நமது உடலுக்கு புரோட்டின் சத்து மிகவும் முக்கியமானதாகும். புரோட்டின் உடலில் அமினோ அமிலங்களை உருவாக்கி, எலும்புகள் மற்றும் தசைகளை வலுவடைய உதவுகிறது. மேலும் புரோட்டின் உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குவதால், தினசரி தேவையான அளவு புரோட்டின் நாம் உட்கொள்ள வேண்டும்.
ஆனால் என்னதான் புரோட்டின் நமக்கு பல நன்மைகள் செய்தாலும் அதை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் உடலில் புரோட்டின் சத்து அதிகமாகி, ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தும். உங்களுடைய உடல் எடை எவ்வளவு இருக்கிறதோ அதற்கு தகுந்தாற்போல உங்களின் தினசரி புரோட்டின் அளவு நிர்ணயம் செய்யப்படும். அதாவது சராசரியாக ஒரு கிலோவுக்கு ஒரு கிராம் புரோட்டின் வீதம் தினசரி எடுத்துக் கொள்வது நல்லது. இந்த பதிவில், அதிக அளவில் புரோட்டின் உட்கொண்டால் எதுபோன்ற பாதிப்புகள் வரும் எனத் தெரிந்து கொள்ளலாம்.
உடற்பருமன்: ஒருவர் அளவுக்கு அதிகமாக புரோட்டினை உட்கொள்ளும் போது அது உடல் எடை அதிகரிக்க வழி வகுக்கிறது. அதிகமாக புரோடின் எடுத்தால் உடலில் கொழுப்புகள் தேங்கி உடல் எடையைக் கூட்டிவிடும்.
புற்றுநோய் அபாயம்: அதிக அளவு புரோட்டின் எடுத்துக் கொள்வதில் ஏற்படும் பாதிப்புகளில், புற்றுநோய் அபாயமும் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக பதப்படுத்தப்பட்ட இறைச்சி அதிகப்படியான மாட்டு இறைச்சி போன்றவற்றை உட்கொள்ளும்போது மார்பகம், குடல், ப்ரோஸ்டேட் புற்றுநோய் அபாயம் அதிகரிப்பதாகக் கூறுகின்றனர்.
சிறுநீரக பாதிப்பு: உடலில் அதிக அளவு புரோட்டின் சத்து இருந்தால், அது சிறுநீரகத்திற்கு அழுத்தத்தைக் கொடுத்து, சேதத்தை ஏற்படுத்தலாம். ஏனெனில் இதில் அதிக புரோட்டினால் உருவாகும் அமினோ அமிலங்களில் நைட்ரஜன் அதிகம் காணப்படுவதால், நைட்ரஜனை வெளியேற்ற சிறுநீரகங்கள் கடுமையாக வேலை செய்யும் போது சிறுநீரக சேதம் ஏற்படலாம்.
வயிற்றுப்போக்கு: அதிகமாக புரோட்டின் சத்து உட்கொண்டால் அது கடுமையான வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். எனவே இதைத் தவிர்க்க புரோட்டின் சத்து மிகுந்த உணவுகளை சாப்பிடும்போது அதிகம் தண்ணீர் பருகுங்கள்.
இதய நோய்: நீங்கள் எதுபோன்ற ப்ரோட்டின் உணவுகளை எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்து இதயம் பாதிக்குமா? பாதிக்காத? என்பதை நாம் வகைப்பிரிக்க முடியும். தாவர வகை புரோட்டீன்களான விதைகள், நடஸ், மீன் போன்றவை நம் இதயத்திற்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்தும் வேளையில், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, மாட்டு இறைச்சி போன்றவை உடலில் கொலஸ்ட்ராலை அதிகரித்து இதய பாதிப்புகளை அதிகரிக்கும்.
எனவே, உடலுக்கு நல்லது என நினைக்கும் புரோட்டினை அதிகமாக உட்கொண்டாலும் உடலுக்கு பாதிப்புகள் ஏற்படும். எனவே தினசரி உடலுக்குத் தேவையான அளவு புரோட்டின் எடுத்துக்கொண்டு ஆரோக்கியமாக இருங்கள்.