வாழை இலையில் முதலில் உப்பு வைக்கும் மர்மம் இதுதான்! 99% பேருக்குத் தெரியாத உண்மையான காரணம்!

Eating habits
Eating habits
Published on

ஒவ்வொரு மனிதனுக்கும் உணவு என்பது இன்றியமையாத ஒன்றாகும். அந்த உணவு கிடைப்பது என்பது பலருக்கும் எளிது! ஏழை மக்களுக்கு அரிதினும் அரிது! உணவை நாம் எல்லோரும் சரியான முறையில் சாப்பிடுகிறோமா என்றால் அப்படி சாப்பிடுபவர்கள் எண்ணிக்கை சற்று குறைவாகவே உள்ளது. உணவை சாப்பிடுவதற்கு முறை இருக்கிறதா (Eating habits) ? என்று கேட்டால் கட்டாயமாக இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

1. தரையில் அமர்ந்து சாப்பிட வேண்டும்

இந்த காலத்தில் அனைவரும் டைனிங் டேபிள் என்று சொல்லக்கூடிய ஒரு சாப்பாட்டு மேசையில் வைத்து தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படி சாப்பிடுவது சரியான முறை அல்ல. எப்பொழுதும் சாப்பிடும் போது தரையில் பந்திப்பாய் என்று சொல்லக்கூடிய ஒரு பாயை விரித்து அதன் மேல் அமர்ந்து சாப்பிட்டால் சிறப்பாக இருக்கும். ஏதாவது விரிப்பை கூட விரித்து அதில் அமர்ந்து சாப்பிடலாம்.

2. மூன்று திசைகளில் அமர்ந்து சாப்பிடலாம்

நாம் எப்பொழுதும் சாப்பிட அமரும் போது கிழக்கு, மேற்கு, தெற்கு ஆகிய ஏதாவது ஒரு திசையை நோக்கி அமர்ந்து சாப்பிடலாம். இவ்வாறு அமர்ந்து சாப்பிடுவது உடலுக்கு நன்மை தரும் என்று நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள். வடக்கு திசையை நோக்கி அமர்ந்து சாப்பிடக்கூடாது. வடக்கு திசையை நோக்கி அமர்ந்து சாப்பிடும் போது உடலுக்கு பல உபாதைகள் வரும் என்றும், செரிமானக் கோளாறுகள் ஏற்படும் என்றும் சான்றோர்கள் கூறுகிறார்கள்.

நாம் ஹோட்டல்கள் மற்றும் திருமண நிகழ்ச்சிகள் ஆகிய இடங்களுக்குச் செல்லும் போது எப்பொழுதும் எதிர் எதிரே உட்கார்ந்து சாப்பிடுவது போல அமைப்பை ஏற்படுத்தி இருப்பார்கள். இப்படி எதிரெதிரே அமர்ந்து சாப்பிடுவதால் வடக்கு திசை மறைக்கப்படும். நாம் தனியாக வடக்குத் திசையை நோக்கிச் சாப்பிடக் கூடாது. நமக்கு எதிர் திசையில் ஒருவர் இருந்தால் நாம் சாப்பிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி வடக்கு திசையை தவிர்த்து இந்த மூன்று திசைகளிலும் அமர்ந்து சாப்பிடுவது சாலச் சிறந்ததாகும்.

3. சாப்பிடும் முறை

சாப்பிடுவதற்கு முன் கை, கால் முகங்களை நன்றாகக் கழுவி விட்டு சாப்பிடுவதற்கு அமர வேண்டும். தரையில் ஏதாவது ஒரு விரிப்பை விரித்து மூன்று திசைகளிலும், ஏதாவது ஒரு திசையை நோக்கி அமர்ந்து தட்டிலோ அல்லது வாழை இலையிலோ சாப்பிட ஆரம்பிக்க வேண்டும். வாழை இலையில் சாப்பிடுவது உடலுக்கு மிகுந்த நன்மை தருகிறது.

