நம் தாத்தாக்கள் அணிந்த, ‘பட்டாப்பட்டி’தான் இன்று ‘பாக்சர் ஷார்ட்ஸ்’ என்று கடைகளில் விற்கப்படுகின்றன. பொதுவாக, ஆண்களுக்கான உள்ளாடைகளில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் சில உள்ளன. அவை குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
உள்ளாடை என்பதை வெறும் ஆடையாக மட்டும் கருதாமல் நம் உடல் சருமத்தை பாதுகாக்கும் ஒரு சிறந்த கவசம் என்பதை நாம் மறக்கக் கூடாது. பெரும்பாலானவர்கள் தங்களுடைய உள்ளாடைகளை சரியாக தேர்வு செய்து அணிவதில்லை. ஆண்கள் அணியும் உள்ளாடைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
முதலில் சரியான அளவுள்ள உள்ளாடைகளைத் தேர்ந்தெடுத்து அணிவதும் குறிப்பாக, அவை பருத்தியாலானதாக இருப்பதும் அவசியம். சிலர் ஃபிட்டாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு மிகவும் இறுக்கமான உள்ளாடைகளை அணிவார்கள். இப்படி அணிவதால் இடுப்புக்குக் கீழே உள்ள பகுதிகளில் இரத்த ஓட்டம் தடைப்படும். இதனால் உயிரணுக்கள் உற்பத்தி கூட பாதிக்கப்படும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
சில வகை ஃபேப்ரிக் உள்ளாடைகள் வியர்வையை உறிஞ்சும் தன்மையற்றவை. இதனால் இடுப்புக்குக் கீழ் உள்ள பகுதிகளில் வியர்வை தங்கி கிருமிகளின் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம். பட்டாப்பட்டி உள்ளாடைகள் இடைப்பகுதியில் எலாஸ்டிக்குடனும், தொடை பகுதிகளில் லூசாகவும் தளர்வாகவும் இருப்பதால் அணிவதற்கு ஏற்றது.
ஆண்கள் அணியும் உள்ளாடைகளை அணிவது ஸ்டைலுக்காக மட்டுமல்லாமல், நம் சௌகரியத்திற்காகவும், இரு தொடைகளுக்கும் இடையே ரணத்தை ஏற்படுத்தாமல் இருக்கவும், உடல் பிரச்னைகளை ஏற்படுத்தாததாகவும் இருக்க வேண்டும். குளித்துவிட்டு வந்ததும் உள்ளாடை அணிவதற்கு முன் உடல் ஈரம் இல்லாமல் உலர்வாக இருப்பது சருமம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வராமல் தடுக்கும்.
கூடுமானவரை பருத்தியால் ஆன உள்ளாடைகளை அணிவதும், உடல் பாகங்களை உறுத்தாத அளவுக்கு, அதாவது மிகவும் இறுக்கமாகவோ அல்லது தளர்வாகவோ உள்ள ஆடைகளை அணியாமல் இருப்பது சிறப்பு. குறைந்தபட்சம் 4 மாதங்களுக்கு ஒரு முறை உள்ளாடைகளை மாற்றி விட்டு புதிய உள்ளாடைகளை அணிவது நல்லது.
பருத்தி: பருத்தியால் ஆன உள்ளாடைகள் மென்மையான, வியர்வை மற்றும் ஈரப்பதத்தை உறிஞ்சி எல்லா காலநிலைக்கும் ஏற்றதாக இருக்கும். தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற வகை இது.
மைக்ரோமோடல்: இது பீச்வுட் மரங்களின் கூழிலிருந்து தயாரிக்கப்படும் மென்மையான துணி வகை. இவற்றையும் தினசரி பயன்பாட்டிற்குப் பயன்படுத்தலாம். இவை வியர்வையை உறிஞ்சும் தன்மை கொண்டவை. வெப்பமான வானிலைக்கு ஏற்றதாகவும் அமைகிறது.
தரமான உள்ளாடைகளை அணிவது பூஞ்சை தொற்று ஏற்படுவதை தவிர்த்து நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.