

மார்கழி மாதம் வந்தாலே குளிரும் தானாகவே வந்துவிடும். குளிர் காலத்தில் சொல்லவே வேண்டாம் மதியம் ஒரு மணிக்கு கூட தண்ணீர் ஐஸ் கட்டி போல் குளிரும். குளிர்காலங்களில் வென்னீரில் வைத்து சற்று வெதுவெதுப்பாக குளிப்பது பலரின் வழக்கமாக உள்ளது. இதற்காக நமக்கு இருக்கும் ஆப்ஷன்களில் முக்கியமானதாக இருப்பது 'வாட்டர் ஹீட்டர்'. தற்போதைய காலகட்டத்தில் அனைவரது வீடுகளிலும் 'வாட்டர் ஹீட்டர்' உள்ளது. ஆனால் சமீபகாலமாக குளியல் அறையில் கீசர் ரக 'வாட்டர் ஹீட்டர்'களை பயன்படுத்தும் போது உயிரிழப்புகள் ஏற்படும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
சில தினங்களுக்கு முன் உத்தரப்பிரதேசத்தில் பிலிபித் மாவட்டத்தில் ஒரு அரசு ஊழியரும் அவரது மனைவியும் குளியலறையில் வாயு கீசர் இயங்கிக்கொண்டிருந்தபோது, ஆக்சிஜன் பற்றாக்குறையால் மூச்சுத்திணறி இறந்த சம்பவம் நாடுமுழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அதேபோல் அலிகரில் வாயு கீசரால் ஏற்பட்ட விபத்தில் 12 வயது குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்தது. அதாவது கீசர் ரக வாட்டர் ஹீட்டரில் இருந்து வெளியேறிய கார்பன் மோனாக்சைடு இதற்கு காரணமாக சொல்லப்பட்டது. இதேபோல் சமீப காலங்களில் பெங்களூரு, ஆக்ரா உள்ளிட்ட பகுதிகளிலும் பலர் உயிரிழந்ததற்கு இந்த கீசர் ரக வாட்டர் ஹீட்டரால் ஏற்பட்ட விபத்து காரணம் என கூறப்படுகிறது. இந்த சம்பவங்கள் குளிர்காலத்தில் கீசர் பயன்பாட்டில் கவனக்குறைவால் ஏற்படும் ஆபத்துகளை எடுத்துக்காட்டுகின்றன.
சூடு தண்ணீர் வைப்பதற்காக வாங்கி வைத்த கீசர் ரக வாட்டர் ஹீட்டர்கள் உயிருக்கே உலைவைக்கும் சாதனமாக மாறுவது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.
எலெக்ட்ரிக் மற்றும் கேஸ் என என கீசர் வாட்டர் ஹீட்டரில் இரண்டு வகைகள் இருக்கின்றன. எலெக்ட்ரிக் கீசர் மின்சாரத்தை பயன்படுத்தி தண்ணீரை சூடாக்கவும், கேஸ் கீசர் LPG கேஸ் மூலம் காற்றில் உள்ள ஆக்சிஜனை பயன்படுத்தி தண்ணீரை சூடாக்குகிறது. அந்த வகையில் எலெக்ட்ரிக் கீசர் விட LPG கேஸ் கீசர் மூலம் காற்றில் உள்ள ஆக்சிஜனை பயன்படுத்துவதில் தான் பிரச்சனை ஆரம்பமாகிறது.
கேஸ் கீசர் ஹீட்டர் சூடாகும் போது ஆக்சிஜனை பயன்படுத்தி நச்சுத்தன்மை மிகுந்த கார்பன் மோனாக்சைடை(Carbon Monoxide) வெளியேற்றுகிறது.
அதாவது, கேஸ் கீசர்கள் கார்பன் மோனாக்சைடு (Carbon Monoxide) போன்ற விஷ வாயுக்களை வெளியேற்றுகின்றன, இது குளியலறையில் ஆக்சிஜனை குறைத்து மூச்சுத்திணறலை ஏற்படுத்துகிறது. அப்படி கேஸ் கீசல் ஹீட்டர் மூலம் வெளியேறும் கார்பன் மோனாக்சைடு என்ற நச்சு மனிதர்களின் நுரையீரலில் தங்கி முதலில் மூளைக்கு போகும் ஆக்சிஜன் துண்டித்து உயிரிழப்பிற்கு காரணமாகிறது.
கேஸ் கீசர் ஹீட்டரில் இருந்து குறைந்த நேரத்தில் அதிகளவு நச்சுப்புகை வெளியில் வரும் போது அது கார்பன் மோனாக்சைடாக வெளியில் வருகிறது. பிரச்சனை என்னவென்றல் அந்த கார்பன் மோனாக்சைடு வெளியாவதற்கும், அதனை ஒருவர் சுவாசித்து மயக்கமடைவதற்கும் உள்ள இடைவெளி மிகவும் குறைவானது என்று எச்சரிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
இந்த புகையால் நம்முடைய நுரையீரல் பாதிக்கப்போகிறது, நாம் மயக்கமடைய போகிறோம் என்பதை நம்மால் கண்டுபிடிக்கவே முடியாது. அதனால் இந்த இந்த போன்ற கேஸ் லீக்காகும் போது மக்களால் வெளியில் வரமுடிவதில்லை.
ஒருவேளை உங்களுக்கு மயக்கம் வருவதை போன்று இருந்தால் உடனடியாக குளியல் அறையை விட்டு வெளியில் வரவேண்டும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
நச்சு வாயுவை வெளியிடும் கீசரை அணைத்து விட்டு வெளியில் வந்து சாதாரண ஆக்சிஜனை சுவாசித்தால் போதும் என்கின்றனர். மேலும் மிகவும் துரிதமாக செயல்பட வேண்டும் என்றும், மயங்கி விட்டால் CPR செய்யலாம் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
பழுதடைந்த கீசர்கள் அல்லது முறையாக பராமரிக்காத கீசர் காரணமாக மின்சார அதிர்ச்சி ஏற்படுகிறது. கேஸ் கீசரில் இருந்து கார்பன் மோனாக்சைடு வெளியேறுவதற்கு பழைய பராமரிக்கப்படாத கீசரை பயன்படுத்துவது, காற்றோட்டம் இல்லாத குளியல் அறையில் பயன்படுத்துவது, நீண்ட நேரம் கீசரை இயக்குவது போன்றவை முக்கியமாக காரணமாக கூறப்படுகிறது. அதேபோல் கீசர்களின் பாதுகாப்பு அம்சங்களை (Safety Valves) சோதித்து, முறையாக பராமரிப்பது உயிர் சேதத்தை தவிர்க்கும்.
இதற்கு மாற்றாக எலெக்ட்ரிக் வாட்டர் ஹீட்டர்களையும், சோலார் வாட்டர் ஹீட்டர்களையும் பயன்படுத்தலாம் என்றும், இதனால் உயிரிழப்புகளை தவிர்க்க முடியும் என்பதே நிபுணர்களின் பரிந்துரையாக இருக்கிறது.