தூக்கம் என்பது ஒவ்வொருவருக்கும் மிகவும் முக்கியமானதாகும். இன்றைய காலத்தில் அதிகப்படியான செல்போன் பயன்பாட்டால் பலர் சரியாகத் தூங்குவதே கிடையாது. இவர்கள் காலையில் எழுந்திருக்கும்போது சோர்வாக உணர்வது சாதாரணம். ஆனால் சிலர் இரவில் நன்றாகத் தூங்கினாலும் காலையில் எழும்போது சோர்வாகவே உணர்வார்கள். இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. இப்பதிவில் அதற்கானக் காரணங்கள் மற்றும் தீர்வுகள் பற்றி பார்க்கலாம்.
முறையற்ற தூக்கம்: சிலருக்கு இரவில் சரியான தூக்கமுறை இருந்திருக்காது. இதனாலும் சோர்வு ஏற்படலாம். எனவே இரவில் நன்றாகத் தூங்கி காலையில் சீக்கிரம் எழுந்திருக்கவும். காலையில் விரைவாக எழுந்திருக்கும்போது உடலும் மனதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
மனச்சோர்வு: மனச்சோர்வு பிரச்சனை இருப்பவர்கள் எப்போதுமே சோர்வாக உணர்வார்கள். அவர்கள் சரியாக தூங்கினாலும், மன அழுத்தமானது அவர்களது ஆற்றலைக் குறைத்து, எப்போதும் சோர்வைக் கொடுக்கும். எனவே இத்தகைய பிரச்சனையில் இருந்து விடுபட மன அழுத்தத்தைக் குறைக்கும் செயல்களில் ஈடுபடுங்கள். உங்களுக்குப் பிடித்ததை வாங்கி சாப்பிடுங்கள், நண்பர்களுடன் வெளியே செல்லுங்கள், நடனமாடுங்கள், உங்களுக்கு பிடித்தபடி வாழுங்கள்.
தைராய்டு பிரச்சனை: தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதபோது தைராய்டு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனால் உடலுக்கு தேவையான ஹார்மோன்கள் உற்பத்தி ஆகாமல், சோர்வு, மலச்சிக்கல், வீக்கம், சரும பாதிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும். எனவே உங்களுக்கு தைராய்டு பிரச்சனை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி அதுக்குண்டான சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.
வைட்டமின் குறைபாடு: உடலுக்குத் தேவையான விட்டமின்கள் போதிய அளவில் இல்லை என்றாலும் சோர்வு ஏற்படும். விட்டமின்கள் பல்வேறு வகையான உடல் செயல்பாடுகளுக்கு உதவுகின்றன. எனவே இதில் குறைபாடு இருந்தால் தூக்கமின்மை மற்றும் சோர்வு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இதற்கு, உடலுக்குத் தேவையான விட்டமின்கள் நிறைந்த கீரைகள், பழங்கள், பால், தயிர் முட்டை ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
மேலே குறிப்பிட்டுள்ள காரணங்களால் நீங்கள் சரியாகத் தூங்கினாலும் உங்களுக்கு உடல் சோர்வு ஏற்படலாம். இதுதவிர உங்களுக்கு வேறு ஏதேனும் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய தகுந்த மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது அவசியம். எதையும் அலட்சியமாக நினைக்காதீர்கள். பிரச்சனையை உடனடியாகக் கண்டறிதல், விரைவில் சரியான சிகிச்சையளித்து சரி செய்ய முடியும். எனவே உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள்.