
புரோஸ்டேட் என்பது ஆண்களுக்கு வரக்கூடிய சிறுநீர் பிரச்னை. புரோஸ்டேட் ஆண்களின் சிறுநீர்ப்பைக்கு கீழே மலக்குடல் வாயை ஒட்டி உள்ள ஒரு சிறிய சுரப்பியாகும். இந்த சுரப்பியானது 40 வயதுக்கு மேல் சிறிது சிறிதாக வளர ஆரம்பிக்கும். 60, 70 வயதுகளில் இந்த சுரப்பி வளர்ந்து சிறுநீர் பாதையை அடைக்கும். இது நபருக்கு நபர் வேறுபடும்.
வழக்கத்துக்கு மாறாக அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர் தாமதமாக கழிப்பது, சொட்டு சொட்டாக வருவது போன்றவை இதன் அறிகுறிகளாகும். இந்தப் பிரச்னை புரோஸ்டேட் எல்லார்ஜ்மென்ட் எனப்படும். வயதாகும் போது ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் என்ற ஹார்மோன் தூண்டுதலால் இந்த சுரப்பி பெரிதாகிறது. இயல்பாக இருபது முதல் 30 கிராம் வரை இருக்கும் இந்த சுரப்பி வளர்ச்சியடைந்து 40 முதல் 200 கிராம் வரை வளரும்.
இந்த சுரப்பி வெளிப்புறமாக வளர்ச்சி அடைந்தாலும் பிரச்சை இல்லை; சிறுநீர் பாதையை அடைத்து வளர்ச்சி அடைந்தால் தான் சிறுநீர் தடைபடும். இதன் மூலம் சிறுநீர் குறைவாக வருதல், சிறுநீரில் ரத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்படும். சிறுநீர் பரிசோதனை மூலம் இதனை கண்டறியலாம். சிறுநீர் பையில் சிறுநீர் தங்குகிறதா என்பதை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் அறியலாம். இதற்கு பிஎஸ்ஏ சோதனை அவசியமாகிறது.
கேன்சர் பிரச்னை இல்லை என்றால் மருந்து, மாத்திரைகள் மூலம் குணப்படுத்தலாம். எண்டோஸ்கோபி லேசர் மூலமாக இதனை குணப்படுத்த முடியும்.
நவீன சிகிச்சை முறை 'வாட்டர் வேபர்' :
Water Vapour Therapy என்ற சிகிச்சை முறை மூலம் இதனை குணப்படுத்த முடியும் என்று கண்டுபிடித்து உள்ளனர்.
சிறுநீர் பையில் ஒரு சிறிய கேமரா உதவியுடன் ஒரு ஊசி மூலம் சூடான நீராவியை மூன்று நிமிடம் உள்ளே செலுத்துகிறார்கள். இந்த சூடான நீராவியானது வளர்ச்சி அடைந்த கட்டியை வெந்து அதனை சுருக்குகிறது. இதன் மூலம் வளர்ச்சி அடைந்த சுரப்பி சுருங்கி விடுகிறது. ஆனால் இது உடனடியாக பலன் தெரியாது. இதன் பலன் தெரிய 10 நாட்கள் வரை ஆகும்.
நீண்ட காலம் மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவதால் விந்தணு உற்பத்தி தடைபடும். இதனால் ஆண்மை குறைவு ஏற்படும். உறவில் நாட்டம் குறைவாக இருக்கும். அதிநவீன நீராவி சிகிச்சை முறையில் இந்த குறைபாடுகள் இருக்காது. ஒருமுறை இந்த நீராவி சிகிச்சையை எடுத்துக் கொண்டால் பத்து ஆண்டுகளுக்கு நல்ல பலன் தருமாம். இது ஒரு புதிய தொழில்நுட்ப வசதி. ஆண்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் ஆகும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)