சூரிய ஒளி என்பது நம் உடலுக்கு மிகவும் அவசியம். இது நம் உடலில் விட்டமின் D உற்பத்திக்கு முக்கிய காரணமாக உள்ளது. விட்டமின் D நம் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும். ஆனால், சூரியனின் தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்கள் நம் தோலை பாதிக்கக்கூடும். இதிலிருந்து நம்மை பாதுகாக்க சன் ஸ்கிரீன் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பலருக்கு, சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதால் சூரிய ஒளி மூலமாக நடக்கும் விட்டமின் டி உற்பத்தி தடைப்பட்டுவிடுமா என்ற சந்தேகம் உள்ளது. இந்தப் பதிவில் அதன் உண்மையைத் தெரிந்து கொள்வோம்.
சன்ஸ்கிரீன்: சன்ஸ்கிரீன் என்பது நம் தோலை சூரிய ஒளியின் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாக்கும். இது UVA, UVF என இரண்டு வகையான புற ஊதா கதிர்களில் இருந்து நம் சருமத்தைப் பாதுகாக்கிறது. சன்ஸ்கிரீனில் உள்ள வேதிப்பொருட்கள் இந்த புற ஊதா கதிர்களை உறிஞ்சிக் கொண்டு நம் தோலைப் பாதுகாக்கின்றன.
சன்ஸ்கிரீன் விட்டமின் D உற்பத்தியை பாதிக்குமா?
தொடர்ச்சியாக சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது விட்டமின் டி உற்பத்தியைக் குறைக்கும் என்பது உண்மைதான். ஆனால், இது விட்டமின் டி உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்திவிடுவதில்லை. சன்ஸ்கிரீன் SPF மதிப்பு அதிகரிக்கும்போது விட்டமின் டி உற்பத்தி குறையும் அளவு அதிகரிக்கும். SPF என்பது Sun Protection Factor என்பதைக் குறிக்கிறது. இது சன் ஸ்கிரீன் எவ்வளவு நேரம் சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களில் இருந்து நம்மை பாதுகாக்கும் என்பதை குறிக்கிறது. SPF மதிப்பு அதிகமாக இருந்தால் சம்ஸ்கிரீன் அதிக நேரம் பாதுகாப்பு அளிக்கும் என அர்த்தம். எனவே, குறைந்த SPF மதிப்பு கொண்ட சன்ஸ்கிரீன் பயன்படுத்தினால் விட்டமின் டி உற்பத்தி குறையாது.
சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதால் பல நன்மைகள் உள்ளன. இது சூரியனின் புற ஊதா கதிர்கள் தோல் புற்றுநோயை உருவாக்குவதில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது. மேலும், இது சூரிய ஒளி தாக்கத்தால் ஏற்படும் தோல் சுருக்கம், கருப்பு புள்ளிகள் மற்றும் விரைவில் வயதான தோற்றம் ஏற்படுவதை தடுக்கும். அதிக நேரம் சூரிய ஒளியில் இருப்பது அலர்ஜியை ஏற்படுத்தும் என்பதால், வெளியே சென்றால் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது முக்கியம்.