

நீண்ட தூர விமானப் பயணம், இரவு நேர இரயில் பயணம் அல்லது கார், பஸ்ஸில் செல்லும் சாலைப் பயணங்கள் மகிழ்ச்சி தருகின்றன. ஆனால், பயணம் முடிந்து வண்டியை விட்டு இறங்கியதும் உடல் சோர்வடைந்து விடுகிறது.
நெருக்கமான இருக்கைகள், கால்களை நீட்ட முடியாத நிலை, பல மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது போன்ற காரணங்களால் முதுகு வலி, கால்களில் மரத்துப்போன உணர்வு, உடல் சோர்வு போன்ற பல உபாதைகள் ஏற்படுகின்றன. இதற்காகக் கழுத்துத் தலையணை (Neck pillow), ஐ மாஸ்க் (Eye mask) போன்றவற்றைப் பயன்படுத்தினாலும், உடலின் சோர்வை விரட்ட உதவும் ஓர் எளிய பொருளைப் பற்றிப் பலருக்குத் தெரிவதில்லை. அதுதான் டென்னிஸ் பந்து!
நீண்ட நேரப் பயணங்களின் போது இந்தச் சிறிய பந்து எவ்வாறு தசைப்பிடிப்புகளை நீக்கி, ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது என்பதை டெல்லியைச் சேர்ந்த பிரபல பிசியோதெரபிஸ்ட் டாக்டர் ஆகாஷ் தீப் சர்மா விளக்கியுள்ளார்.
நெடுந்தூரப் பயணங்களில் பெரும்பாலானோர் சந்திக்கும் முக்கியப் பிரச்சினை கீழ் முதுகு மற்றும் இடுப்பு வலி ஆகும். ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால் இடுப்புத் தசைகள் இறுக்கமடைகின்றன. இதற்கு, அமர்ந்திருக்கும் நிலையிலேயே ஒரு டென்னிஸ் பந்தை இடது பக்க இடுப்பின் கீழ்ப் பகுதியில் வைத்து, மெதுவாக வட்ட வடிவில் ஒரு நிமிடம் சுழற்ற வேண்டும். பின்னர், அடுத்த பக்கமும் இவ்வாறு செய்ய வேண்டும். இது மற்ற பயணிகளுக்கு எந்த இடையூறும் இல்லாமல் செய்யக்கூடிய எளிய அழுத்தப் பயிற்சியாகும்.
இருக்கையில் பல மணி நேரம் ஒரே நிலையில் அமர்ந்திருக்கும் போது கழுத்து மற்றும் தோள்பட்டை பகுதிகளில் தசைப்பிடிப்பு ஏற்படுகிறது. இதற்கு, இருக்கையைச் சற்று பின்னோக்கிச் சாய்த்து, மேல் முதுகிற்கும் இருக்கைக்கும் நடுவில் டென்னிஸ் பந்தை வைக்க வேண்டும். உடலை மெதுவாக மேலேயும் கீழேயும் அல்லது பக்கவாட்டிலும் அசைப்பதன் மூலம், பந்து தசைகளுக்கு ஒரு நல்ல மசாஜ் கொடுத்து இறுக்கத்தைத் தளர்த்தும்.
கால்களை நீண்ட நேரம் தொங்கவிட்டு அமர்வதால் ரத்த ஓட்டம் குறைந்து, கால்கள் கனப்பது போன்ற உணர்வு ஏற்படும். இதற்கு, இருக்கையில் அமர்ந்தபடியே பாதத்தின் கீழ் டென்னிஸ் பந்தை வைத்து முன்னும் பின்னும், சிறிய வட்ட வடிவிலும் மெதுவாக உருட்ட வேண்டும். இது பாதத்தின் அடிப்பகுதியில் உள்ள திசுக்களைத் தளர்த்தி, கால்களில் ரத்த ஓட்டத்தை உடனடியாக அதிகரிக்க உதவுகிறது.
உடலில் இயக்கம் குறையும் போது நிணநீர் மண்டலத்தின் செயல்பாடும், ரத்த ஓட்டமும் மெதுவாகி உடல் சோர்வை உருவாக்குகிறது. டென்னிஸ் பந்தைக் கொண்டு தசைப் புள்ளிகளில் அழுத்தம் கொடுக்கும் போது, உடலின் நரம்புகள் தூண்டப்பட்டு ரத்த ஓட்டம் சீராகிறது. இதனால் பயணம் முடிந்து இறங்கும்போது உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
நீண்ட பயணங்களில் ஒரே நிலையில் இருப்பதைத் தவிர்த்து, 30 நிமிடங்களுக்கு ஒருமுறை அமரும் நிலையை மாற்ற வேண்டும். டென்னிஸ் பந்தையை உடலின் வெவ்வேறு பகுதிகளில் மாற்றி வைக்கும் போது, நம்மையறியாமலேயே சிறிய அசைவுகள் ஏற்படுகின்றன. இது தசை நார்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்.
முக்கியமான எச்சரிக்கை: டென்னிஸ் பந்தைப் பயன்படுத்தும் போது எலும்புகளின் மீது நேரடியாக அழுத்தம் கொடுக்கக் கூடாது; தசைப் பகுதிகளில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிகப்படியான வலி அல்லது காயம் உள்ள இடங்களில் இதைப் பயன்படுத்தக் கூடாது. மிதமான அழுத்தமே போதுமானது.
எனவே, உங்களின் அடுத்த நீண்ட தூரப் பயணத்தின் போது, உங்களுடைய கைப்பை அல்லது சூட்கேஸில் ஒரு சிறிய டென்னிஸ் பந்தையும் எடுத்துச் சென்றால் பயணம் இனிமையாக இருக்கும்!