வயது முதிர்வை தள்ளிப்போடும் களாக்காயின் பயன்கள்!

களாக்காய்
களாக்காய்https://www.tamilstar.com
Published on

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், வனத்தின் வேலியாகக் காட்சியளிக்கும் வகையில், அடர்ந்தும் பாதுகாப்பாகவும், களாக்காய் மரங்கள் அதிகம் காணப்படுகின்றன. இதன் சீசனாக ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை உள்ளது. இப்பகுதிகளில் விளையும் இவை, மலைவாழ் மக்களுக்கு வருமானம் தருவதாகவும் உள்ளன. தித்திப்பும், புளிப்பும் சேர்ந்த கலவைதான் இந்தக் களாக்காய். காட்டுக்குள் வளர்ந்தாலும், இதன் பூ, காய், பழம், வேர் என மொத்தமும் மருத்துவ குணம் கொண்டவை. இரும்புச் சத்துக்கள் மற்றும் தாது சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. இரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோயை குறைக்கவும் இந்தக் காய்கள் பயன்படுத்தப்படுகிறது. மேலும், ஜீரண சக்தியை அதிகரிப்பதாகவும் உள்ளதால், வீடுகளில், உணவுடன் களாக்காய் ஊறுகாயும் இடம் பெறுகின்றன.

இது ஒரு சீசன் காய் என்பதால், கிடைக்கும் காலத்திலேயே ஊறுகாயாக போட்டு வைத்து கொள்வார்கள். இதற்குக் காரணம், கிட்டத்தட்ட எலுமிச்சையை போலவே குணமுள்ளது இந்த களாக்காய். வாயு, வயிறு வீக்கம், வயிறு உப்புசம், அஜீரண பிரச்னைகளை களாக்காய் சரி செய்கிறது. குடல் இயக்கத்தை சீராக்க உதவுகிறது. நோய் தொற்றுகளை அண்ட விடாமல் தடுக்கிறது. மாதவிலக்கு பிரச்னை இருக்கும் பெண்கள், களாக்காயை அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும். அதேபோல, பிரசவமான பெண்களுக்கு, கருப்பையில் உள்ள அழுக்கை வெளியேற்ற இந்த காய்தான் துணைபுரிகிறது.

தொடர்ந்து களாக்காய் சாப்பிட்டு வருவதால், கண்களில் ஏற்படும் பிரச்னைகள் தீர்கிறது. முக்கியமாக, வெண்படலம், கரும்படலம், இரத்தப் படலம் போன்ற குறைகளை நீக்குகிறது. பற்களின் கறைகளை நீக்கி, ஈறுகளுக்கு பலத்தை தரக்கூடிய பண்பு, இந்த களாக்காய்க்கு உண்டு. கர்ப்பமான பெண்களுக்கு வாந்தி அல்லது மயக்கம் வந்தால், இந்த களாக்காயை தருவார்கள்.

இந்தக் களாக்காயை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொண்டு, வெறும் உப்பு மட்டுமே சேர்த்து குலுக்கி வைத்து பயன்படுத்தினாலே, பித்தம் முழுமையாக நீங்கும். அல்லது இந்தச் செடியின் வேரை சுத்தம் செய்து, கழுவி காயவைத்து பொடி செய்து கொண்டால், அதனுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டாலும் பித்தம் குறையும். பித்தம் நீக்கப்படுவதால், ஈரலுக்கு வலு சேர்க்கிறது. ஆரோக்கியம் கிடைக்கிறது. மஞ்சள் காமாலையை தடுத்து நிறுத்துகிறது.

இதையும் படியுங்கள்:
காவல் தெய்வம் வாராஹி அம்மனின் புகழ் பெற்ற திருக்கோயில்கள்!
களாக்காய்

இதில் அதிகப்படியான வைட்டமின் சி இருப்பதால் இதனை எடுத்துக்கொள்ள காய்ச்சலின் தீவிரம் குறையும். சருமத்துக்கு மிகச்சிறந்த பாதுகாப்பைத் தருகிறது இந்தக் களாக்காய். அதனால்தான், இதை மருந்தாகவும், பேக் பேலவும் சருமத்தில் தடவி உபயோகிப்பார்கள். மேலும், சருமத்திற்குக் கெடுதல் தரும் கூறுகளை எல்லாம் அழித்து, இளமையை தக்க வைக்கிறது இந்த களாக்காய். அதுமட்டுமல்ல, ஆன்டி-ஏஜிங் எனப்படும் வயது முதிர்வை தடுக்கும் கிரீம்கள், ஜெல்களில் இக்காயைத்தான் முக்கியப் பொருளாக சேர்க்கிறார்களாம். அதனால், நேரடியாகவே களாக்காயை சாப்பிட்டு வருவதால், சருமம் பொலிவு பெறும். களாக்காய் சாப்பிடுவதால் உடலில் நீர்ச்சத்து அதிகரித்து சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது. மேலும், உடலின் உள் உறுப்புகளுக்கு தேவையான சத்துக்கள் இதிலிருந்து கிடைக்கும்.

அதேபோல, தலைமுடி வளர்ச்சிக்கும் இந்த களாக்காயை பயன்படுத்துவார்கள். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய் என்பதால், தலை முடி உதிர்வது குறைகிறது. ‘நாளை கிடைக்கப்போகும் பலாக்காயை விட இன்று கிடைக்கும் களாக்காய் சிறந்தது’ என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com