பகல் முழுவதும் வேலை செய்துவிட்டுத் தாமதமாக வீடு திரும்பும் பலருக்கும் இரவில் குளித்தால் சளி பிடித்துவிடும் என்ற பயம் எப்போதும் இருக்கும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்தக் கருத்தைப் பரவலாக நம்புகிறார்கள். ஆனால் அறிவியல் இதற்கு நேர்மாறான விளக்கத்தையே தருகிறது. இரவு நேரத்தில் தலைக்குக் குளிப்பதால் யாருக்கும் நேரடியாகச் சளி பிடிப்பதில்லை.
சளி என்பது Rhinovirus போன்ற கிருமிகளால் பரவும் ஒரு தொற்று நோய். வெறும் தண்ணீராலோ அல்லது குளிரான சூழலாலோ மட்டுமே இது தானாக உருவாகாது. இருப்பினும், ஈரமான தலையுடன் தூங்கச் செல்லும்போது சளி பிடித்தது போன்ற உணர்வும், வேறு சில உடல்நலப் பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.
சளி பிடித்தது போன்ற உணர்வு ஏற்படக் காரணம்!
இரவில் மிகவும் குளிர்ந்த நீரில் குளிக்கும்போதோ அல்லது ஈரமான தலையுடன் ஏசி அறையில் தூங்கும்போதோ நமது உடல் வெப்பநிலை சற்று குறையும். இதனால் மூக்குப் பகுதியில் உள்ள இரத்தக் குழாய்கள் சுருங்கிவிடும். இதை வாசோகன்ஸ்ட்ரிக்ஷன் (Vasoconstriction) என்பார்கள். இதன் காரணமாக அந்தப் பகுதியில் நோய் எதிர்ப்புச் சக்தி தற்காலிகமாகக் குறைய வாய்ப்புள்ளது.
ஏற்கனவே சைனஸ் அல்லது ஒவ்வாமை பிரச்சனை உள்ளவர்களுக்குத் தலையில் நீண்ட நேரம் ஈரம் இருப்பது உடனடியாகத் தும்மல், மூக்கடைப்பு மற்றும் தலைபாரத்தைத் தூண்டும். இந்த அறிகுறிகளைப் பார்த்துத்தான் பலரும் சளி பிடித்துவிட்டதாக நினைக்கிறார்கள். மேலும், ஈரமான தலையுடன் குளிரை உணரும்போது உடலில் ஏற்கனவே தங்கியிருக்கும் வைரஸ் கிருமிகள் எளிதில் செயல்படத் தொடங்கலாம்.
ஈரத் தலையுடன் தூங்குவதால் வரும் பாதிப்புகள்!
மருத்துவர்களின் கூற்றுப்படி, சளியை விட பிற பாதிப்புகளே இதனால் அதிகம் ஏற்படுகின்றன. ஈரமான முடியும் தலையணையின் வெப்பமும் சேரும்போது, அங்கு பூஞ்சைகள் வளர்வதற்கு ஏற்ற சூழல் உருவாகிறது. குறிப்பாக மலசீசியா (Malassezia) என்ற பூஞ்சை எளிதில் பரவிப் பொடுகுத் தொல்லை மற்றும் தலையில் அரிப்பை உண்டாக்கும்.
தலையணை உறையிலும் இந்த ஈரப்பதம் தங்கிப் பூஞ்சைத் தொற்று பரவக் காரணமாகலாம். அடுத்ததாக, முடி ஈரமாக இருக்கும்போது அதன் வேர்க்கால்கள் மிகவும் பலவீனமாக இருக்கும். அந்த நிலையில் தலையணையில் தலை வைத்துத் தூங்கிப் புரளும்போது அதிக உராய்வு ஏற்படும். இதனால் தலைமுடி எளிதில் உடைந்து, முடி உதிர்தல் பிரச்சனை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
தவிர்க்க முடியாத நேரங்களில் பின்பற்ற வேண்டியவை!
இரவில் தலைக்குக் குளிப்பதைத் தவிர்க்க முடியாத சூழலில் சில எளிய பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றலாம். Cleveland Clinic மற்றும் Medical News Today போன்ற மருத்துவத் தளங்கள் இதற்குச் சில முக்கிய ஆலோசனைகளை வழங்குகின்றன. தூங்கச் செல்வதற்கு முன்பு சுத்தமான துண்டால் தலையை நன்கு துவட்ட வேண்டும். ஈரத்தை முழுமையாகப் போக்க முடிந்தால் ஹேர் ட்ரையரில் குளிர்ந்த அல்லது மிதமான காற்றைப் பயன்படுத்தித் தலையை உலர்த்திவிடுவது நல்லது.
மிகவும் குளிர்ந்த நீருக்குப் பதிலாக வெதுவெதுப்பான நீரில் குளிப்பது உடல் வெப்பநிலை திடீரெனக் குறைவதைத் தடுக்கும். அதேபோல் ஈரப்பதத்தை உறிஞ்சாத தலையணை உறைகளைப் பயன்படுத்துவது உராய்வைக் குறைத்து முடி உதிர்வைத் தடுக்க உதவும்.
இரவில் குளித்தால் உடனடியாகச் சளி பிடிக்காது என்றாலும், தலையை முழுமையாக உலர்த்தாமல் தூங்குவது முடிக்கும் சருமத்திற்கும் நல்லதல்ல. தொடர்ந்து சைனஸ், ஒவ்வாமை அல்லது தலையில் அரிப்பு போன்ற தொந்தரவுகள் இருந்தால், சுயமாக முடிவு எடுக்காமல் மருத்துவரை அணுகி முறையான ஆலோசனை பெறுவதே பாதுகாப்பானது. இனி இரவு நேரத்தில் தலைக்குக் குளிக்க நேர்ந்தால், தலையை நன்றாக உலர்த்திய பிறகே நிம்மதியாக உறங்கச் செல்லுங்கள்.
Disclaimer: இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.
Reference