
தற்போது எங்கு பார்த்தாலும் மாசுபாடு... வாகனங்கள் புகை முதல் சிகரெட் புகை வரை நாம் அன்றாடம் இந்தப் புகைகளை சற்றேனும் சுவாசித்துதான் கடந்து போக வேண்டும். இதனால் பாதிக்கப்படுவது நமது சுவாசம் சார்ந்த நுரையீரல் ஆரோக்கியம்தான். அதேபோல் கருப்பை சார்ந்த பாதிப்புகளால் குழந்தையின்மை பிரச்னையும் பெருகியுள்ளது.
நுரையீரல் பலம் பெறவும் கருப்பை நலம் பெறவும் சித்தர் சொன்ன எளிய மருத்துவ மூலிகையான விழுதி பற்றி இங்கே காணலாம்.
சப்பின்டாசேசியே குடும்பத்தைச் சேர்ந்த விழுதியின் தாவரவியல் பெயர் கடாபா ஃபிரட்டிகோசா (கடாபா இண்டிகா) என்பதாகும். இதற்கு விளச்சி மரம் என்ற வேறு பெயரும் உண்டு. சீனாவை தாயகமாகக் கொண்ட வெப்ப மண்டல மரமான இம்மரம், சைவ சமயக் குரவர் நால்வர் காலத்தின் முன்பிருந்தே தமிழ்நாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
நமது பாரம்பரிய வைத்திய முறையான சித்த மருத்துவத்தில் உயர்வான குணங்களை கொண்ட மருத்துவ மூலிகையாக விழுதி மரங்கள் சிறப்பான இடத்தைப் பெறுகின்றன.
இது தஞ்சாவூர் திருவீழிமிழலை அருள்மிகு வீழிநாதேவரர் திருக்கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் தல மரங்களாக இருக்கிறது.
தனித்தனி இலைகளைக் கொண்ட இதன் மலர்கள் வெண்ணிறத்திலும், காய்கள் சிவப்பு நிறத்திலும், தனித்துவமான நறுமணத்துடன் இருக்கும் என்பதால் உலகின் பலபகுதிகளில் இதை விரும்பி வளர்க்கின்றனர். மேலும் இதன் இலை, காய் முதல் வேர்கள் வரை அதிக மருத்துவ பலன்கள் கொண்டவை. இதன் இலைகளுக்கு சகல விதமான நோய்களையும் போக்கும் தன்மை உள்ளது.
குறிப்பாக விழுதி இலையை மென்று சாப்பிடுவதால் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகள் குணமாவதாக சொல்லப்படுகிறது. நடந்தால் எழும் களைப்பு நீங்க உதவுவது இதன் சிறப்பு. ஆம் இந்த இலையை கையளவு எடுத்து வாயில் போட்டு நன்கு மென்று, ஒரு பகுதியை விழுங்கிய பின், மீதி இருப்பதை தாடையில் அடக்கி வைத்துக் கொண்டால் இழக்கும் பிராணவாயுவை ஈடு செய்து எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் தொடர்ந்து ஓடலாம். இப்படி ஓடுவதால் களைப்பு, இளைப்பு இருக்காது என்று புலிப்பாணி சித்தரின் குறிப்புகள் கூறுகிறது.
இலைகளை மசிய அரைத்து உடலில் உண்டாகும் வீக்கங்கள், கட்டிகள் மீது தடவினால் அவைகள் விரைவில் நீங்கி விடும். வாத வியாதிகளைப் போக்கும் குணம் இந்த இலைகளுக்கு உண்டு.
குழந்தைக்காக காத்திருக்கும் பெண்களுக்கு அரிய மருந்தாக உள்ள இந்த இலைகளை தகுந்த சித்த மருத்துவ ஆலோசனை பெற்று சாறு எடுத்து அருந்தினால் கரு முட்டைகளின் உருவாக்கம் அதிகரித்து விரைவில் கருவுற்று ஆரோக்கியமான குழந்தைப் பேறு ஏற்படும் என்கின்றனர்.
உடலில் ஏற்படும் வலிகளுக்கு இந்த இலைகளுடன் சிறிது மிளகைத் தூளாக்கி போட்டு பூண்டு, சீரகம், விளக்கெண்ணெயில் வதக்கி ரசம் போல் எடுத்துக் கொள்வது நிவாரணம் தரும் என்கின்றனர்.
இந்த இலையை பயன்படுத்தி உடல் பலவீனம் , தேவையற்ற கொழுப்புகள், உறுதியான நரம்பு மண்டலம் ஆகியவற்றுக்கு தீர்வு காணலாம். ஆனால் இந்த இலை அனைத்து இடங்களிலும் கிடைக்குமா? சந்தேகமே..
ஆனால் பச்சையாக விழுதி இலை கிடைக்காவிட்டால் நாட்டு மருந்து கடைகளில் இதன் பொடி கிடைக்கும். அதை வாங்கி வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம். சூப்பில் சேர்த்து பருகலாம்.
பொதுவாக சித்த மருத்துவம் கூறும் மூலிகைகளில் எண்ணற்ற பலன்கள் இருந்தாலும் நிபுணத்துவம் பெற்ற சித்த வைத்தியர் ஆலோசனை பெற்ற பின்னரே இவற்றை உபயோகிப்பது நல்லது. சுய மருத்துவம் வேண்டாம் என்ற எச்சரிக்கையும் உண்டு.
முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை/நிபுணரை அணுகவும்.