இந்தியாவின் பாரம்பரிய வைத்திய முறைகளில் சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவம் முதன்மையானவை. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்தே இந்தியாவின் பாரம்பரிய வைத்திய முறைகள் சிதைக்கப்பட்டன. அலோபதி வைத்திய முறைக்கு மட்டுமே பிரிட்டிஷ் காலத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அவர்கள் பாரம்பரிய வைத்திய முறைகள் மீது வதந்திகளை பரப்பினர். அரசின் வைத்திய முறையாக அலோபதி மருத்துவம் மட்டுமே இருந்தது.
இந்திய விடுதலைக்கு பின்னரும்கூட அரசு அலோபதி மருத்துவ முறைக்கே ஆதரவு கொடுத்தது. அலோபதி வைத்திய சாலைகள் நாடு முழுக்க பெருகின.
பின்னர் மத்திய , மாநில அரசாங்கங்கள் பாரம்பரிய வைத்திய முறைகளை பாதுகாக்கும் முயற்சியை தொடங்கின. நகர்புற மருத்துவமனைகளில் சித்த மருத்துவ பிரிவு தொடங்கப்பட்டது.
சில மாநிலங்களில் ஆயூர்வேத மருத்துவப் பிரிவுகளும் செயல்பாட்டில் இருக்கின்றன. ஆனால், நீண்ட காலமாக பொது மக்களால் பாரம்பரிய வைத்திய முறைகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டன. அவர்கள் சித்த, ஆயுர்வேத வைத்திய முறைகள் பலனளிக்காது என்றும், ஏமாற்று நடைமுறை என்றும் நினைத்தனர்.
ஆனால், இந்த எண்ணத்தை கோவிட் தொற்று மாற்றியது.
கொரோனா நோய் பரவிய ஆரம்ப காலத்தில், அப்போது இருந்த அலோபதி மருத்துவம் பலன் கொடுக்கவில்லை . சித்த மற்றும் ஆயுர்வேத வைத்தியம் சிறப்பான முறையில் பலனளிக்க தொடங்கின. அலோபதி மருத்துவர்களே சித்த வைத்தியத்தின் வேம்பு குடிநீர், கபசுர குடிநீர் போன்றவற்றை சிபாரிசு செய்தனர். கொரோனா நோய் தொற்று பாதித்த பலரும் பாரம்பரிய வைத்திய முறைகளில் பலன்பெற்று குணமாகி வந்தனர்.
அதன் பின்னர் மக்களுக்கு பாரம்பரிய வைத்திய முறைகளின் மீது நம்பிக்கை வர தொடங்கியது . மக்கள் தற்போது சிறுசிறு உடல் தொந்தரவுகளுக்கு சித்தா, ஆயுர்வேதா பக்கம் திரும்புகின்றனர். பலரும் இந்த வைத்திய முறைகள் பக்க விளைவுகள் அற்றது என்று நம்புகின்றனர்.
காய்ச்சல் , இருமல் , உடல் பருமன், நீரிழிவு , சிறுநீரகக்கல் , கல்லீரல் கொழுப்பு , வயிற்றுப் புண் உள்ளிட்ட சில நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு மக்கள் பாரம்பரிய வைத்திய முறைகளை தற்போது நாடுகின்றனர். ஆயினும் சித்தா, ஆயுர்வேத மருந்துகள் வேலை செய்ய அதிக நேரம் ஆவதாகக் கூறுகின்றனர்.
இதற்கு சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவ நிபுணர்கள்,
"பாரம்பரிய மருந்துகளின் வீரியம் சில சமயம் வேகமாகவும் சில சமயம் மெதுவாகவும் இருக்கும். இது மருந்து உட்கொள்பவரின் உடல், அந்த மருந்தை ஏற்றுக்கொள்ளும் வேகத்தை பொறுத்து மாறுகிறது. மேலும் அதிவேகமாக வேலை செய்யும் ரசாயனங்கள் எதுவும் அதில் சேர்க்கப்படுவது இல்லை. இந்த மருத்துவம் உடனடி பலன் தருவதைவிட நல்ல பலன் தரும்.பெரும்பாலான மக்கள்
தங்கள் நோய்களுக்கு அலோபதி மருத்துவம் பலன் அளிக்காத பட்சத்தில்தான் பாரம்பரிய வைத்திய முறைகளை தேடி வருகின்றனர். இவர்கள் வரும் நேரத்தில் அந்த நோய் முற்றி போய் குணமளிக்க முடியாத நிலைக்கு சென்று விடுகிறது. இதுபோன்ற சூழலில் பாரம்பரிய வைத்தியம் செயல்பட மிகவும் அதிக நாட்கள் தேவைப்படுகின்றன.
சில சமயங்களில் நோயின் தீவிரத் தன்மையில் மருந்தின் வீரியம் பலனளிக்காமல் போய்விடும். ஆரம்ப காலக்கட்டத்தில் நோயின் தாக்கமறிந்து பாரம்பரிய வைத்தியத்தை நாடினால் நல்ல பலன் கிடைக்கும் . பாரம்பரிய மருந்துகளின் விளைவுகள் நோயின் வேர் வரை சென்று குணமாக்கும்"
என்று கூறுகின்றனர்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)