
தற்போது சிறு வயது குழந்தைகள் கூட கண்ணாடி அணிவதைப் பார்க்கிறோம். இதற்கு காரணம் மொபைல் போன்கள், தொலைக் காட்சிகள் மற்றும் கணினிகள். இவை குழந்தைகளின் பார்வையைப் பாதிக்கின்றன. ஆனால், 20 வருடங்களுக்கு முன்பு மொபைல் போன் இல்லை; தொலைக்காட்சியும் பரவலாக இல்லை. ஆனால் , அப்போதும் கண்ணாடி அணிந்த சிறுவர்கள் இருந்தனர். இதற்கு காரணம் மரபணு மூலமாக வரும் கண்பார்வை பிரச்சனைகள்தான்.
ஒரு குழந்தையின் பார்வைத் திறன் குறைந்தால், அது அக்குழந்தையின் கல்வியையும் பாதிக்கலாம். குடும்பத்தில் கண்பார்வை குறைபாடு இருந்தால், அது அவர்களின் குழந்தைகளுக்கும் மரபணு மூலம் கடத்தப்படும். ஏனெனில், கண் பார்வையில் மரபணு முக்கிய பங்கு வகிக்கிறது. சில செயல்களை கடைப்பிடிப்பதன் மூலம் உங்கள் குழந்தையின் கண் பார்வையை சரியாக பராமரிக்க முடியும்.
கண் பாதுகாப்பு:
குழந்தைகள் அடிக்கடி கண்களைத் தொடுவதும் தேய்ப்பதுமாக இருப்பார்கள். இது கண் தொற்று மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். கண்களை தேய்ப்பதால் தூசி மற்றும் கிருமிகள் பரவக்கூடும்.
கண்களைத் தொடுவதற்கு முன்பு கைகளை சரியாகக் கழுவ வேண்டும். சுத்தமான துண்டுகள் மற்றும் டிஷ்யூக்களை பயன்படுத்தி தூசி இருந்தால் எடுக்க வேண்டும். குழந்தைகள் கண்ணாடி அணிந்தால் அவற்றை அடிக்கடி சுத்தம் செய்ய அறிவுறுத்துங்கள். எப்போதும் UV பாதுகாப்பை வழங்கும் சன்கிளாஸ்கள் பயன்படுத்துவது நல்லது. இது புற ஊதா கதிர்களிலிருந்து கண்களைப் பாதுகாக்கும்.
பார்வையை பலப்படுத்தும் உணவுகள்:
வைட்டமின்கள் ஏ, சி, ஈ, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், லுடீன் மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச் சத்துக்கள் கண் பார்வைக்கு முக்கியம். தினசரி உங்கள் குழந்தையின் உணவில் கேரட் மற்றும் கீரையைச் சேர்க்கவும். இவற்றில் வைட்டமின் ஏ உள்ளது; இது பார்வையை மேம்படுத்துகிறது.
சிட்ரஸ் பழங்கள், குடை மிளகாய் மற்றும் ஸ்ட்ராபெர்ரிகளில் வைட்டமின் சி உள்ளது; இது கண்களில் உள்ள இரத்த நாளங்களை வலுப்படுத்த உதவுகிறது. மீன், முட்டை , பால் ஆகியவை கண் பார்வையை மேம்படுத்தும்.
டிஜிட்டல் சாதனங்கள் தவிர்ப்பு:
குழந்தைகளுக்கு மொபைல் போன்களை பயன்படுத்தத் தராதீர்கள். அவர்களை வெளியில் விளையாட விடுங்கள். இதன் மூலம் இரத்த ஓட்டம் அதிகரித்து பார்வை நரம்புகள் தெளிவு பெறும்.
கண் பயிற்சிகள்:
மருத்துவர் பரிந்துரைக்கும் கண் பயிற்சிகளை தினமும் செய்வதால் பார்வை பலப்படும். கண்களை மேலும் கீழுமாக பார்த்தல், கண்களை சுழற்றுதல், பொருட்களை கூர்மையாக பார்த்து பயிற்சி செய்தல், கண்களை மூடி தியானித்தல், உள்ளங்கையில் விரலை தேய்த்து சூடேற்றி அதை இமைகளில் வைத்தல் போன்ற பயிற்சிகளை செய்யுங்கள். இந்த நுட்பங்களை நீங்கள் தினமும் பயிற்சி செய்வதன் மூலம் கண் பார்வையைப் பராமரிக்கலாம்.
கண் பரிசோதனைகள்:
ஆரம்பத்திலேயே பார்வை சார் பிரச்சினைகளை கண்டறிந்தால் எதிர்காலத்தில் கடுமையான பிரச்சினைகளைத் தடுக்க முடியும். இதன் மூலம் ஆரம்ப நிலையிலேயே கண் பார்வை பிரச்சனைகளை சரி செய்ய முடியும். குழந்தை பிறந்த ஆறு மாத காலத்தில் இருந்தே கண் பார்வை சோதனைகளை செய்து கொள்ள வேண்டும். வருடத்தில் இரு முறையாவது இந்த சோதனைகளை செய்து கொள்வது நலம்.