
பாதங்கள் நம் உடலில் மிக முக்கியமான பாகமாக இருந்தாலும் அவற்றை பெரும்பாலும் நாம் கவனிப்பதில்லை. நடப்பது, ஓடுவது, மிதிப்பது என நம் அன்றாட நடவடிக்கைகளில் பாதங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை நம் உடல்நிலையைப் பற்றி பல விஷயங்களை வெளிப்படுத்தும். ஆனால், இது நம்மில் பலருக்குத் தெரியாது. பாதங்களில் ஏற்படும் சில மாற்றங்கள் நம் உடலில் உள்ள சிக்கல்களைப் பற்றி நமக்கு முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும். இந்தப் பதிவில் உங்கள் உடல் நலையைப் பற்றி பாதங்கள் வெளிப்படுத்தும் சில உண்மைகளைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதங்களில் புண்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். இது நரம்பு சேதம், ரத்த ஓட்ட குறைபாடு போன்ற காரணங்களால் ஏற்படுகிறது. இந்த புண்கள் மிகவும் மெதுவாக ஆறும். இதனால், தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
பாதங்களில் வீக்கம் ஏற்பட்டால் அது இதய நோயின் ஒரு அறிகுறியாக இருக்கலாம். இது ரத்த நாளங்களைச் சுருக்கி இதயத்திற்கு போதுமான ரத்தம் செல்லாததால் ஏற்படுகிறது.
தைராய்டு சுரப்பி அதிகமாகவோ அல்லது குறைவாகவோ செயல்படும்போது பாதங்களில் பல மாற்றங்கள் ஏற்படலாம். வறண்ட தோல், வெடிப்புகள் மற்றும் விரல் நகங்கள் உதிர்வது போன்றவை இதனால் ஏற்படலாம்.
உடலில் சில விட்டமின்கள் குறைவாக இருப்பது பாதங்களில் தெளிவாகத் தெரியும். குறிப்பாக, விட்டமின் பி12 குறைபாடு இருந்தால் பாதங்களில் வலி, விரைப்பு மற்றும் எரிச்சல் உணர்வு ஏற்படலாம்.
பாதங்கள் மரத்துப் போதல், எரியும் உணர்வு, வலி போன்றவை நரம்பு சேதத்தின் அறிகுறியாகும். வைட்டமின் குறைபாடு நீரிழிவு நோய் மற்றும் பிற நோய்களால் இந்த அறிகுறிகள் உண்டாகும்.
உங்கள் கால்களின் தசைகள் இறுக்கமாக இருந்தால், நீங்கள் அதிக நேரம் நின்று கொண்டிருப்பது அல்லது அதிகமாக நடப்பது போன்ற காரணங்களாக இருக்கும். இதனால், பாதங்களில் வலி மற்றும் விறைப்பு ஏற்படலாம்.
வாத நோய் உள்ளவர்களுக்கு பாதங்கள் அதிகமாக வலிக்கும். இது மூட்டுகளில் ஏற்படும் வீக்கம், எலும்பு தேய்வதால் ஏற்படுவதாகும்.
இவ்வாறு நம் பாதங்கள் நம் உடலின் ஆரோக்கியத்தைப் பற்றி பல முக்கியமான தகவல்களைத் தெரிவிக்கின்றன. மேலே, குறிப்பிட்ட அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் நீங்களாகவே வைத்தியம் செய்ய முயற்சிக்காமல், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. உங்கள் உடலில் என்ன பாதிப்பு உள்ளது என்பதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதால், பல சிக்கல்களைத் தவிர்க்கலாம்.