தற்காலத்தில் குழந்தைகளுக்கான எம்.டி. (பீடியாட்ரிக்ஸ்) மற்றும் டிசிஎச் படித்த குழந்தை நல மருத்துவர்கள் பலர் இருக்கிறார்கள். குழந்தை நல சிறப்பு மருத்துவர்களின் கிளினிக்கின் முன்னால் பெண்கள் குழந்தைகளோடும் கவலைகளோடும் காத்துக்கிடப்பதைப் பார்க்கிறோம். ஆனால் அக்காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு குழந்தை நல மருத்துவர்கள் இருந்தார்கள். யார் அந்த மருத்துவர்கள் ? வாருங்கள் இந்த பதிவில் தெரிந்து கொள்ளுவோம்.
அக்காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் பாட்டியும் அம்மாவும் குழந்தை நல மருத்துவர்களாக இருந்தார்கள். குழந்தை அழும்விதத்தை வைத்தே அதற்கு என்ன பிரச்சினை என்பதை சுலபமாகக் கண்டுபிடித்துவிடும் அனுபவமும் ஆற்றலும் அவர்களுக்கு இருந்தது.
பிறந்த குழந்தையை குளிப்பாட்டுவது பாட்டிகளின் பொறுப்பு. பிறந்த குழந்தையை குளிக்க வைப்பது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. அதை மிகவும் லாவகமாகச் செய்வார்கள். நன்றாக குளிக்கவைத்து தூய்மையான சாம்பிராணி கட்டிகளை உடைத்து கரியினை எரித்து அதில் சாம்பிராணித் தூளைப் போட்டு விடுவார்கள். சாம்பிராணி புகை வீடு முழுவதும் பரவி வீடே மணக்கும். குழந்தை நன்றாக நிம்மதியாக ஆழ்ந்து தூங்கும்.
தற்போது எல்லோர் வீட்டிலும் பாராசிட்டமல் மாத்திரை இருப்பதைப் போல அக்காலத்தில் அனைவர் வீட்டிலும் நாமக்கட்டி இருக்கும். சாக்பீஸ் போன்று வெள்ளை நிறத்தில் சற்று கனமாக இருக்கும். அக்காலத்தில் வயிற்று வலி ஏற்பட்டால் உடனே நாமக்கட்டியை தண்ணீர் விட்டு குழைத்து அதை விரலில் எடுத்து தொப்புளைச் சுற்றித் தடவுவார்கள். வயிற்றுவலிக்கு அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட கண்கண்ட மருந்து இதுதான்.
குழந்தைகளுக்கு சளி பிடித்தால் ஒரு கரண்டியில் சிறிது தேங்காய் எண்ணெயை விட்டு அதில் கற்பூரத்தைப் போட்டுக் காய்ச்சி குழந்தையின் நெற்றியிலும் மார்பிலும் முதுகிலும் நன்றாகத் தேய்த்து விடுவார்கள். அதன் வாசனையை குழந்தையை முகர வைப்பார்கள். சிறிது நேரத்தில் சளி இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
அக்காலத்தில் வீட்டிலுள்ள பாட்டிமார்கள் அனைத்து வியாதிகளுக்கும் ஒரு கை வைத்தியம் வைத்திருப்பார்கள். உடனே செயலில் இறங்கியும் விடுவார்கள். கைக்குழந்தைகள் திடீரென வீல் வீல் என்று அழத்தொடங்கும். பாட்டிமார்கள் இதைப் பார்த்ததும் குழந்தைக்கு உரம் விழுந்துடுச்சி என்று சொல்லி அதை சரி செய்யும் வைத்தியத்தில் இறங்கி விடுவார்கள். குழந்தையின் கால்களைப் பிடித்து தலைகீழாக ஆட்டுவார்கள். சிறிது நேரத்தில் குழந்தை அழுகையை நிறுத்திவிடும்.
சிலர் இதற்கு மற்றுமொரு வைத்தியத்தைச் செய்வார்கள். ஒரு போர்வையை தரையில் விரித்து அதன் நடுவில் குழந்தையைப் படுக்க வைத்து நான்கு புறமும் ஆளுக்கொருவர் போர்வையின் முனையைப் பிடித்து குழந்தையை பாதுகாப்பாக உருட்டுவார்கள். உரம் விழுந்ததை சரிசெய்ய இந்த முறை பரவலாகப் பின்பற்றப்பட்டது. இக்காலத்தில் இதுபோன்ற முரட்டு வைத்தியத்தை யாரும் செய்வதில்லை.
அக்காலத்தில் அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஒரு வருடம் வரை தாய்பால் ஊட்டி வளர்ப்பார்கள். குழந்தை போதிய ஊட்டச்சத்துக்களைப் பெற்று ஆரோக்கியமான குழந்தையாக வளரும். ஒவ்வொரு வீட்டிலும் புடவையைத் தூளியாகக் கட்டி அதில் குழந்தையைப் படுக்க வைத்து தாலாட்டு பாடித் தூங்க வைப்பார்கள். குழந்தை நிம்மதியாகத் தூங்கும்.
கூட்டுக் குடும்பச் சூழ்நிலையில் குழந்தைகளை தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, உற்றார், உறவினர்களின் பெரும் அரவணைப்போடும் பாதுகாப்போடும் ஆரோக்கியத்தோடும் வளர்ந்தார்கள். அக்காலத்தில் தற்போது உள்ளது போல எதற்கெடுத்தாலும் மருத்துவரை நாடும் வழக்கமும் இல்லை.