பசி என்பது நமது உடலில் ஏற்படும் ஒரு உணர்வு. உடலின் உள்புற மற்றும் வெளிப்புறக் காரணிகள் பசியைத் தூண்டுவதற்கு ஒன்றிணைந்து செயல்படுகின்றன.
பசியைத் தூண்டும் முக்கியக் காரணிகள்:
ஹார்மோன்கள்:
இவை நமது உடலில் உள்ள முக்கியமான ரசாயனத் தூதுவர்கள் ஆகும். கிரெலின் என்பது பசி ஹார்மோன். இது வயிறு காலியாக இருக்கும் போது உற்பத்தி செய்யப்படுகிறது. உணவுக்கு முன்பு கிரெலின் அளவு கணிசமாக உயர்ந்து இது சாப்பிட வேண்டிய நேரம் என்கிற வலுவான சிக்னலை மூளைக்கு அனுப்புகிறது. சாப்பிட்ட பிறகு கிரெலின் அளவு குறைகிறது.
லெப்டின்:
இது ஒரு திருப்தி ஹார்மோன் ஆகும். நமது உடலின் கொழுப்பு செல்களால் உற்பத்தி செய்யப்படுகிறது. உடலில் கொழுப்புச் சத்து குறைவாக இருக்கும் போது லெப்டினின் அளவு குறைந்து பசியும் அதிகரிக்கிறது.
பெப்டைட் மற்றும் குளுக்கோகன்;
இந்த ஹார்மோன்கள் சாப்பிட்ட பிறகு குடலால் வெளியிடப்படுகின்றன. உணவு உண்டு முடித்ததும், பசியடங்கி முழுமையான உணர்வுகளை இந்த ஹார்மோன்கள் ஊக்குவிக்கின்றன. இவற்றின் அளவுகள் உடலில் குறையும் போது பசி எடுக்கிறது.
இன்சுலின்:
உணவு உண்ட பிறகு கணையத்தால் வெளியிடப்படும் இன்சுலின், ஆற்றலுக்காக செல்களுக்கு சர்க்கரையை கொண்டு செல்கிறது. குறைந்த இன்சுலின் அளவுகள் அதிக குளுக்கோஸின் தேவையைக் குறிக்கிறது. அது பசி ஏற்பட வழி செய்கிறது.
ரத்த சர்க்கரை அளவுகள்:
ரத்த குளுக்கோஸ் அளவுகள் குறையும்போது உடல் ஆற்றல் தேவையை உணர்ந்து சாப்பிட வேண்டும் என்று மூளைக்கு சிக்னல் அனுப்புகிறது. இதனால் தான் பெரும்பாலும் அரிசி உணவுகளான, இட்லி, தோசை போன்றவற்றை உண்டபின் சில மணி நேரங்களுக்குப் பிறகு மீண்டும் பசிக்கிறது.
வயிற்றுச் சுருக்கங்கள்:
வயிறு காலியாக இருக்கும்போது அது சுருங்குகிறது. இந்த சுருக்கங்கள் சில நேரங்களில் பசி என்று அழைக்கப்படுகின்றன. அவை கிரெலினால் ஓரளவு கட்டுப்படுத்தப்படுகின்றன.
ஊட்டச்சத்து குறைபாடுகள்:
புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள், விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு தொடர்ந்து கிடைக்கவில்லை என்றால் போதுமான கலோரிகளை உட்கொண்டு இருந்தாலும் உடல் ஊட்டச்சத்துக்களை பெறுவதற்காக பசி என்கிற சிக்னலை அனுப்பும்.
புலன் சார்ந்த அறிகுறிகள்:
மசாலா கலந்த உணவு வகைகள், எண்ணெய்ப் பண்டங்கள் போன்ற உணவுகளின் வாசனை நாசியை தொடும் போதும் அல்லது கண்களால் அவற்றை பார்க்கும் போதும் அல்லது அவற்றை மனதில் எண்ணும் போது கூட பசி உண்டாகும். அதனால் தான் விளம்பரத்தில் உணவு பொருட்களை காண்பிக்கும் போது மீண்டும் பசிப்பது போல உணர்கிறோம்.
தூக்கமின்மை:
போதுமான தூக்கம் இல்லாத போது பசி ஹார்மோன்களை கணிசமாக பாதித்து பசியின் அளவை அதிகரிக்க செய்கிறது. ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பதற்கான ஏக்கத்தையும் தருகிறது.
தாகம் / மருந்துகள்:
சில சமயங்களில் சரியான அளவு நீர் அருந்தாமல் இருந்தால் அந்தத் தாக உணர்வு பசி என்று உடலால் தவறாக புரிந்து கொள்ளப்படும். எனவே போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும். மன அழுத்த எதிர்ப்பு மருந்துகள், ஸ்டீராய்டுகள் போன்றவற்றின் பக்க விளைவுகள் காரணமாக பசி அதிகரிக்கும்.
சமூக அமைப்பு:
உண்மையிலேயே பசிக்காவிட்டாலும் கூட வீட்டில் யாராவது உணவு உண்டு கொண்டிருந்தால் அல்லது வெளியிடங்களில் யாராவது சாப்பிட்டுக் கொண்டிருந்தால் அதை பார்க்கும் போது தூண்டப்பட்டு பசி எடுக்கிறது.
வேகமாக சாப்பிடுதல்:
ஒருவர் உணவு உண்ணும் நேரம் குறைந்தது 20 நிமிடங்களாக இருக்க வேண்டும். உணவை நன்றாக மென்று உண்ணும் போது உடலுக்கும் மூளைக்கும் திருப்தி அடைந்த உணர்வு கிடைக்கும். அவசர அவசரமாக சாப்பிடும் போது விரைவிலேயே பசி எடுக்க வழி வகுக்கும்.
மேற்கண்ட காரணிகளை பகுத்துணர்ந்து அதற்கு ஏற்றபடி ஊட்டச்சத்துள்ள உணவை நிதானமாக சாப்பிட வேண்டும். நன்றாக தூங்கி, மன அழுத்தமின்றி இருக்க வேண்டும். இடையில் பசித்தால் நொறுக்குத்தீனி சாப்பிடாமல் பழங்கள், காய்கறிகள், வேக வைத்த முட்டைகள் போன்றவற்றை சாப்பிடலாம்.
முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை/நிபுணரை அணுகவும்.