

பூமிக்கு அடியில் இருக்கும் கிழங்கு வகைகளை சாப்பிடக்கூடாது என்று பலரும் அதைத் தவிர்ப்பது உண்டு. ஆனால் அந்தக் கிழங்கு (Tubers) வகைகளே பல்வேறு நோய்களை குணப்படுத்தும் மருந்தாக செயல்படுகிறது. அவற்றைப் பற்றி இப்பதிவில் இதோ,
கோரைக்கிழங்கை தோல் நீக்கி அவித்து அந்த நீரை குழந்தைகளுக்குக் கொடுத்தால், நாள்பட்ட வயிற்றுப்போக்கு நீங்கும்.
உருளைக்கிழங்கின் தோலை எடுத்து அதனுடன் மஞ்சள் வைத்து அரைத்து சொறி, சிரங்கு, படை மீது போட குணமாகும்.
காட்டுக்கொட்டை கிழங்கை சிறிது துண்டுகளாக நறுக்கி வெயிலில் காயவைத்து சலித்து சூரணமாக தயார் செய்து கொண்டு பசும்பால் கலந்து சாப்பிட உயிர்ச் சக்தி பெருகும்.
மெருகன் கிழங்கை துண்டுகளாக நறுக்கி உலர்த்தி மைய பொடித்து சலித்து சூரணமாக வைத்துக் கொண்டு மூல நோய் உள்ளவர்கள் சாப்பிட்டு வர எந்த வகை மூலமாயினும் பலன் கிடைக்கும். மருந்து உண்ணும் நாட்களில் பத்தியம் இருத்தல் வேண்டும்.
சேவனார் கிழங்கை அடிக்கடி சமைத்து சாப்பிட சளி கரையும்.
பனங்கிழங்கை அவித்து காய வைத்து இடித்து தூள் செய்து வைத்துக் கொண்டு ஒரு சிட்டிகை பனங்கிழங்கு தூளுடன் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர கணைச்சூடு நீங்கும்.
அமுக்கிராங் கிழங்கை மை போல் அரைத்து வீக்கத்தின் மேல் போட வீக்கம் குறையும்.
உடல் சூடு தேவையானால் உருளைக்கிழங்கைத் தேவையான போது சேர்த்துக் கொள்ள உடல் சூடு ஏறும். குளிர்ச்சியான உடல் உள்ளவர்கள் அடிக்கடி உருளைக்கிழங்கு சேர்த்துக் கொள்வது நல்லது.
அன்றாடம் உணவில் கேரட் சாப்பிட்டு வர உடலில் தோல் நோய் குணமாகும். உடலுக்கு உறுதியும், ஊட்டமும் கொடுப்பதுடன் பளபளப்பாகவும் வைத்திருக்கும். தோல் வியாதிகள் வராமல் பாதுகாக்கும்.
கிச்சிலிக் கிழங்கை ஒன்றிரண்டாக இடித்து வேப்ப எண்ணெய் ஊற்றி காய்ச்சி அந்த தைலத்தை கால் மூட்டுகளில் தேய்த்து வர கீல்வாத நோய் தீரும்.
சீந்தில் கிழங்கை நசுக்கி நீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை காலை, மாலை இருவேளை சாப்பிட்டு வர ரத்தத்தில் உள்ள பித்தம் தணியும்.
பேய்ச்சீந்தில் கிழங்கில் எண்ணெய் எடுத்து மேல் பூச்சாக பூச தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் அனைத்தும் மறையும்.
பொற்சீந்தில் கிழங்கை காய வைத்து இடித்து தூள் செய்து ஒரு நாளைக்கு ஒருவேளை தூளை வாயில் போட்டு சுடு தண்ணீர் குடித்து வர உடலில் உள்ள நச்சுத்தன்மை நீங்குவதோடு நீரழிவு மற்றும் காச நோயும் குணமாகும்.
பீட்ரூட் கிழங்கை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள ரத்தம் விருத்தி ஆகும். சிறியவர் முதல் பெரியவர்கள் வரை இதை சேர்த்துக் கொள்ளலாம்.
பிரப்பங் கிழங்கை காயவைத்து இடித்து தூளாக்கி நீரில் கலந்த காய்ச்சி கசாயமாக சாப்பிட்டு வர முடக்கு வாதம் குணமாகும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)