இப்படி வாழையிலேயே உணவை நாம் சாப்பிடும் போது, அந்த வாழை இலையில் உடலுக்குத் தேவையான சத்துக்களும், நம் உடலுக்குள் சென்று நன்மையைத் தருகின்றன. நாம் சாப்பிடச் செல்லும் எல்லா இடங்களிலும் உணவை பரிமாறும் போது வாழை இலையில் ஒரு ஓரத்தில் உப்பை வைப்பார்கள். இதற்குண்டான காரணத்தை சிலரிடம் கேட்டால், “உப்பிட்டவரை உள்ளளவும் நினை!” என்ற ஒரு பழமொழியைக் கூறி பண்பாட்டை பறைசாற்றுவார்கள். மற்றவர்கள் உணவில் உப்பில்லாமல் இருக்கும் போது அந்த உப்பை எடுத்து நாம் சாப்பாட்டுடன் சேர்த்துக் கொண்டால் நமக்கு சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும் என்பார்கள்.

ஆனால் இதற்கு அறிவியல் பூர்வமான காரணம் ஒன்று இருக்கிறது. அந்த உப்பு எதற்கு வைக்கிறார்கள் என்று கேட்டால், அந்த உப்பினை கொஞ்சம் கையில் எடுத்து நமக்கு தம்ளரில் வைத்திருக்கும் தண்ணீரை கையில் ஊற்றி அந்த உப்பைக் கரைத்து அந்த வாழை இலையில் நன்றாக தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்யும்போது எந்த ஒரு நுண்கிருமிகளும் வாழை இலையில் இருக்காது என்பது அறிவியல் பூர்வமான உண்மையாகும். இந்த உப்பானது அந்த இடத்தில் ஒரு கிருமி நாசினியாக செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இலையில் உணவை பரிமாறிய பிறகு இந்த உணவை கொடுத்த கடவுளுக்கு கண்களை மூடி ஒரு இரண்டு நிமிடம் நன்றியைத் தெரிவிக்க வேண்டும். பின்னர் சாப்பாடை எடுத்து மெதுவாக மென்று ரசித்து ருசித்து சாப்பிட வேண்டும்.

4. "நொறுங்கத் தின்றால் நூறு வயது" என்பது பழமொழி அதைப்போல சாப்பாடை மென்று பொறுமையாக சாப்பிட வேண்டும். அவ்வாறு சாப்பிடும் போது உடல் எடை அதிகரிக்காது, உடல் நல்ல ஆரோக்கியமாக இருக்கும் என்பது நிதர்சனமான உண்மையாகும். சாப்பிடும் போது பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். யாருடனும் பேசாமல் சாப்பிடுவது சிறப்பாக இருக்கும். பேசிக்கொண்டே சாப்பிட்டால் சாப்பாடு ஒரு சில நேரங்களில் மூக்கின் வழியாக ஏறி மூச்சு குழலை அடைத்து உயிருக்கு ஆபத்தைக் கூட ஏற்படுத்தலாம். ஆகையால் சாப்பிடும் போது பேசாமல் சாப்பிடுவது நன்மை தரும்.

சாப்பிடும் போது கைகளை தரையில் ஊன்றிக் கொண்டு சாப்பிடக் கூடாது. நாம் சாப்பிடும் உணவுடன் எப்பொழுதும் மோர் சேர்த்துக் கொள்ள வேண்டும். காலநிலைக்கு ஏற்றார் போல மோர் சேர்த்துக் கொண்டால் சிறப்பாக இருக்கும். சாப்பிட்டு முடிக்கும் போது எப்பொழுதும் இறுதியில் ரசம் சேர்த்து சாப்பிட்டால் நல்லது. இவ்வாறு ரசம் சேர்த்து சாப்பிடுவது செரிமானத்திற்கு உதவியாக இருக்கும். நாம் சாப்பிடும் போது இடையிடையே தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

உணவுக்கு அரைமணி நேரத்திற்கு முன்பு தண்ணீர் குடிக்க வேண்டும். இல்லையெனில் உணவு சாப்பிட்ட பிறகு அரை மணி நேரம் கழித்து தண்ணீர் குடிப்பது நல்லது. கைகளில் உள்ள விரல்களில் உள்ளவற்றை நன்றாக சுவைத்து சாப்பிட வேண்டும். இப்படி சுவைத்துச் சாப்பிடுவதால் கைகளில் இயற்கையாகவே இருக்கக்கூடிய சில நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் நம் உடலுக்குள் சென்று உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

