நாம் நம் உடல் ஆரோக்கியதிற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே அளவு முக்கியத்துவத்தை நம் தலைமுடி மற்றும் சரும ஆரோக்கியத்திற்கும் கொடுக்கத் தவறுவதில்லை.
இருந்தபோதும் முடி வளர்ச்சியில் நமக்கு திருப்தி உண்டாவதில்லை. சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்திய ஆயுர்வேதம் உடல் நலப் பிரச்சினைகளுக்கு மருத்துவ சிகிச்சை முறைகளை கற்றுக்கொடுத்து வருவது கண்கூடு. முடிப் பிரச்சினை தீர, ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் சில வாழ்வியல் முறைகள் மற்றும் இயற்கை வகை எண்ணெய்களை, உடல், மனம் மற்றும் ஆன்மா இவை மூன்றும் ஒருங்கிணைந்து பின்பற்றும்போது முடி ஆரோக்கியம் எந்தவித குறைபாடுமின்றி செழித்தோங்கும். முடிக்கு எண்ணெய் தேய்க்கும் முறை மற்றும் அதிலிருந்து கிடைக்கும் நன்மைகள் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
முடியில் எண்ணெய் தேய்ப்பதென்பது நமது பாரம்பரிய வழக்கங்களில் ஒன்று. முதலில் கை நிறைய எண்ணெய் ஊற்றி, அதை உச்சந்தலையிலும் முடியிலும் தடவி, பின் ஸ்கேல்ப் பகுதி முழுவதையும் நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இதனால் எண்ணெய், முடியின் வேர்க்கால்கள் வரை ஊடுருவிச் சென்று முடி இழைகள் முழு ஆரோக்கியம் பெற்று வளர்வதற்கு உதவி புரியும். வேர்க்கால்களுக்கு அருகே உள்ள நுண்ணறைகள் ஊட்டச் சத்துக்களையும் நீர்ச் சத்தையும் குறைவின்றிப் பெற்று, முடி இழைகள் வறட்சியுற்று சிக்கலாவதைத் தடுத்து நிறுத்தும். ஸ்கேல்ப் பகுதி சீரான இரத்த ஓட்டம் பெறும்.
வேர்க் கால்கள் வலுப்பெற்று, முடி உதிர்வதும், உடைவதும் தடுக்கப்படும். தலையின் சருமப் பகுதி முழுதும் எண்ணெயால் மசாஜ் செய்யும்பொழுது, அங்குள்ள பொடுகுகள் நீங்கிவிடும்.
மேலும் வீக்கங்களும் குறையும். ஸ்கேல்ப் பகுதி நன்கு தளர்வுற்று, முடி ஆரோக்கியமாக வளர்வதற்கான சூழல் உருவாகும். இயற்கை முறையில் தயாரிக்கப்படும் எண்ணெய் உபயோகிப்பதால் முடி பளபளப்புப் பெறும்.
முடியின் தோற்றம் சிறப்பாகும்போது ஒட்டு மொத்த உடல் தோற்றமும் சிறப்படையும். ஸ்கேல்ப் பகுதிக்கு எண்ணெய் மசாஜ் கொடுக்கும்போது சருமம் தளர்வுற்று, மன அழுத்தம், தலைவலி மற்றும் டென்ஷன் போன்ற கோளாறுகளிலிருந்து உடல் விடுதலை பெறும். இந்து மதத்தில், பெண்கள் வெள்ளிக்கிழமையும், ஆண்கள் சனிக்கிழமையும், தீபாவளி, திருமணம் போன்ற நாட்களில் தவறாமல் தலைக்கு, எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்ற கோட்பாடு தலைமுடி மற்றும் ஸ்கேல்ப் பகுதி ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு மட்டுமல்ல, தலையில் உள்ள 'கிரௌன் சக்ரா' வின் சக்தியை அதிகரிக்கவும் உதவும் என்று கூறப்படுகிறது.
இஸ்லாம் மதத்தில் வெள்ளிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஒருவர் பிரார்த்தனை செய்ய ஆரம்பிக்கும் முன் தன்னைத்தானே முழுவதுமாக சுத்தப்படுத்திக் கொள்வதற்கு என அர்த்தமாகிறது.
இவ்வாறு பல வகைகளில் நன்மை தரக் கூடிய தலைக்கு தாராளமாக எண்ணெய் தேய்ப்பது மற்றும் ஆயில் பாத் எடுத்துக்கொள்ளும் பாரம்பரிய முறைகளை அனைவரும் பின்பற்றி ஆரோக்கியம் பெறுவோம்.