நல்ல ஆரோக்கியத்தை பெறுவதற்கு தூக்கம் மிகவும் அவசியம். உடல் நலக் கோளாறுகள் மற்றும் தொந்தரவுகள் நம் தூக்கத்தின் கால அளவையும் ஆழத்தையும் பாதிக்கலாம்.
துயில்வாதம் என்பது:
துயில்வாதம் (Sleep paralysis), அதாவது தூக்க வாதம் என்பது நாம் தூங்கி எழ முயற்சிக்கும் பொழுதோ அல்லது தூங்குவதற்கு முற்படும்பொழுதோ, நம் உடல் அசையாமல் இருப்பது போன்ற ஒரு நிலையாகும். இந்த தற்காலிக அசையாமை, விழித்திருப்பதற்கும் ஓய்விற்கும் இடையிலான ஒரு மாற்றத்தின் போது ஏற்படுகிறது. இந்த நிலை பொதுவாக சில நொடிகள் முதல் சில நிமிடங்கள் வரை மட்டுமே நீடிக்கும். மேலும் இது ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் ஒரு முறையேனும் அனுபவிக்கும் ஒரு பொதுவான நிகழ்வாகும்.
துயில் வாதத்தின் அறிகுறிகள்:
தற்காலிக முடக்கம்:
தூக்கத்திலிருந்து விழித்தெழும்பொழுது, நம் தசைகளை அசைக்க முடியாமல் போவது. இது பொதுவாக ஒரு தற்காலிகமான மற்றும் பாதிப்பில்லாத நிலையாகும்.
இதில் மனம் விழித்திருக்கும். ஆனால் உடலை அசைக்க முடியாது. கைகள், கால்கள் அல்லது முழு உடலையும் நகர்த்த இயலாமையை உருவாக்குகிறது. இது மிகப் குறுகிய காலமே நீடிக்கும்.
தூக்க முடக்கத்தின் பொழுது அறையில் யாரோ ஒருவர் இருப்பது போன்ற மாயத் தோற்ற உணர்வைப் பெறுவது. அல்லது மார்பில் ஏதோ அழுத்துவது அல்லது மூச்சு திணறச் செய்வது போன்ற உணர்வு ஏற்படுவது.
ஏற்படுவதற்கான காரணங்கள்:
ஒழுங்கற்ற தூக்கமுறைகள் துயில் வாதத்திற்கு காரணமாகின்றன. தேவையான அளவு தூங்காமல் இருப்பது. அதாவது போதுமான தூக்கமின்மை இந்த நிலையை ஏற்படுத்தும்.
சில உளவியல் நோய்கள், இரவில் ஏற்படும் தசைகள் சுருக்கும் நோய், சில மருந்துகளின் பக்க விளைவுகள், மது அல்லது போதை பொருள் எடுத்துக்கொள்வது போன்ற பல காரணங்களாலும் ஏற்படலாம்.
மன அழுத்தம் மற்றும் பதட்டமான மனநிலைகள் துயில் வாதத்தைத் தூண்டும். சில தூக்க மாத்திரைகள் அல்லது மருந்துகளின் பக்க விளைவுகள் காரணமாக ஏற்படலாம். சில சமயங்களில் மரபணு காரணிகளும் காரணமாக இருக்கலாம்.
தூக்கப் பழக்கத்தை மேம்படுத்துவதற்கான சில வழிகள்:
தூக்க முறையை சீராக்கி தினமும் ஒரே நேரத்தில் தூங்கவும், எழவும் முயற்சிக்கவும். காபி மற்றும் காஃபின் கொண்ட பானங்களை குறைப்பதும், மாலையில் அவற்றை முற்றிலுமாக தவிர்ப்பதும் நல்லது. படுக்க செல்வதற்கு முன்பு புகை பிடிப்பதோ, மது அருந்துவதோ வேண்டாம். படுக்கைக்கு செல்வதற்கு முன்பு மன அழுத்தத்தை குறைத்து நிதானமான, அமைதியான சூழலை உருவாக்குவது சிறந்த பலனளிக்கும்.
எப்போது மருத்துவர் ஆலோசனை தேவை?
தூக்கவாதத்தை முழுமையாக தடுக்க முடியாது என்றாலும், ஒரு ஆரோக்கியமான மற்றும் வழக்கமான தூக்க அட்டவணையை பின்பற்றுவது, மன அழுத்தத்தை குறைப்பது, தூக்கமின்மையை நிர்வகிப்பது போன்ற முறைகளை மேற்கொள்வதன் மூலம் இந்த நிலையை சமாளிக்கலாம். முறையான தூக்கம், காற்றோட்டமிக்க அறை, வசதியான நிலையில் படுக்கை போன்றவற்றால் இந்த துயில் வாதம் வராமல் தடுக்கலாம்.
எப்போதாவது ஒருமுறை தூக்கம் வரும் நிலையில் அல்லது தூங்கி எழும்போது இப்படி ஏற்பட்டால் அதைப் பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை. மாறாக இந்த மாதிரி அடிக்கடி ஏற்படுவது குறித்த கவலையிருந்தாலும், பகல் நேரத்தில் அதிக சோர்வு ஏற்பட்டாலோ, இதனால் தூக்கம் பாதிக்கப்பட்டு அன்றாட வாழ்க்கையை பாதித்தாலோ மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)