சாப்பிடும் போது உணவை வீணாக்காமல் சாப்பிட வேண்டும். எந்த ஒரு பருக்கை சோறும் கீழே விழாமல் சாப்பிட வேண்டும். எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று சாப்பிட்டால் நமக்கு உடல் நலத்தில் ஏதாவது பாதிப்புகள் ஏற்படும். ஆனால், இப்படித்தான் சாப்பிட வேண்டும் என்ற ஒரு வரைமுறையோடு சாப்பிட்டால் நாம் எந்த ஒரு நோயும் இல்லாமல் ஆரோக்கியத்துடன் வாழலாம் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

“காலை வேளையில் ராஜா போலவும், மதிய வேளையில் மந்திரி போலவும், இரவு வேளையில் பிச்சைக்காரன் போலவும் சாப்பிட வேண்டும்!” என்பது கிராமத்துப் பழமொழி.

காலையில் நாம் எப்பொழுதும் நன்றாகச் சாப்பிட வேண்டும். ஏனென்றால் நமக்கு உடல் உழைப்பு அதிகமாக இருக்கும். ஆகையால் நமக்கு உடலுக்குச் சக்தி தேவைப்படும். காலை உணவினை நன்றாக எடுத்துக் கொள்ள வேண்டும். மதிய உணவை ஒரு மிதமான அளவில் எடுத்துக் கொண்டால் சிறப்பாக இருக்கும்.

5. சிலர் “சோறு கண்ட இடம் சொர்க்கம்” என்பதைப் போல இரவில் அதிகமான உணவை அதிலும் துரித உணவை எடுத்துக் கொள்கிறார்கள். இப்படி சாப்பிடுவதால் அவர்களின் உடல் எடை அதிகரித்து, இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு மரணம் நிகழ்கிறது. இரவு உணவை நாம் அதிகமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏனென்றால் இரவில் நாம் தூங்கச் சென்று விடுவோம். ஆகையால் நம்முடைய உடல் உறுப்புகள் எல்லாம் ஓய்வு நிலையில் இருக்கும்.

அந்த நேரத்தில் அதிகமான உணவுகளை எடுத்துக் கொண்டால் நாம் உடல் உறுப்பு அதிகமாக வேலை செய்ய வேண்டிய தேவையிருக்கும். இதனால் நமக்கு பல உடல் உபாதைகள் ஏற்படும்.

இதையும் படியுங்கள்:
New Tech: 3 மாசத்துல கரைஞ்சு போகும் 'ரீசார்ஜபிள் பிளேட்' - எலும்பு முறிவை சரிசெய்யும் மேஜிக்!
Eating habits

செரிமானம் ஆகாமல் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற இன்னல்கள் ஏற்படும். ஆகையால் இரவு உணவை நம் அதிகமாக எடுத்துக் கொள்ளாமல் ஓரளவு எடுத்துக் கொண்டால் சிறப்பாக இருக்கும்.

“பசிக்காக புசிக்க வேண்டுமே தவிர ருசிக்காக புசிக்கலாகாது” என்பது பழமொழி நம் வயிற்று பசிக்காக மட்டுமே சாப்பிடுகிறோம். ருசிக்காக சாப்பிடவில்லை என்பதை உணர்ந்து சாப்பிட வேண்டும்.

இதையும் படியுங்கள்:
தினமும் சாப்பிடுறதை நிறுத்துங்க! இந்த '36 மணி நேர விரதம்' உங்க குப்பைகளை சுத்தம் பண்ணிடும்!
Eating habits

“உணவே மருந்து! மருந்தே உணவு!” என்ற முறைப்படி ஒவ்வொருவரும் உணவை உட்கொண்டு வந்தால் நம்முடைய வாழ்க்கை சிறப்பான முறையில் செல்லும் என்பது நமக்கு எழுதப்படாத விதியாகும்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com