நம் உடலிலுள்ள நச்சுக்களைப் பிரித்தெடுத்து சிறுநீர் மூலம் வெளியேற்றி, உடலிலுள்ள எலக்ட்ரோலைட்களின் அளவை சமநிலையில் வைப்பது மற்றும் இரத்த அழுத்தத்தை சீராகப் பராமரிப்பது போன்ற பணிகளைச் சிறப்புற ஆற்றி வருவது நம் கிட்னிதான். சில பல காரணங்களினால் கிட்னி சேதமடைந்தாலோ அல்லது நாள்பட்ட சிறுநீரகக் கோளாறு (Chronic Kidney Disease) நோயால் பாதிக்கப்பட்டாலோ, குளிர்காலங்களில் தாராளமாகக் கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்து மிக்க 10 வகை உணவுகளை உட்கொள்வதன் மூலம் சிறுநீரகக் கோளாறு மேலும் தீவிரமடையாமல், சிறுநீரகம் சிறந்த முறையில் செயல்பட வைக்க முடியும். இதனால் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற உடல்நிலைக் கோளாறுகள் உண்டாகாமல் பாதுகாக்கவும் முடியும். அந்த 10 வகை உணவுகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. கர்லி காலே (Kurly Kale): இதில் வைட்டமின்கள் A, C, K, கால்சியம், நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. மேலும், பச்சை இலைக் காய்கறிகளில் ஒன்றான காலேயில், வீக்கங்களைக் குறைத்து கிட்னி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன.
2. ஸ்வீட் பொட்டட்டோ: ஸ்வீட் பொட்டட்டோவில், இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்தவும், சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது. மேலும், இதிலுள்ள நார்ச்சத்து சீரான செரிமானத்துக்கு உதவி புரியும்.
3. பீட்ரூட்: நச்சுக்களை நீக்குவதில் சிறப்பாகப் பணியாற்றக்கூடிய பீட்ரூட்டை உண்பது சிறுநீரக செயல்பாடுகளில் சிறுநீரகத்திற்கு ஒரு சிறந்த துணையை இணைத்துக் கொடுப்பதற்கு ஈடாகும். பீட்ரூட்டில் அதிகளவில் உள்ள நைட்ரேட் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்தவும் உதவும். இதை சாலட், ஜூஸ், கறி என பல வகைகளில் உபயோகித்து உண்ணலாம்.
4. கிரான்பெரீஸ்: கிரான்பெரி சிறுநீர்ப் பாதையில் தொற்று உண்டாவதைத் தடுக்க வல்லது. இதிலுள்ள ஒரு வகைக் கூட்டுப்பொருள் பாக்ட்டீரியாக்கள் சிறுநீர்ப் பாதையில் ஒட்டிக்கொள்வதைத் தடுத்து விரட்டி கிட்னியைப் பாதுகாக்க பெரிதும் உதவும்.
5. ஆப்பிள்: ஆப்பிளில் நார்ச்சத்தும் வைட்டமின் Cயும் அதிகம் உள்ளன. இவை கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் சிறுநீரகத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தவும் உதவி புரியும். இதை ஜூஸ், சாலட், ஓட் மீலுடன் சேர்த்து அல்லது அப்படியே கடித்து என எந்த வழியாகவும் உண்டு மகிழலாம்.
6. பூண்டு: பூண்டு மணமும் சுவையும் கொண்டது மட்டுமல்ல, உடலுக்கு பலவித ஆரோக்கிய நன்மைகளைத் தரக்கூடியது. இதில் நிறைந்துள்ள 'அல்லிஸின்' என்ற கூட்டுப்பொருள் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணம் கொண்டது. அது கிட்னியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க சிறந்த முறையில் உதவும்.
7. சால்மன் மீன்: சால்மன் மீனில் நிறைந்துள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் வீக்கங்களைக் குறைத்து இதயத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். கிட்னியின் பாதுகாப்பை விரும்புபவர்கள் சால்மன் மீன் உட்கொண்டால், அது கிட்னியின் பளுவைக் குறைப்பதற்குத் தேவையான புரோட்டீன் சத்தைக் கொடுத்து உதவும்.
8. குயினோவா: குயினோவா ஒரு குளூட்டன் ஃபிரீயான தானியம். இதில் நார்ச்சத்தும் புரோட்டீனும் அதிகம். இதில் உடலுக்குத் தேவையான ஒன்பது வகையான அமினோ ஆசிட்களும் அடங்கி இருப்பதால் இது ஒரு முழுமையுற்ற புரோட்டீன் உணவாகக் கருதப்படுகிறது. கிட்னி ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் குயினோவா பெரும் பங்காற்றுகிறது.
9. பசலைக் கீரை: பசலைக் கீரையில் இரும்புச் சத்து, வைட்டமின்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்ற பல வகையான ஊட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளன. கிட்னியைப் பாதுகாக்க உதவும் பத்து வகை உணவுகளில் ஒன்றாக இதையும் தாரளமாக சேர்த்துக் கொள்ளலாம்.
10. மாதுளம் பழம்: கிட்னியின் ஆரோக்கியம் சீர்குலையாமல் தடுக்க உதவும் பல வகையான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மாதுளம் பழத்தில் உள்ளன. இப்பழத்தில் உள்ள ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணமானது உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாக்க உதவி புரிகிறது. இதை ஜூஸ், சாலட், ஸ்நாக்ஸ் என எந்த வடிவிலும் உட்கொண்டு அதன் முழு பயனையும் அடையலாம்.
மேற்கூறிய பத்து வகை உணவுகளை தொடர்ந்து உட்கொண்டு சிறுநீரகங்களை சிறந்த முறையில் பாதுகாக்கலாம். வழக்கமான உணவுப் பழக்கத்தில் மாற்றத்தை உண்டாக்கும் முன், மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்வதும் நலம்.