
நம் உடல் ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்துக்கள் மிக முக்கியம். அப்படிப் பார்த்தால் வைட்டமின்கள், தாது உப்புக்கள், புரதச்சத்துக்கள் எல்லாம் நம் உடலுக்கு மிக மிக முக்கியமானவை. அதனடிப்படையில், இப்போது வைட்டமின் குறைபாட்டால் நம் உடலில் ஏற்படும் நோய்களைப் பற்றியும், அதனை தீர்ப்பதற்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகளை பற்றியும் இக் கட்டுரையில் பார்ப்போம்.
வைட்டமின் A
•வைட்டமின் A குறைபாட்டால் நம் உடலில் சரும நோய்களும் (சீரோப்தால்மியா), கண்ணில் மாலைக்கண் நோய் குறைபாடும் (நிக்டலோபியா) ஏற்படுகின்றன.
வைட்டமின் A நிறைந்த உணவுகள்: கேரட், பப்பாளி, முட்டைக்கோஸ், கீரை வகைகள், முட்டையின் மஞ்சள் கரு, பால் பொருள்கள்.
வைட்டமின் D
•வைட்டமின் டி குறைபாட்டால் குழந்தைகளிடம் ரிக்கெட்ஸ் நோய் (இரண்டு கால்களும் நேராக இல்லாமல் வளைந்து காணப்படும்) காணப்படுகிறது. மற்றும் குறைபாடுடைய மார்பெலும்பு வளர்ச்சி காணப்படுகின்றன.
உணவுகள்: முட்டை, மீன்கள், கல்லீரல், காளான், முருங்கைக் கீரை, பசலைக்கீரை,ஓட்ஸ் போன்றவை.
வைட்டமின் E
•வைட்டமின் E குறைபாட்டால் மலட்டுத்தன்மை (இனப்பெருக்க கோளாறுகள்) ஏற்படுகிறது.
உணவுகள்: கோதுமை, இறைச்சி, தாவர எண்ணெய், பால், சூரியகாந்தி மற்றும் சியா விதைகள், மாம்பழம், அவகேடோ, திராட்சை போன்றவை.
வைட்டமின் K
•வைட்டமின் K குறைபாட்டால், உடலில் ரத்தமானது தாமதமாக உறையக்கூடும். இதனால் அதிக ரத்தம் வெளிவரும்.
உணவுகள்: முட்டைகோஸ், பிரக்கோலி, சோயாபீன்ஸ், பால்,வெண்ணை, தயிர், ஆலிவ் எண்ணெய், முந்திரி, மாட்டிறைச்சி கல்லீரல், கடுகுக் கீரை போன்றவை.
வைட்டமின் B1
•வைட்டமின் B1 குறைபாட்டால் தசைகள் வலிமையற்று போகின்றன, நரம்புகளில் சிதைவுரு மாற்றங்கள் ஏற்படுகின்றன, அதோடு பக்கவாதமும் ஏற்படுகின்றன.
உணவுகள்: முழு தானியங்கள், ஈஸ்ட், முட்டை, கல்லீரல், முளைகட்டிய தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள், பீன்ஸ், கேரட், பூசணிக்காய் போன்றவை.
வைட்டமின் B2
•வைட்டமின் B2 குறைபாட்டால்; கண்களில் எரிச்சல், வறட்சியான சருமம், உதடுகளில் வீக்கம், வாயின் ஓரங்களில் பிளவு போன்றவாறு நம் உடலில் ஏற்படுகின்றன.
உணவுகள்; பால், முட்டை, ஆடு அல்லது மாட்டின் கல்லீரல், பச்சைக் காய்கறிகள், முழு தானியங்கள்.
வைட்டமின் B3
•வைட்டமின் B3 குறைபாட்டால் நம் உடலில்; வாயின் ஓரங்களில் பிளவு, சரும தடிப்பு, அடிக்கடி ஞாபக மறதி, வயிற்றுப்போக்கு ஏற்படுகின்றன.
உணவுகள்; பால், முட்டை, கல்லீரல், வேர்க்கடலை, கொழுப்பு குறைந்து காணப்படும் இறைச்சி, இனிப்பு உருளைக்கிழங்கு, பட்டாணி, தக்காளி போன்றவை.
வைட்டமின் B6
•வைட்டமின் B6 குறைபாட்டால் நம் உடலில் செதில் போன்று காணப்படும், அதேபோல் நரம்புகளில் (நரம்புத் தளர்ச்சி) குறைபாடுகள் ஏற்படுகின்றன.
உணவுகள்; இறைச்சி, மீன், முட்டை,பால், சால்மன், மாட்டிறைச்சி கல்லீரல், கொண்டைக்கடலை, வாழைப்பழம், கீரை, வேர்க்கடலை, அரிசி, தயிர், ப்ரோக்கோலி, காலிஃபிளவர், சமைத்த சோளம், பாலாடைக்கட்டி,சமைத்த ஓட்ஸ், பூசணி விதை, கோகோ, கருப்பு பீன்ஸ், திராட்சை, வேகவைத்த முட்டை, சமைத்த சோளம்,கருப்பு பீன்ஸ், தானியங்களின் தவிடு போன்றவை.
வைட்டமின் B12
•வைட்டமின் பி12 குறைபாட்டால் நம் உடலில் தண்டுவட நரம்பு குறைபாடுகள் மற்றும் அதிக அளவிலான ரத்த சோகை நிகழக்கூடும்.
உணவுகள்; இறைச்சி, மீன், முட்டை மற்றும் பால் போன்ற உணவுகள்.
வைட்டமின் C
•வைட்டமின் சி குறைபாட்டால், ஈறுகள் வீக்கமடைந்து இரத்தம் வடியக்கூடும், புண்கள் குணமாவதில் தாமதமாகும், பற்கள் மற்றும் எலும்புகளில் பலவீனம் ஏற்படும்.
உணவுகள்; ஆரஞ்சு, எலுமிச்சை, கிவி, கொய்யா, மாம்பழம், அன்னாசி, பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி, தக்காளி, ப்ரோக்கோலி, இனிப்பு மிளகு, பாகற்காய், முளைக்கட்டிய தானியங்கள், கொத்தமல்லி போன்றவை.
மேலே கூறப்பட்டுள்ள உணவு பட்டியல்களை நாம் தினசரி உணவில் தேவைக்கேற்ப சேர்த்து, உட்கொண்டால் வைட்டமின் குறைபாட்டை எளிதில் சரி செய்து விட முடியும்!
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)