
மனித உடல் எடையைத் தாங்குவதற்கு முதுகு அச்சாணியாக இருக்கிறது. அதிக எடையுள்ள பொருட்களை முதுகில் தூக்குதல், விளையாட்டு, சுமையான புத்தகப்பையை தோள் பட்டையில் தொங்க விடுதல், உடற் பருமன், அதிக நேரம் ஒரே இடத்தில் நிற்பது, உட்காருவது, தவறான நிலையில் உட்காருவது, நடப்பது, அல்லது படுத்தல், கூன் வளைந்து உட்காருதல் போன்ற காரணங்களால் முதுகு வலி வருவதுண்டு.
முதுகு வலியை தவிர்ப்பது எப்படி?
1. வெறும் தரையில் மல்லாக்காப் படுத்து, முழங்கால் மூட்டுகளைச் சற்று மடக்கி, கால்களுக்கு அடியில் தலையணை வைத்து, பாதங்களைச் சற்று உயர்த்தி வைத்து ஓய்வெடுக்கவும்.
2. அதிக எடைக் கொண்ட பொருட்களை இழுப்பது, தள்ளுவது, தூக்குவது கூடாது.
3. ஐஸ் கட்டியை ஒரு துணியில் சுற்றிக்கொண்டு, அதை வைத்து வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்கலாம்.
4. ஒவ்வொரு முறையும் 15 நிமிடங்களுக்குக் குறையாமல் ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுக்கலாம். இப்படி 3 மணி நேரத்திற்கு ஒருமுறை இரண்டு நாட்களுக்கு கொடுக்கலாம்.
5. வலி நிவாரணி மாத்திரைகளை சாப்பிடலாம் மருத்துவர்களின் ஆலோசனையோடு.
6. ’டைக்ளோஃபினாக்’ போன்ற வலி நிவாரணிக் களிம்பை வலி உள்ள இடத்தில் தடவி வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம்.
7. முதுகு வலி குறைந்த பின்னர், முதுகு தசைகளுக்கு வலு சேர்க்கும் உடற்பயிற்சிகளை செய்யலாம்.
8. முறையான யோகாசனப் பயிற்சிகளும் செய்யலாம்.
9. முதுகு வலி நீடிக்குமானால் மருத்துவர் உதவியை நாடுவது அவசியம்.
10. முதுகு பிடிப்பை நாமே எடுக்க முயல வேண்டாம். முதுகு பிடிப்பைத் தவறாக எடுத்து விடும் போது கால் நரம்புகள் பாதிக்கப்பட்டு நடப்பதில் சிரமம் உண்டாகும்.
முதுகு வலிக்கு முதலுதவி
1. நீண்ட நேரம் நிற்கும் படி நேர்ந்தால், அவ்வப்போது சிறு நாற்காலியின் மீது ஒரு கால் மாற்றி ஒரு காலை வைத்து கால்களுக்கு ஓய்வு தர வேண்டும்.
2. நீண்ட நேரம் பயன்படுத்தும் நாற்காலி பயன்படுத்துபவரின் கீழ் முதுகு வளைவுக்கு ஆதரவு அளிப்பதாக இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால், கீழ் முதுகுக்கு ஒரு தலையணை வைத்துக் கொள்ளலாம்.
3. அளவுக்கு அதிகமாக எடையுள்ள சுமைகளை தூக்க வேண்டாம்.
4. உயரமான காலணிகளை அணிய வேண்டாம்.
5. உடற்பருமன் உள்ளவர்கள் உடல் எடையைக் குறைக்க வேண்டும்.
6. விளையாடும் போது பாதுகாப்பாக விளையாடலாம்.
7. வலிக்கேற்ற அளவிற்கு நடைமுறை மாற்றங்களை (Lifestyle changes) செய்ய வேண்டும். நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்வதை தவிர்க்க வேண்டும்.
8. சரியான மெத்தையும் உடற் கூறிற்கேற்ற தலையணையும் (Pillow, Mattress) பயன்படுத்த வேண்டும்.
சுமைகளை தூக்கும் போது கவனிக்க வேண்டியவை:
1. அதிக எடையுள்ள சுமைகளை தூக்க வேண்டாம்.
2. சுமைகளை இழுப்பதற்கு பதிலாக தள்ளலாம்.
3. முழங்கால்களை மடித்துக் கொண்டு உடலை முடிந்தவரை தூக்க வேண்டிய சுமைக்கு அருகே வைத்துக் கொண்டு, முதுகை நேராக வைத்து சுமையை கைகளால் உடலுக்கு எடுத்து வயிற்றோடு அணைந்த நிலையில் வயிற்று தசைகளை பயன்படுத்தி தூங்கலாம்.
4. சுமையை வைத்துள்ளபோது, இடுப்பை வளைத்து உடலை திருப்ப வேண்டாம். கால்களைத் திருப்பி உடலோடு திருப்பலாம்.
5. அதிக எடையுள்ள பொருட்களை இடுப்புக்கு மேல் தூக்க முயல வேண்டாம்.
இயற்கை முறையில் ஓய்வு எடுத்து கொள்ளலாம். கடுமையான வேலைகளை தவிர்க்கவும். ஆனால், உடலை முற்றிலும் செயலற்ற நிலையில் வைக்க வேண்டாம்.