டமின்கள், மினரல்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்ற நுண்ணுயிர்ச் சத்துக்கள் கணிசமான அளவில் நிறைந்துள்ள கீரை வகைகள், முதுகெலும்பின் அமைப்பை வலுவாக்கவும் வீக்கங்களைக் குறைக்கவும் உதவும். முட்டைகோஸில் உள்ள வைட்டமின் A, C மற்றும் இரும்புச் சத்து, மக்னீசியம் போன்ற கனிமச் சத்துக்களும் முதுகெலும்பின் ஆரோக்கியம் காக்க உதவும்.
2. நட்ஸ் மற்றும் விதைகள்: ஆரோக்கியமான கொழுப்புகள்,வைட்டமின் E சத்து மற்றும் அதிகளவு கால்சியம், மக்னீசியம் போன்ற கனிமச் சத்துக்கள் ஆகியவை, வால்நட், பாதாம் பருப்புகள், சியா மற்றும் ஃபிளாக்ஸ் விதைகளில் அதிகம் நிறைந்துள்ளன. இவை முதுகெலும்பின் அமைப்பையும் மூட்டுக்களையும் பாதுகாப்பதுடன் வீக்கங்களையும் வலிகளையும் குறைக்கவும் உதவி புரிகின்றன.
3. முட்டை அண்ட் பன்னீர்: முட்டையில் அதிகளவு புரதச் சத்து, வைட்டமின் B12, D சத்து நிறைந்துள்ளன. பன்னீரில் புரதச்சத்து மற்றும் கால்சியம் அதிகம் உள்ளன.
4. அவகாடோ: இப்பழத்தில் உள்ள மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் (Healthy Fats) உடல் முழுவதும் உள்ள வீக்கங்களைக் குறைக்கவும், முதுகு வலியைக் குணமாக்கவும் உதவுகின்றன. பொட்டாசியம், மக்னீசியம் போன்ற சத்துக்கள் முறையே எலக்ட்ரோலைட்களின் அளவை சமநிலைப்படுத்தவும், தசை மற்றும் நரம்புகளின் செயல்பாடுகளை சிறப்பாக்கவும் உதவி புரிகின்றன.
5. சிட்ரஸ் வகைப் பழங்கள்: ஆரஞ்சு, லெமன் மற்றும் கிரேப்ஸ் போன்ற பழங்களில் வைட்டமின் C சத்து அதிகம். இது முதுகுத் தண்டுவட அடுக்குகளில் கொல்லாஜன் உற்பத்தியின் அளவை அதிகரிக்க உதவும். இவற்றில் உள்ள ஃபிளவனாய்ட்ஸ் வீக்கங்களைக் குறைத்து நாள்ப்பட்ட வியாதிகள் வரும் அபாயத்தைக் தடுக்க உதவுகின்றன.
6. பருப்பு வகைகள், கொண்டை கடலை மற்றும் பீன்ஸ்: இவைகளில் உள்ள புரதச் சத்து, நார்ச்சத்து மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் தசைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். வீக்கங்களைக் குறைக்க உதவும். குறிப்பாக முதுகெலும்பைப் பாதுகாப்பதில் முன்னிலை வகிக்கும் இந்த தாவர வகை உணவுகள்.
7. ஸ்வீட் பொட்டட்டோ: இதிலுள்ள வைட்டமின் C, A போன்ற சத்துக்கள் எலும்புகள் மற்றும் தசை நார்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் கொல்லாஜன் உற்பத்தியின் அளவைப் பெருக்கவும் உதவி புரிகின்றன.
8. மஞ்சள்: இதிலுள்ள சக்தி வாய்ந்த கூட்டுப் பொருளான குர்குமின் ஆன்டி இன்ஃபிளமேட்டரி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் குணங்கள் கொண்டது.
9. பெரி வகைப் பழங்கள்: ப்ளூபெரி, ஸ்ட்ராபெரி, ராஸ் பெரி போன்ற பழங்களில் உள்ள வைட்டமின் C, கொல்லாஜன் உற்பத்தியின் அளவைப் பெருகச் செய்கின்றன. இதனால் தண்டுவட அடுக்குகள் மற்றும் இணைப்புத் திசுக்களின் ஆரோக்கியம் வலுவடையும்.
10. ஆலிவ் ஆயில்: எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் ஆயிலில் உள்ள இயற்கையான ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணங்கள் முதுகெலும்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. மேலும் சினோவியல் (Synovial) என்றொரு திரவத்தை உற்பத்தி செய்து எலும்புகள் உராய்வின்றி செயல்படவும் உதவி புரிகின்றன.