

அந்த காலத்தில் வெளியே செல்வது என்றால் கைக்குழந்தைகளுக்கு பருத்தித் துணியை கோமணம் ஆக கட்டி செல்வார்கள். அதுவும் ஒரு வயது அல்லது ஆறு மாதங்கள் மட்டுமே அது போல் துணிகளை கட்டிச் செல்வார்கள். அதன் பிறகு பருத்தியிலான ஜட்டிகளை அணிந்து விடுவார்கள்.
இரண்டு மணி அல்லது ஒரு மணிக்கு ஒரு தரம் குழந்தைகளை கவனித்து அதை மாற்றியும் விடுவார்கள். ஏனெனில் அப்போது பெண்களுக்கு குழந்தைகளை கவனிப்பது மட்டுமே வேலையாக இருந்தது. ஆனால் தற்போது அப்படி அல்ல; நாகரிகம் பெருகிவிட்ட நிலையில் பெண்களும் பணிக்குச் செல்லும் நிலையில் குழந்தைகளுக்கு வெளியே செல்வது என்றாலும் வீட்டில் இருப்பது என்றாலும் டயபர் எனும் உபகரணத்தை மாட்டி விட்டு வேலையை கவனிக்கிறார்கள்.
சிறுநீர் மற்றும் மலம் கழிப்பது என்றால் குழந்தைகள் அதிலேயே கழித்து விடுகிறார்கள். அதை அறிந்தால் எடுத்து சுத்தம் செய்கிறார்கள். இதுதான் இப்போதைய நடைமுறை. என்றாவது இந்த டயபரில் நச்சுத்தன்மை கலந்திருக்கும் என்று நினைத்திருப்போமா?
டயபரில் (Diaper) பித்தலேட் (Phthalates) எனும் நச்சு ரசாயனங்கள் 2.36 பிபிஎம் முதல் 302 பிபிஎம் வரை உள்ளதாக டாக்சிக்ஸ் லிங்க் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த செய்திதான் குழந்தைகள் பயன்படுத்தும் டயபரில் நச்சு ரசாயனம் இருக்கிறது என்பதை நிரூபணம் செய்துள்ளது.
இந்த ரசாயனம் குறித்தும் டயபர் பற்றிய எச்சரிக்கைத் தகவல்களையும் இங்கு காண்போம்.
பித்தலேட் என்றால் என்ன?
பிளாஸ்டிக்குகளை நெகிழ் தன்மையுடன் மென்மையாக (flexible) வைத்திருக்க பயன்படுத்தப்படும் ரசாயனங்களே Phthalates ஆகும். இதை பொதுவாக டயபரில் மென்மைத்தன்மைக்காக பிளாஸ்டிக் அடுக்கு, வாசனை (fragrance), ஒட்டும் பசைகள் (adhesives) ஆகியவற்றில் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.
இப்படி சுகாதார பாதுகாப்பு மீறி டயபரில் பயன்படுத்தப்படும் சில வகை பித்தலேட் (Phthalates) நச்சு ரசாயனங்கள் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று பல மருத்துவ அறிவியல் ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
டயபரில் உள்ள நச்சு ரசாயனத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் சாத்தியமான பாதிப்புகள் இங்கு.
பித்தலேட் ஹார்மோன் செயல்பாட்டை பாதித்து குழப்பம் (Endocrine disruption) உண்டாக்கும். குறிப்பாக ஆண் குழந்தைகளின் இனப்பெருக்க உறுப்பு வளர்ச்சி தாமதம் மற்றும் ஹார்மோன் சமநிலை மாற்றம் ஆகியவை ஏற்படும்.
குழந்தையின் மென்மையான ஈரப்பதம் மிக்க சருமத்தின் வழியாக உடலில் நுழையும் ரசாயனம் உடலில் எளிதில் உறிஞ்சப்படுகிறது. இதனால் கவனம் குறைவு (Attention problems), கற்றலில் சிரமம், நடத்தை மாற்றங்கள் போன்ற மூளை வளர்ச்சி பாதிப்பு ஏற்படும் என ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒவ்வாமை மற்றும் சுவாச பிரச்சினைகளுக்கு வழிவகுத்து மூச்சுத்திணறல் அபாயத்தை அதிகரிக்கும்.
இதை அதிகம் ஆண் குழந்தைகள் பயன்படுத்தும் போது எதிர்காலத்தில் விந்தணு தரம் குறைவு மற்றும் இனப்பெருக்க திறன் பாதிப்பு உருவாகலாம்.
இதை எப்படி தவிர்ப்பது? தரமான டயபர்களை எவ்வாறு கண்டறிவது?
Phthalate Free, PVC Free, Fragrance Free என்று குறிப்பிடப்பட்டிருக்கும் Phthalate-Free டயபர்களை கண்டறிந்து தேர்வு செய்யுங்கள். குறிப்பாக அதிக நறுமணம் உள்ள டயபர்களை கண்டிப்பாக தவிர்க்கவும்.
பொதுவாக டயபர்கள் நீண்ட நேரம் ஈரமாக இருந்தால் ரசாயன உறிஞ்சல் அதிகம் என்பதால் அடிக்கடி கவனித்து மாற்றி சருமத்தை உலர விடுங்கள்.
இதற்கு மாற்றாக துணி டயபர்கள் (Cloth Diapers) பயன்படுத்துவது நல்லது. அதையும் சரியான முறையில் கழுவி சுத்தப்படுத்த வேண்டும். டயபர் ராஷ் எனப்படும் சரும கொப்புளங்கள் போன்ற பாதிப்பு வந்தால் உடனே கவனமாக அதை சரி செய்யுங்கள். இல்லை எனில், சேதமான சருமம் வழியாக ரசாயனம் அதிகம் நுழைந்து பாதிப்பு தரலாம்.
டயபர்கள் பயன்படுத்துவதே ஆபத்தானதா?
இல்லை..! அனைத்து டயபர்களிலும் பித்தலேட் இருக்கும் என்று இல்லை. ஆனால் குறைந்த தரம் / அதிக வாசனை கொண்ட டயபர்கள் மட்டுமே அதிக அபாயம் தரலாம் என்பதால் எச்சரிக்கை தேவை என்கிறார்கள் மருத்துவர்கள்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)