
நாம் கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, உருளைக்கிழங்கு, பனங்கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு என பலவகையான கிழங்குகளைப் பற்றி அறிந்திருக்கிறோம். இவற்றை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்ளுகிறோம். நம்மில் பலர் கிழங்குகளைக் கண்டாலே பயப்படுவார்கள். உருளைக்கிழங்கு என்றால் அய்யய்யோ வேண்டவே வேண்டாம் என்று ஓடுபவர்களும் உள்ளனர். சிறுகிழங்கு என்ற ஒரு கிழங்கு உள்ளது நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. நாம் இந்த பதிவில் சிறுகிழங்கைப் பற்றியும் அதன் மருத்துவ குணங்களைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
சிறுகிழங்கு என்பது உருளைக்கிழங்கு வகையைச் சார்ந்த ஒரு கிழங்கு. உருளைக்கிழங்கை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோமோ அப்படியே இதையும் சமைத்து சாப்பிடலாம். சிறுகிழங்கு 'சைனீஸ் பொட்டேட்டோ' அதாவது 'சீன உருளைக்கிழங்கு' என்றும் அழைக்கப்படுகிறது.
அண்டை மாநிலமான கேரளாவில் அதிகளவில் சிறுகிழங்கு பயன்படுத்தப்படுகிறது. கேரள மாநிலத்தில் சிறுகிழங்கு 'கூர்க்கன் கிழங்கு' என்று அழைக்கப்படுகிறது.
திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் புதிதாகத் திருமணமானவர்களுக்கு அளிக்கப்படும் பொங்கல் சீர்வரிசைப் பொருட்களுடன் சிறுகிழங்கும் கட்டாயம் இடம்பெறும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது.
சிறுகிழங்கு ஆறு மாதத்தில் நல்ல பலனைத் தரும் ஒரு பணப் பயிராகும். சிறுகிழங்கினைப் பயிரிட ஈரத்தன்மை வாய்ந்த நிலப்பகுதியோடு அதிக தண்ணீர் வசதியும் தேவை. இதனால் சிறுகிழங்கினை குளிர்காலங்களில் மட்டுமே பயிரிடுகிறார்கள். குறைவான அளவே பயிரிடப்படுவதால் இதன் தேவை அதிகளவில் உள்ளது. இதனால் விலையும் சற்று அதிகமாகவே உள்ளது. ஆலங்குளம், கடையம், அம்பாசமுத்திரம் பகுதிகளில் சிறுகிழங்கு அதிகளவில் பயிரிடப்படுகிறது. பொதுவாக கார்த்திகை, மார்கழி மற்றும் தை மாதங்களில் அறுவடை செய்யப்படுகிறது.
சிறுகிழங்கு பல மருத்துவ குணங்களைக் கொண்டது. சிறுகிழங்கில் உருளைக்கிழங்கை விட இரண்டு மடங்கு புரதச்சத்து அதிகம் உள்ளது. சிறுகிழங்கு கலோரி குறைவான ஒரு உணவாகும். இது எடையை நிர்வகிக்க விரும்புவோருக்கு இது ஒரு நல்ல தேர்வாக அமைகிறது. மேலும் இதில் கால்சியம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் பி 6, பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் இரும்புசத்து முதலான ஆரோக்கியத்திற்கு அவசியமான சத்துக்கள் உள்ளன.
சிறுகிழங்கில் உள்ள பொட்டாசியம் இரத்த உறைதலை சரி செய்கிறது. மேலும் இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது என்றும் கூறப்படுகிறது. சிறுகிழங்கில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க உதவுகின்றன.
சிறுகிழங்கில் உள்ள நார்ச்சத்தானது செரிமானத்தை ஊக்குவித்து மலச்சிக்கலைத் தடுக்கும் தன்மை கொண்டது. குடல் செயல்பாட்டை முறைப்படுத்தவும் இரைப்பை மற்றும் குடல் பிரச்சினைகளின் அபாயத்தைக் குறைக்கவும் சிறுகிழங்கு உதவுகிறது. சிறு கிழங்கில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இதை உணவில் அவ்வப்போது சேர்ப்பதன் மூலம் இதய நோய் அபாயத்தைக் குறைக்கலாம்.
சிறுகிழங்குகளின் அதிக மருத்துவப் பயன்களின் காரணமாக இவை அரபு நாடுகள், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
உருளைக்கிழங்கைப் போல சுவை அதிகம் கொண்ட சிறுகிழங்கினை அதன் மருத்துவப்பலன்களைக் கருத்தில் கொண்டு நீங்கள் கட்டாயமாக உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் உடல் ஆரோக்கியமாகத் திகழும்.