நாம் ஆரோக்கியமாக வாழ தினசரி ஏதேனும் ஒரு பழத்தினை சாப்பிடுவது நன்மை தருவதாக இருக்கும். பொதுவாகவே பழங்கள் நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தருபவை. பழங்கள் உடலுக்கு தேவையான சர்க்கரை, புரதம், வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. பழங்களில் அதிக சர்க்கரை சத்து உள்ளதால் பலகீனமானவர்களுக்கு உடனடியாக சக்தியை கொடுக்கிறது. பழங்களில் ஏராளமான நன்மைகள் இருந்தாலும் இந்த இரண்டு பழங்களை ஒன்றாக சாப்பிடக் கூடாது.
இப்போதெல்லாம் புருட் மிக்சர் என்ற பெயரிலும் , புருட் சாலட் என்ற பெயரிலும் பல பழங்களை நறுக்கி துண்டுகளை ஒன்று சேர்த்து தருகின்றனர். இந்த பழ சாலட்களில் எதிர் எதிர் பண்புகளைக் கொண்ட சில பழங்கள் கலந்திருக்கலாம். அவை ஒன்றாக வயிற்றுக்குள் செல்லும் போது நன்மைக்கு பதில் தீமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன.
வாழைப் பழத்தையும் பப்பாளியையும் ஒன்றாகச் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த இரண்டு பழங்களையும் ஒன்றாகச் சாப்பிடுவதால் சில உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
பப்பாளி மற்றும் வாழைப்பழம் ஆகியவை வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்ட இரண்டு பழங்கள்.அதனால் அவற்றை ஒன்றாகச் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். மலிவான விலையில் எப்போதும் கிடைக்கும் வாழைப்பழங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வாரி வழங்குகிறது. இதில் உள்ள பொட்டாசியம் அதிக இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. மேலும் இதில் உள்ள கால்சியம் எலும்பை வலுவாக்குகிறது. மேலும் வாழைப் பழத்தில் நார்ச்சத்து, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனைகளில் இருந்து விடுபட வைக்கிறது. வாழைப்பழம் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. குறைந்த சர்க்கரை பிரச்சனை உள்ளவர்கள் வாழைப்பழம் சாப்பிட்டால் உடனடியாக அதில் இருந்து விடுபட முடியும்.
பப்பாளி பழம் செரிமானத்தை மேம்படுத்துகிறது. இது கல்லீரல் கொழுப்பு நோய்க்கு சிறந்த மருந்தாக உள்ளது. பப்பாளியை தொடர்ந்து சாப்பிடுவது கொழுப்பைக் கட்டுக்குள் வைத்திருக்கும். பப்பாளியில் வைட்டமின்கள் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் பல பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் உள்ளன. பப்பாளி பழத்தினை தொடர்ச்சியாக சாப்பிட்டால் கண் பார்வையில் முன்னேற்றம் ஏற்படும் . மேலும் இரைப்பை புண், குடல் புண் ஆகியவற்றை குணப்படுத்தவும் உதவி செய்கிறது.
பொதுவாக வாழைப்பழங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும். பப்பாளி பழம் உடலுக்கு வெப்பத்தைத் தரும். இரண்டு வெவ்வேறு இயல்புகளைக் கொண்ட இந்த இரண்டு பழங்களையும் சேர்த்து சாப்பிடுவது எதிர் எதிர் விளைவுகளை ஏற்படுத்தும். பப்பாளி மற்றும் வாழைப்பழத்தை ஒன்றாக சாப்பிடுவதால் இரைப்பையில் அமிலத்தன்மை ஏற்படும். இந்த விளைவால் இரைப்பை புண் மற்றும் ஒவ்வாமை போன்ற பிரச்சினைகள் வரலாம். இதன் விளைவாக வாந்தி, வயிற்று வலி, தலைவலி, குமட்டல், வாயு பிரச்சனைகள் வரக் கூடும். ஆஸ்துமா மற்றும் பிற சுவாசப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
நுரையீரல் மற்றும் சுவாசப் பிரச்சனை உள்ளவர்கள் பப்பாளி பழத்தை சாப்பிடாமல் இருப்பது நல்லது. வாழைப்பழமும் அதிக சளி, ஆஸ்துமா உள்ளவர்கள் சாப்பிடக் கூடாது.
பப்பாளி பழத்தில் உள்ள பப்பெய்ன் மற்றும் பீட்டா கரோட்டின் மஞ்சள் காமாலை பிரச்சனையை அதிகரிக்கும் என்பதால் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதை அறவே சாப்பிடவே கூடாது என்று வலியுறுத்துகிறார்கள்.
பப்பாளி மற்றும் வாழைப்பழத்தை தனித்தனியாக சில மணிநேர இடைவெளியில் சாப்பிடுவது தான் நல்லது. ஒரே நாளில் இந்த பழங்களை அதிகம் உண்ண வேண்டாம்.