

தற்போது கோடை காலம் தொடங்கி காலை முதலிலேயே வெப்பம் தகிக்க தொடங்கிவிட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிக வெப்ப நிலை காரணமாக, வெப்பம் சார்ந்த பருவகால நோய்கள் பரவி பெரும் அபாயம் உள்ளது. கோடைக்காலத்தில் நீரழிவு நோயாளிகளுக்கும் உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கும், அவர்களது உடல்நிலையில் சற்று ஏற்ற இறக்க சூழ்நிலைகள் இருக்கும்.
அதிகப்படியான வெப்பம் உடலில் உள்ள நீர் சத்துக்களை வெளியேற்றி விடுவதால், அவர்களின் உடலில் போதுமான அளவிற்கு ஊட்டச்சத்துக்கள் இருக்காது. இந்த காலகட்டத்தில் அவர்கள் எப்பொழுதும் போல தினசரி காலை நடைபயிற்சி செய்வது பலன் தருமா?
அதிக வெப்பம் காரணமாக உடலில் உள்ள நீர் சத்துக்கள் வியர்வை வழியாக வெளியேறி விடுகின்றன. பொதுவாக வியர்த்தல் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவினாலும், அது சற்று அதிகமாக மாறினால் உடலில் ஊட்டச்சத்துக்களையும் வெளியேற்றிவிடும். அதிகளவில் உடலில் நீர் சத்து குறைந்தால் உடலின் சமநிலை பாதிக்கப்பட்டு தடுமாற்றம், தலைவலி, தலைசுற்றல், வாந்தி, சோர்வு போன்ற ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படக்கூடும்.
இத்தகைய இயற்கை சூழ்நிலைகள் இருக்கும் காலத்தில் காலையில் வெறும் வயிற்றில் நடைப்பயிற்சியோ, உடற்பயிற்சியோ மேற்கொள்வது அனைத்து வயதினருக்கும், உடல்நல குறைபாடுகள் உள்ளவர்களுக்கும் ஏற்றதாக இருப்பது இல்லை. 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கும் 40 வயதை கடந்தவர்களும் இந்த காலகட்டத்தில் வெறும் வயிற்றில் நடைப்பயிற்சி செய்யும் போது ரொம்ப கவனத்துடன் செயல்படுவது அவசியம்.
கோடையில் நன்கு உடல் ஆரோக்கியம் உள்ளவர்கள் மட்டும் காலை வேளையில் வெறும் வயிற்றில் நடைபயிற்சி செய்யலாம். இவர்களும் தங்களது மொத்த நடைப்பயிற்சி தூரத்தில் 20 சதவீதம் குறைத்துக் கொள்வது நலம்.
மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, நீரழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த காலகட்டத்தில் வெறும் வயிற்றில் நடைப்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும். இவர்கள் நீர்ச்சத்து குறைபாட்டால் எளிதில் பாதிக்க வாய்ப்புகள் உள்ளது.
நீரழிவு நோயாளிகள் வெப்ப அலைகளில் தங்களது ரத்த சர்க்கரை அளவை இழப்பார்கள். திடீரென்று ரத்தத்தில் சர்க்கரையின் அளவு பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட குறையும்போது தலைசுற்றல், மயக்கம், சோர்வு போன்ற திடீர் உடல்நலக் கோளாறுகளினால் பாதிக்கப்படலாம்.
அதனால், இவற்றில் இருந்து தப்பிக்க, அவர்கள் ஏதேனும் சிறிய அளவில் லேசான உணவுகள் வகைகளை சாப்பிட்ட பின்னர் நடைபயிற்சி செய்யலாம். இவர்கள் காலையில் காபி, தேநீர் போன்ற நீர் சத்துக்களை வற்ற செய்யும் பானங்களை அருந்தாமல், நீர் சத்து மிகுந்த மோர், நீராகாரம், தண்ணீர் போன்றவற்றை அருந்தி விட்டு நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம்.
நீரழிவு மற்றும் இரத்த அழுத்த நோயாளிகள் காலையில் வெறும் வயிற்றில் நடைபயிற்சி மேற்கொள்ள விரும்பினால், அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள் அவர்கள் மேற்கொள்ளலாம். மாலை அல்லது சூரியன் மறைந்த நேரத்தில் நடைப்பயிற்சியினை தொடங்கலாம். இவர்கள் உடல் சோர்வு ஏற்பட தொடங்கும் ஆரம்ப நிலையிலேயே சிறிது நேரம் அமர்ந்து ஓய்வெடுத்தால் உடல் மீண்டும் சமநிலை பெற்றுவிடும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)