
குடல் அடைப்பு (Bowel obstruction) என்றால் என்ன?
குடல் அடைப்பு என்பது சிறுகுடல் அல்லது பெரிய குடலில் உணவு, திரவங்கள் மற்றும் கழிவுகள் செல்வதை தடுக்கும் ஒரு நிலை. இது பகுதி அல்லது முழுமையானதாக இருக்கலாம்.
குடல் அடைப்பு வகைகள்:
குடல் அடைப்பு என்பது முழு அடைப்பு, பகுதி அடைப்பு, போலி அடைப்பு (குடலில் எந்த அடைப்பும் இல்லாமல், குடலின் இயக்கம் தடைபடுவதால் ஏற்படும் அறிகுறிகள்) என்பதாகும். சிறு குடல் அடைப்பு, பெருங்குடல் அடைப்பு என்பதை பொதுவாக காணப்படும். இதில் பெருங்குடல் அடைப்புகள் பொதுவாக அரிதானவை. ஆனால் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களிடையே குடல் அடைப்பு அறிகுறிகள் பொதுவாக தென்படுகின்றன.
குடல் அடைப்பின் முக்கிய அறிகுறிகள்:
கடுமையான வயிற்று வலி, உணவு செரிமானம் மற்றும் கழிவுகள் வெளியேறாததால் குமட்டல், வாந்தி, பசியின்மை, வயிற்று வீக்கம் அதாவது வயிறு வீங்கி கடினமாக உணரலாம்.
குடல் வழியாக கழிவுகள் வெளியேறாததால் வாயு மற்றும் மலம் வெளியேறாமல் மலச்சிக்கல் போன்றவை ஏற்படும். காய்ச்சல், தொற்று ஏற்பட்டு இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.
இது செரிமான அமைப்பின் மூலம் உணவு அல்லது திரவத்தின் ஓட்டத்தை தடுக்கும் ஒரு மருத்துவ அவசர நிலையாகும். இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டியது அவசியம்.
காரணங்கள்:
வயிற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு குடலில் வடு திசுக்கள் உருவாகி அடைப்பை ஏற்படுத்தலாம்.
குடலின் ஒரு பகுதி பலவீனமான தசை வழியாக வெளியே வரும் போது (குடலிறக்கம்) அடைப்பு ஏற்படும்.
குடல் புற்றுநோய் கட்டிகள் குடலின் உள்பகுதியை அடைக்கலாம்.
க்ரோன் நோய் மற்றும் பிற அழற்சி நோய்கள் காரணமாக ஏற்படலாம்.
குடல் செருகல் (Intussusception) எனப்படும் குடலின் ஒரு பகுதி அதற்கு அருகில் உள்ள குடல் பகுதியுடன் மடிந்து இணையும் நிலை ஏற்பட்டாலோ, சில மருந்துகள் குடல் இயக்கத்தை பாதித்தாலோ அடைப்பு ஏற்படலாம்.
தீர்வுகள்:
குடலுக்கு ஓய்வு கொடுங்கள்:
கம்மியா சாப்பிட்டாலே தூக்கம் வரமாட்டேங்குது இதுல அரை பட்டினி, கால் பட்டினி இருந்தால் எப்படி தூக்கம் வரும் என்று அங்கலாய்க்க வேண்டாம்.
குடலுக்கு ஓய்வு கொடுப்பது என்பது சில சமயங்களில் மருத்துவ சிகிச்சையின் ஒரு பகுதியாக இருக்கும். குறிப்பாக குடல் அடைப்பு அல்லது க்ரோன் நோய் போன்ற நிலைகளில் இதற்கு வாய் வழியாக எதுவும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. முடியவில்லை என்றால் திரவ உணவுகள் மட்டும் எடுத்துக் கொள்ளலாம். எனினும் ஒரு மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இதை செய்யக்கூடாது.
எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட் போன்ற பரிசோதனைகள் மூலம் அடைப்பிற்கான காரணத்தைக் கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்படும்.
குடல் அடைப்புக்கு பெரும்பாலும் மருத்துவமனையில் அனுமதி தேவைப்படும். அடைப்பு உள்ள நோயாளிகளுக்கு, குழாய்கள் மூலம் திரவங்களை செலுத்தி அறிகுறிகளை தணிக்க செய்வார்கள்.
தீவிரமான சந்தர்ப்பங்களில் அடைப்பை நீக்குவதற்கு அறுவை சிகிச்சை தேவைப்படலாம். திசு இறப்பு அல்லது துளைகள் போன்ற சிக்கல்கள் ஏற்பட்டால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்படும்.