கொலஸ்ட்ரால் என்பது கல்லீரலில் உற்பத்தி செய்யப்படும் ஒரு வகை கொழுப்புப் பொருள். இது லிப்போபுரோட்டீன்களால் இரத்தக் குழாய்களுக்குள் எடுத்துச் செல்லப்படுகிறது. நல்ல கொலஸ்ட்ரால்களின் பவர் ஹவுஸ் எனக் கூறப்படும், மூன்று உணவுப் பொருட்களால் ஆன பச்சை நிற சட்னி எப்படி செய்வது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
இந்த பவர் ஹவுஸ் சட்னி புதினா இலை, முருங்கை இலை மற்றும் சியா விதைகளை சேர்ந்து அரைக்கப்படும் ஒரு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சட்னி. சியா விதைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் நிறைந்துள்ளன. இது நம் உடலில் உள்ள நல்ல கொழுப்பின் (HDL) அளவை அதிகரிக்கச் செய்யும். இதனால் இதய ஆரோக்கியம் மேன்மையடையும்.
முருங்கை இலைகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இவை உடலில் உண்டாகும் ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ் மற்றும் வீக்கங்களைக் குறைக்க உதவும். முருங்கை இலைகள் மற்றும் சியா விதைகள் இரண்டிலுமே நார்ச் சத்துக்கள் மிக அதிகம் உள்ளன. இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் (LDL) அளவைக் குறைக்க உதவும். மேலும், நல்ல கொழுப்பின் உற்பத்தி அளவை உயர்த்தவும் துணை புரியும்.
புதினா இலை, முருங்கை இலை மற்றும் சியா விதைகள் ஆகிய மூன்று பொருட்களிலுமே உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் கனிமச் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. குறிப்பாக வைட்டமின் C, E மற்றும் மக்னீசியம் சத்துக்களைக் கூறலாம்.
சியா விதைகளில் உள்ள நார்ச்சத்து செரிமானம் சிறந்த முறையில் நடைபெறவும் ஜீரண மண்டல உறுப்புகளின் ஆரோக்கியம் மேம்படவும் உதவி புரியும். இதன் தொடர்ச்சியாக நல்ல கொழுப்புகளின் அளவு உயரும்; மொத்த இதய ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும். இந்த மூன்று பொருட்களும் ஒன்றிணைந்து செயல்படும்போது அதிலிருக்கும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணங்கள் வெளிப்பட்டு உடலின் நல்ல கொழுப்புகளின் அளவை உயர்த்தவும் இதய ஆரோக்கியம் பாதுகாக்கப்படவும் உதவி புரியும்.
சியா விதைகள், புதினா இலை, முருங்கை இலைகள் ஆகிய மூன்று பொருட்களுடன் பூண்டு, பச்சை மிளகாய் உப்பு சேர்த்து சட்னி செய்து சாப்பிட உடல் ஆரோக்கியம் மேம்படும்; நோய்த் தாக்குதல் குறையும்.