நீரிழிவு நோயாளிகள் அடிக்கடி பல் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். நீரிழிவு நோய் ஈறுகளை பாதிப்படைய செய்வதோடு வாயின் இயற்கை சமநிலையை (Normal flora) மாற்றியமைக்கிறது.
நீரிழிவு நோயாளிகள் நோய் எதிர்ப்புத் திறன் குறைபாடு கொண்டிருப்பதால், அவர்களுக்கு வாயில் அதிகப்படியான நுண் கிருமி தொற்து ஏற்படுகிறது. இது ஈறுகளின் இயல்பான மறு கட்டமைப்பை தடுப்பதோடு பல்லுக்கும், ஈறுக்குமான பிணைப்பை பாதித்து பற்களை ஆட்டம் காணச் செய்கிறது. இதனால் பற்கள் விரைவில் விழுந்து விடுகின்றன.
அதுமட்டுமின்றி நீரிழிவு நோயானது எலும்புகளின் அரிப்பை ஊக்கப்படுத்தும் என்பதால் மேல் மற்றும் கீழ் தாடையில் எலும்பு அரிப்பு நிகழ அதிக வாய்ப்புண்டு. உமிழ்நீர் உற்பத்தியில் உண்டாகும் குறைபாடு வாயில் வறட்சியை உண்டாக்கி பற்சொத்தை உண்டாவதற்கான சூழலை அதிகப்படுத்துகிறது. எனவே மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
ஆறு வயது வரை, குழந்தைக்கு பால் பற்கள் விழாத போது என்ன செய்ய வேண்டும்?
பொதுவாக ஆறு முதல் பன்னிரண்டு வயது வரையுள்ள காலத்தில் பால் பற்கள் விழுந்து நிலைப் பற்கள் முளைக்கும் காலம். இது இயல்பாக நடக்கக் கூடியது. இருப்பினும் சிலருக்கு பால் பற்கள் விழுந்து ஆறு மாத காலமாகியும் நிலைப் பற்கள் முளைக்காத பட்சத்தில் அந்த இடத்தில் நெல் மணிகளை கொண்டு கீறி விடும் பழக்கம் உள்ளது. இது புதைந்து கிடக்கும் நிலைப் பற்கள் முளைத்து வெளிவர உதவி புரிந்தாலும் கிருமி தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே முறையான பல் மருத்துவ சிகிச்சை வழியாக இதை செய்வதன் மூலம் வலி மற்றும் தொற்றினை தடுக்கலாம். பொதுவாக பல் மொட்டுகளிலிருந்து பல் முளைத்தெழும்போது அந்த இடத்தில் சிலருக்கு எரிச்சல் மற்றும் வலி உண்டாகலாம்.
சுத்தமான கைகளை கொண்டு பல் முளைக்கும் இடத்தில் (Tooth Bud) மசாஜ் செய்வதன் மூலம் இந்த தொந்தரவுகளை குறைக்கலாம். விதிவிலக்காக சில குழந்தைகளுக்கு நிலைப் பற்கள் முளைத்த பின்னும் பால் பற்கள் விழாது. அப்படியே இருக்கும்.
இதனை பல் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பிடுங்கி விடுதல் நல்லது. மிக தாமதமாய் பதினெட்டு வயதுக்கு மேல்தான் அறிவுப் பற்கள் என சொல்லக்கூடிய பின் கணவாய் பற்கள் (3rd molar) முளைக்கும் காலம். இது இயல்பாய் முளைத்தெழாமல் புதைந்து கொண்டால் (impaction) அறுவைச் சிகிச்சை செய்து அகற்ற வேண்டும். இதை எடுப்பதால் பிரச்சனை எதுவும் வராது.
சரியான காலகட்டத்தில் பற்சிகிச்சை செய்து கொள்ள பல்வரிசை, பல் ஆரோக்கியம் மேம்படும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)