
வல்லாரை என்று கூறினால் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது அதை சாப்பிட்டால் நன்கு ஞாபக சக்தி பெருகும், என்பதுதான். அந்த வல்லாரை எப்படி எல்லாம் மருந்து ஆகிறது என்பதை இப்பதிவில் காண்போம்!
வல்லாரை என்பது வட்டமான இலையோடு படரும் ஒருவகை கொடி. தண்ணீர் கால்வாய்களின் மேட்டிலும், குளக்கரைகளிலும், ஆற்று ஓரங்களிலும் இக்கொடி படரும் . வல்லாரையை கற்ப மூலிகைகளில் ஒன்றாக எடுத்து உள்ளார்கள்.
வல்லாரையை துவரம் பருப்பு மிளகு ,சீரகம், வெங்காயம் சேர்த்து சாம்பார் செய்து சாப்பிடலாம். இப்படி சாப்பிடும் பொழுது சரீர எரிச்சல், கீழ்வலி , கீல்களில் வீக்கம் மஞ்சள் நிறமாய் இறங்குதல் ஆகிய நோய்கள் நீங்கும் .
வல்லாரை இலையை நெய்யில் வதக்கி உப்பு ,புளி ,மிளகாய் சேர்த்து துவையல் செய்து சாப்பிடலாம்.
வல்லாரை இலையை நிழலில் உலர்த்தி தூள் செய்து அதனுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து காலை மாலைகளில் சாப்பிட்டு வர மேக வியாதிகள் குறையும் .
வல்லாரைத் தூளுடன்,மிளகு, சுக்கு, கொத்தமல்லி விதை ஆகியவைகளை சமமாக கலந்து பொடித்துக் கொண்டு காப்பித் தூளுக்கு பதிலாக உபயோகிக்கலாம். இப்படி காபி அருந்தும் போது நல்ல பசி எடுக்கும். நீர் தாராளமாய் இறங்கும். தேகச் சூடு குறையும். மதுமேகம் நீங்கும்.
வல்லாரைச் சாற்றுடன் சம அளவு நெய் கலந்து காய்ச்சி அதை மேக உஷ்ண வியாதிகளுக்கு கொடுக்க வியாதி குறையும். பெண்களுக்கு காணும் சூதகவாயு என்னும் நோய் நீங்கி, பெண்களுக்கு உண்டாகும் உஷ்ணவாயுவின் தொந்தரவால் ஏற்படும் மார்பு வலி நீங்கும். நாள்பட்ட சுரங்களுக்கும் வல்லாரை நெய் மிக்க நல்லது.
வல்லாரை இலைகளை தினசரி ஒன்று சாப்பிட்டு வரலாம். இதனால் சரீர உஷ்ணங்கள் நீங்கி புத்தி கூர்மையும் ,மனத்தூய்மையும், விகார விரக்தியும் ஏற்படும். அத்தகையவர்களுக்கு உபாசனை, தியானம் ஆகியவைகளை சுலபத்தில் சாதித்து விட சாத்தியமாகும் . இந்த காரணத்தினால் வல்லாரையை சாதனை கற்பமூலி என்றும் கூறுவார்கள் . இவ்வகையில் வல்லாரை மூளைக்கு நல்ல டானிக் என அறியலாம்.
வல்லாரை இலையின் நரம்புகளை நீக்கி கல்லீரலில் வலது பக்கத்து விலா எலும்புக்கு கீழாக வைத்து துணியால் கட்டு கட்டி வந்தால் கல்லீரலில் உள்ள வீக்கமானது நீங்கி சம்பூரண குணத்தை உண்டு பண்ணும்.
வல்லாரையை இடித்து சாறெடுத்து அரை லிட்டர் சாற்றுக்கு ஒரு கப் கற்கண்டு சேர்த்து சர்பத் செய்து வேலைக்கு ஒரு அவுன்ஸாக சாப்பிடலாம்.
வல்லாரை இலை, துளசி ,மிளகு இவற்றை சம எடை எடுத்து வல்லாரை சாற்றைக் கொண்டு அரைத்து ஒரு குன்றுமணி அளவு மாத்திரைகளாக செய்து காலை, மாலை இருவேளை சாப்பிட்டு வந்தால் சகல வித ஜுரங்களுக்கும் நல்ல தீர்வு கிடைக்கும்.
வல்லாரை இலையை அரைத்து யானை கால் வீக்கம், வாயு வீக்கம் ,அடிபட்டு தசை சிதைந்து போதல் முதலியவற்றிற்கு வைத்து கட்ட அந்த நோய்களை குணமாக்கும்.
வல்லாரையை அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து ஒரு டம்ளர் பசும்பாலில் சேர்த்து உண்டு வர இருமல், ஈளை, கை கால்களில் உண்டாகும் ஊறல் ,மேக நீர் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும். இதை சில மாதங்கள் முறையாக அருந்தினால் நரை- திரை மாறும்.
வல்லாரை சாற்றுடன் ,பசும்பால், அதிமதுரத்தூள் சேர்த்து வயதுக்கு தக்கபடி கால் ,அரை, ஒன்னு, ரெண்டு சங்கு அளவாக இரண்டு வேலை மூன்று, ஐந்து நாள் கொடுத்து வர குழந்தைகளுக்கு உண்டாகும் ஊறல், படைகள், ரத்தம் கெடுதல் , நரம்பு நோய்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.