பழுப்பு அரிசியில் பல்வேறு விதமான நன்மைகள் இருக்கின்றன. தற்போது மக்கள் இதைப் புரிந்து கொண்டதால் அனைவரும் இதைப் பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். பழுப்பு அரிசியில் உள்ள ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
சாதாரணமாக நாம் வெள்ளை அரிசியை நன்கு ஊற வைத்து சமைத்தால் அதிகம் சாதம் காணும். அதேபோல், பாரம்பரிய காட்டுயாணம் ,கருப்பு கவுனி, வடிமட்ட போன்ற அரிசிகளை எவ்வளவு நேரம் ஊறவைத்து சமைத்தாலும் சட்டென்று சமைத்து விட முடியாது. அதேபோல், சாதமும் அதிகம் காணாது. ஆனால் இந்த வகை அரிசிகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஆதலால், அது செரிமானத்தை தூண்டுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இதுபோன்ற அரிசிகளை உட்கொள்ளலாம். உடலில் உள்ள கொழுப்பு அளவை இந்த வகை அரிசி உணவுகள் சீர்படுத்தும். இதன் மூலம் இதயக் கோளாறுகளைத் தள்ளி வைக்கலாம்.
இந்த அரிசிகளில் உள்ள அதிக மாங்கனீஸ் சத்து நரம்பு மண்டலத்தை வலுப்படுத்த கூடியது. இன்னும் சொல்லப்போனால் பாலிஷ் செய்யப்பட்ட வெள்ளை அரிசிக்குப் பதிலாக இதுபோன்ற அரிசி சாத வகைகளை சாப்பிடும்பொழுது இவை சர்க்கரையை மெதுவாக வெளியிடுவதால் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. இரத்த சர்க்கரை அளவை நிலைப்படுத்துவதால் நீரிழிவு நோயாளிகள் இந்த அரிசியை சமைத்து சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைப்பதுண்டு.
அதேநேரம் இது உடலுக்கு மிகவும் சக்தி தருகிறது என்பதற்காக அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். மற்ற அரிசிகளை எப்படி சாப்பிடுகிறோமோ, அப்படித்தான் இதையும் அளவோடு சாப்பிட வேண்டும். அப்பொழுதுதான் மேற்கூறிய நோய்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும் என்கின்றனர்.
சிலர், ‘நாம் பழுப்பு அரிசிதானே சாப்பிடுகிறோம். இதனால் கேடு ஒன்றும் வராது’ என்று நினைத்துக்கொண்டு அளவுக்கு அதிகமாக இந்த அரிசி சாதத்தை சாப்பிடுவதைக் காணலாம். அப்படிப்பட்டவர்கள் காய்கறிகளை அதிகமாக சேர்த்துக் கொண்டு இந்த வகையான அரிசி சாதங்களை அளவோடு சாப்பிட்டால் காலையில் எழுந்திருக்கும்பொழுது களைப்பு, சோர்வு போன்ற சங்கடங்கள் எதுவும் இல்லாமல் புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாக இயங்க முடிவதை இந்தக் கோடையிலும் உணரலாம்.
பழுப்பு அரிசியை குக்கரில் வைக்காமல், வடித்து சாப்பிடுவதுதான் நல்லது. அப்படி வடிக்கும் வடிதண்ணீர் சத்து நிறைந்தது என்று எண்ணி நீரிழிவுக்காரர்கள் குடிக்காமல் இருப்பதும் நல்லது. அப்படி குடித்தால் அடுத்த நாள் காலையில் எழுந்திருக்கும்பொழுது சோர்வாக இருப்பதை உணரலாம். மற்றவர்கள் குடிக்கலாம். இந்தத் தண்ணீரை இட்லி, தோசை மாவுகளில் கலந்தும் பயன்படுத்தலாம். இட்லி, தோசை, இடியாப்பம், புட்டு என்று இந்த ரக அரிசிகளில் செய்து சாப்பிட்டால் அளவோடு எண்ணிக்கையுடன்தான் சாப்பிடுவோம். அதனால் பாதிப்பு எதுவும் வராது.
ஆதலால், எந்தவிதமான அரிசி உணவுகளை எடுத்துக்கொண்டாலும், அதை எப்படி சாப்பிட வேண்டும்? எவ்வளவு சாப்பிட வேண்டும்? என்று தெரிந்து கொண்ட பின் சாப்பிட்டால் நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக வாழலாம். நோய்கள் இருந்தாலும் அவற்றை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும்.