
மனிதன் நெருப்பை கண்டறியும் முன் காடுகளில் கிடைத்த பழங்கள், கிழங்குகளை உண்டு உயிர் வாழ்ந்து வலிமையான உடலுடன் இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது உலகின் பல நாடுகளிலும் மனிதர்கள் அதேபோன்ற ஒரு உணவு முறைக்கு திரும்பி இருக்கின்றனர். இதனை ‘மைக்ரோ கிரீன்ஸ்’ மற்றும் ‘சூப்பர் புட்’ என அழைக்கின்றனர்.
இதில் மைக்ரோகிரீன் என்பது பல்வேறு வகையான காய்கறிகள் மற்றும் மூலிகை தாவரங்களின் விதைகளை முளைப்பு செய்த நிலையில் உருவாகும் மென்மையான உண்ணக்கூடிய கீரைகள் ஆகும். மைக்ரோ கிரீன் முறையில் முளைக்க வைக்கப்படும் கீரைகள் பெரும்பாலும் இருட்டில் தண்ணீரில் ஊற வைக்கப்பட்ட விதைகள் முளைப்பது மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன. முளைத்து வரும் தளிர் இலைகள் உணவாக பயன்படுகிறது. மைக்ரோகிரீன்ஸ் என்பது காய்கறிகள் மற்றும் மூலிகைகளின் விதைகளிலிருந்து முளைத்த இளம் தளிர்கள் ஆகும். இவை முழுமையாக வளர்ந்த கீரைகள் அல்லது முளைகளுக்கு இடையில் உள்ள ஒரு நிலையாகும். விதைகளில் இருந்து முளைத்ததும், அது ஒரு தளிராக வளர ஆரம்பிக்கும்.
1-2 இன்ச் அளவில் வளர்ந்ததும் மைக்ரோகிரீன்ஸ் என்று அழைக்கப்படும். மைக்ரோகிரீன்ஸை வீட்டில் அல்லது சிறிய இடத்தில் கூட எளிதாக விளைவிக்கலாம். 15 நாட்களில் விரல் சைஸிற்கு மைக்ரோ கிரீன்ஸ் வளர்ந்துவிடும். மண்ணிற்கு மேல் தண்டு பகுதியில் இருந்து வெட்டி எடுத்து மைக்ரோ கிரீன்ஸை பச்சையாவும் நீங்கள் சாப்பிடலாம்.
ஒரு விதை முளைக்கும் போது உருவாகும் தளிர் இலையில் ஏராளமான நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, அத்தியாவசிய தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் நுண் சத்துக்கள் இருக்கின்றன மேலும் இது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது.
மைக்ரோகிரீன்ஸ் சாலட், சமைத்த உணவுகள், சாண்ட்விச்கள் போன்ற பல உணவுகளில் சேர்க்கலாம். இதனை சமைக்காமல் பச்சையாக உண்ணும் போது இந்த சத்துக்கள் முழுமையாக உடலில் சேர்ந்து உடலை வலுப்படுத்துகிறது என கூறப்படுகிறது. இதனால் தற்போது மைக்ரோ கிரீன் பயிர் வளர்ப்பு மிகவும் பிரபலமாகி வருகிறது.
பொதுவாக, மைக்ரோ கிரீன் தளிர் உற்பத்திக்கு குறிப்பிட்ட வகை காய்கறிகள் தான் உதவுகின்றன. காய்கறி இனங்களில் முள்ளங்கி, காலிபிளவர், முட்டைக்கோஸ், பீட்ரூட், கேரட், வெங்காயம் மற்றும் வெள்ளரி ஆகியவையும் அடங்கும்.
தானியங்களில் பார்லி, ஓட்ஸ், கோதுமை, சோளம் போன்றவையும், பயறுகளில் கொண்டைக்கடலை மற்றும் வெந்தயம் போன்றவையும் பயன்படுகின்றன. அதேவேளையில் தக்காளி, மிளகு, கத்தரிக்காய், உருளைக்கிழங்கு போன்ற சில காய்கறி, பயிர்கள் மைக்ரோ கிரீன்ஸ்களை உற்பத்தி செய்ய ஏற்றவை அல்ல. இந்த மைக்ரோ கிரீன் முறை சிறிய இடத்தில் சத்தான, செலவில்லாத உணவு விளைவிக்கும் வேளாண்மை நுட்பமாக பரவி வருகிறது.