
பொதுவாக முளை கட்டிய உணவுப் பொருள்கள் ஊட்டச் சத்துக்களின் பவர் ஹவுஸ் என்றும், அவற்றில் நார்ச்சத்து, வைட்டமின்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், ஜீரணம் சிறக்கவும் இரைப்பை குடல் இயக்க ஆரோக்கியம் மேம்படவும் உதவும் என்ஸைம்கள் அதிகம் என்றும் கூறுவதைக் கேட்டிருக்கிறோம். குறைந்த கலோரி அளவு மற்றும் அதிக ப்ரோடீன் சத்துக்களுடையை முளை கட்டிய உணவுப் பொருள்கள் எடை பராமரிப்பிற்கும் தசைகளின் சீரமைப்பிற்கும் கூட உதவும். ஆனால், முளை விட்ட எல்லா பொருள்களும் பாதுகாப்பானதல்ல.
அவற்றில் சில விஷத்தன்மை கொண்டு உடலுக்கு தீங்கிழைக்கவும் செய்யும். அப்படிப்பட்ட மூன்று முளை விட்ட பொருட்கள் என்னென்ன, அவற்றை ஏன் உண்ணக் கூடாது என்பதை இப்போது பார்க்கலாம்.
1. முளை விட்ட வெங்காயம்: வெங்காயம் முளைத்து வரும்போது அதிலிருந்து அதிகளவு ஆல்கலாய்ட்ஸ் (Alkaloids), குறிப்பாக N-propyl disulphide என்ற ஆல்கலாய்ட் உற்பத்தியாகிறது. இது இரத்த சிவப்பு அணுக்களை பாதிப்படையச் செய்து ஹீமோலிட்டிக் அனீமியா (Hemolytic Anemia) என்ற நோய் வரக் காரணமாகிறது. முளைத்த வெங்காயத்தை சாப்பிடும் போது, இந்த நோயின் அறிகுறியாக குமட்டல், வாந்தி, வயிற்று வலி மற்றும் பேதி போன்ற உடல் நலக் கோளாறுகள் உண்டாகும்.
மேலும் வெங்காயத்தில் முளை வரும் செயல் நடைபெறும்போது சர்க்கரை மற்றும் ஸ்டார்ச் போன்ற சத்துக்கள் உடைக்கப்பட்டு வெங்காயம் மிருதுத்தன்மை பெறும். இதுவே வெங்காயம் நாளப்பட்டதாயிற்று, இனி அதில் பூஞ்சைகள் தோன்ற ஆரம்பிக்கும் என்று உணர்த்தும் அறிகுறியாகும்.
2. பூண்டு: வெங்காயத்தைப் போலவே பூண்டிலும் முளை வரும்போது, சல்ஃபர் என்றொறு கூட்டுப் பொருள் அதிகளவில் உற்பத்தியாகும். அது இரைப்பை குடல் இயக்கங்கள் சீர் கெடவும், இரத்த சிவப்பு அணுக்கள் ஆக்ஸிடேட்டிவ் சிதைவுறவும் வழி வகுக்கும். மேலும் முளைத்து வரும் பூண்டிலுள்ள சத்துக்கள் தளிர் வளர்ச்சிக்குப் போகுமே தவிர நம் உடம்புக்குக் கிடைக்காது. பூண்டு ரப்பர் போன்ற தன்மை பெற்று, அதன் தரமும் குறைந்து விடும்.
3. உருளைக் கிழங்கு: முளைகள் வெளியாகியுள்ள உருளைக் கிழங்கில் க்ளைகோ ஆல்கலாய்ட்ஸ் (Glyco Alkaloids) அதிகம் உண்டு. இது உருளைக் கிழங்கில், பச்சை நிறம் காணப்படும் பகுதி மற்றும் முளைகளில் அடர்த்தியாக நிறைந்திருக்கும். முளை விட்ட உருளைக் கிழங்கை உட்கொண்டால் அதிலிருந்து சொலானைன் (Solanine) எனப்படும் விஷம் உடலுக்குள் சென்று குமட்டல், வாந்தி, பேதி, தலைவலி போன்ற உடல் நலக் கோளாறுகளுடன் நியூரோலாஜிகல் பிரச்சினைகளையும் உண்டு பண்ணும். உருளைக் கிழங்கின் ருசியும் கசப்பானதாகிவிடும்.
மேற்கூறிய கரணங்களுக்காக முளை விட்ட பூண்டு, வெங்காயம், உருளைக் கிழங்கு ஆகிய மூன்றையும் நாம் உணவுடன் சேர்த்துக் கொள்வதைத் தவிர்ப்பது ஆரோக்கியம் தரும்.