மாதுளை ஜூஸ் (Pomegranate juice) அதன் அதிகப்படியான ஆக்ஸிஜனேற்றிகள் (Antioxidants), வைட்டமின் சி உள்ளடக்கம் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பது, மற்றும் இரத்த அழுத்தத்தை (BP) பராமரிப்பது போன்ற பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதில் சிறந்து விளங்குகிறது. இருப்பினும், இந்த சக்திவாய்ந்த பழச்சாறு அனைவருக்கும் உகந்தது அல்ல.
குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள், ஒவ்வாமை இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள், சில மருந்துகளை உட்கொள்பவர்கள், மற்றும் இரைப்பை குடல் கோளாறுகள் (Gastrointestinal Disorders) கொண்டவர்கள் மாதுளை ஜூஸை உட்கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும் அல்லது முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில், சில சமயங்களில் இதன் நுகர்வு எதிர்பாராத அல்லது தீங்கு விளைவிக்கும் உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.
மாதுளை ஜூஸ் குடிக்கக் கூடாதவர்கள்:
1. குறைந்த இரத்த அழுத்தம் இருப்பவர்கள்: மாதுளை சாறு இரத்த அழுத்தத்தை குறைக்கும். இது உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் ஒருவருக்கு இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால், அவர்கள் மாதுளை சாறு குடிக்கக் கூடாது. இது தலைசுற்றல் மற்றும் மயக்கம் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும்.
2. ஒவ்வாமை இருப்பவர்கள்: பலருக்கு மாதுளை அல்லது மாதுளை சாறு எடுத்துக்கொள்வது ஒவ்வாமை பிரச்னையை ஏற்படுத்தும். அத்தகைய சூழ்நிலையில் அரிப்பு, வீக்கம், சுவாசிப்பதில் சிரமம் போன்ற ஒவ்வாமையை ஏற்படும். மாதுளை ஜூஸை குடித்த பிறகு இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால், மாதுளை சாற்றை தவிர்க்க வேண்டும்.
3. சர்க்கரை நோய் இருப்பவர்கள்: பொதுவாக, சர்க்கரை நோயாளிகள் மாதுளை ஜூஸில் கிளைசெமிக் இன்டெக்ஸ் குறைவாக இருப்பதாக நினைத்துக் குடிப்பார்கள். ஆனால், அதில் இயற்கை சர்க்கரை உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மாதுளம் பழச்சாறு அருந்தும்போது சர்க்கரை அளவை பரிசோதிக்க வேண்டும்.
4. மருந்து எடுத்துக் கொள்பவர்கள்: மாதுளை சாறு பல வகையான மருந்துகளுடன் தொடர்பு கொள்கிறது. இந்தத் தொடர்பு இரத்தத்தில் இந்த மருந்துகளின் அளவை அதிகரிக்கலாம். இது எதிர்மறையான எதிர்வினையை ஏற்படுத்தும். உதாரணமாக, நீங்கள் இரத்த அழுத்த மருந்துகளை எடுத்துக்கொண்டால், அவற்றின் விளைவை அதிகரிக்கலாம். ஆகவே, மருந்து உட்கொள்பவர்கள் மாதுளை ஜூசை தவிர்க்கலாம்.
5. இரைப்பை குடல் கோளாறுகள் இருப்பவர்கள்: இவர்கள் மாதுளை சாற்றை அதிகமாக உட்கொண்டால், அது சில சமயங்களில் வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்னைகளை ஏற்படுத்தும். எனவே, யாரேனும் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி இருந்தால், அவர்கள் மாதுளை சாற்றைத் தவிர்க்க வேண்டும். மருத்துவர் ஆலோசனையின் பேரிலேயே இதனை உட்கொள்ள வேண்டும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)